Wednesday, March 2, 2011

ஓட்டில் ஓர் ஓட்டை !

                             "எஞ்சினியர்" சமீபத்தில் பெருமாளின் பெயரோடு ஒட்டிக்கொண்ட பட்டம். ஒன்றரை மாதத்திற்குப்பின் மூன்று நாள் விடுமுறையில் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தான். ஊருக்கு வந்ததும் அவனது முதல் செயல்  காலை உணவைப் பற்றி கனவு காண்பது தான் (கனவு காண்பதும் ஒரு செயலா என்ன?). வீட்டை அடைந்து காலை கடன்களை முடித்துவிட்டு சாரத்தை (லுங்கி) மடித்துக் கட்டிக் கொண்டு ஆயத்தமானான்  வடைவேட்டைக்கு. "எம்மா !! வாளிய எடு , நா போய் ரசவடை வாங்கிட்டு வாரே " என்றான். அடுக்களையில் இருந்து அம்மா இரண்டு வாளியுடன் வந்தார். "இதுல உனக்கு ரசவட வாங்கிக்கோ ! இந்த வாளியில அப்பாக்கு ஐயர் கடைல ஒரு சாம்பார்வட வாங்கிரு! " என்றார். வாளிகளை வாங்கிக்கொண்டு நாயர் கடையை நோக்கிப் பயணப்பட்டான் பெருமாள். நாயர் கடையில் வேலை பார்க்கும் ராசா அண்ணன் "என்ன பெருமாளு ! எப்போ வந்த ?" என்று கேட்டவாறே வாளியை பெற்றுக்கொண்டு ரசவடை இரண்டை உள்ளே போட்டு 3 கரண்டி ரசத்தை அதனுள் ஊற்றினார். "இன்னைக்கு தாண்ணே!" என்றுவிட்டு கல்லாவில் இருந்தவரிடம் காசை கொடுத்துவிட்டு, ஐயர்கடையில் சாம்பர்வடையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான்.வழியில் இருந்த ஒரு பாழடைந்த வீடு ஒன்றினை கடக்கும் போது ஏதோ எண்ணியவனாய் நின்றான். மெதுவாய் அவ்வீட்டினுள் நுழைந்தான். உள்ளே ஓர் உடைந்த கட்டில், இரண்டு வளைந்து, நெளிந்த பாத்திரங்கள் மட்டுமே கிடந்தது. தற்போது அவ்வீட்டில் யாரும் வாழ்வதற்கான அறிகுறி ஏதுமில்லை. வெடிப்புகள் நிறைந்த தரையினில் ஒரே ஒரு மஞ்சள் வட்டம். அது பலவருட தனிமையின் வெறுப்பினால் "ஆதவன்" உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒளி வட்டம். அவ்வொளி கடந்து வந்துகொண்டிருக்கும் பாதையை பெருமாள் நோட்டமிட்டான். மேலே ஓட்டில் இருந்த ஓட்டை ஒன்றின் வழியாய் சூரியன் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த ஓட்டின் சிதைவிற்கும் , ஒளி சிதறலுக்கும் கண்டிப்பாக ஓர் வரலாறு இருந்திருக்க வேண்டும். அந்த  ஓட்டையின்  பிறப்பரிக்கையில் பெருமாளின் பெயர் இருப்பதாய் ஓர் நினைவு.
                                                    "ஆமைக்கண்ணன்" அவ்வீட்டில் பலவருடங்களுக்கு முன் குடியிருந்தவரின் பெயர். "ஆமைக்கண்ணன்" அவரது அம்மையப்பன் இட்ட பெயராய் இருக்குமா என்ன ? சுற்றார் இட்ட பெயாராகதான் இருக்கும். மேலும் அப்பெயர் அவரது உருவத்தினால் உண்டானது. பெரும்பாலும் பட்டப்பெயர்கள் அவ்வாறே அமைகின்றன(?). அவரது தலை ஆமையின் தலை போன்றே இருக்கும். இடுப்பில் ஒரு வெள்ளை வேட்டி, தோளில் ஓர் துண்டு அவையே அவரது பிராதான உடை. அவை இரண்டும் தனது வெண்மை தன்மையை விட்டு விலகி பலவருடம் இருக்கும் போலும். ஆமைக்கண்ணனை எண்ணிய கணத்தில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒன்று தான்."வசை மொழி பொழிவதில் அவர் ஒரு வற்றாத ஜீவநதி". கெட்ட வார்த்தைகளின் அகராதி. அவர் திட்டத்தொடங்கினால் முன் நிற்பவரின் "பாட்டன், முப்பாட்டன் " என்று அனைவரின் கண் , காது என்று அத்தனை துளைகளிலும் குருதிபாயும் மட்டும் வசையை வாரி வழங்குவார். இத்தனை வருடங்களில் அவர் யாரிடமும் அமைதியாய், அன்பாய் , பேசியதை பெருமாள் கண்டதில்லை. அவர் எந்த வேலையும் பார்ப்பதாய் தெரியவில்லை
                                                     ஒரு முறை அவரது வீட்டின் எதிரில் இருக்கும் கோவிலில் அமர்ந்து குச்சி ஐஸை உரிந்து சுவைத்துக்கொண்டிருந்தான் பெருமாள். அருகே அக்கோவிலயே வீடாய் கொண்டு வாழ்த்து கொண்டிருக்கும் "நண்டு" ஆச்சி( ஒரு பாட்டி ) . அவரை நோக்கி " ஆச்சி! இந்த ஆமைக்கண்ணனுக்கு யாருமே இல்லையா ? எப்பவும் இப்புடி தனியா இருக்காறே? " என்று வினவினான் பெருமாள். " அதுவா ! அவன் ஒரு வட்டு(பைத்தியம்) கேஸு. அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருந்தா ! ஒரே ராத்திரிதான் இவங்கூட வாழ்த்தா . அடுத்த நாள் ஓடியே போய்டா! அவன் போன ஜெம்மத்துல நெறையா பாவம் பண்ணிருக்கானோ என்னமோ ? அதுதா இந்த ஜெம்மத்துல பல்ல இளிச்சிகிட்டு இருக்கு! " என்றார்.  ஐஸின் மேல் ஆர்வங்கொண்டவனாய் அதனை உரிந்து கொண்டே " அப்புடியா!  ஹ்ம்ம் அப்போ நீயும் போன ஜென்மத்துல எதாச்சும் பண்ணிட்டயா ?  எப்போ பாரு கோவில்லயே கெடக்க ? " என்று கூறியவாறே ஐஸை உரிந்துகொண்டிருந்தான். நண்டு ஆச்சி சிறிது அமைதியாய் பார்த்து விட்டு ஏதும் கூறாமல் போர்வைக்குள் புகுந்து கொண்டார்.
                                                 கிழமை வியாழன் . நேரம் 10 .45 . " அண்ணே ! கிரிக்கெட் வெளையாடுவோமானே? எங்கப்பா எனக்கு புது டென்னிஸ் பால் வாங்கி தந்துருக்கு" என்று ட்ரவுசர் பைக்குள்ளிருந்து புதிய பச்சை நிற பந்தினை எடுத்து பெருமாளிடம் காட்டினாள் கார்த்தி. " சரி போவோம் " என்று தனது பேட்டினை எடுத்துக்கொண்டு சென்றான். சாலையே மைதானம். " அண்ணே ! 1  பிச் கேட்ச் சரியா ?" என்றான் கார்த்தி. "லேய் ! சின்ன பப்பவாலே நீ ! 1  பிட்சா ? ஏன் 2 பிட்ச் வச்சி விளையாடேன் . சும்மா போடுடே பந்த , அடிச்சா சிக்ஸ் , போர் தான் " என்று கூற விளையாட்டு ஆரம்பம். வழக்கம் போல் பெருமாள் பேட்டினை வீசிக்கொண்டே இருந்தான். பந்து பறந்தது ஆமைக்கண்ணன் வீட்டை நோக்கி. கார்த்தி " அண்ணே !" என்று அலறினான். பந்து வீட்டினுள் தஞ்சம் புகுந்தது. கார்த்தி அழத்தொடங்கினான் . "அண்ணே ! நீ தா பந்த வாங்கிதரணு ! எங்கப்பா  ஏசும் (திட்டும் )" என்று கூறி கண்ணைக் கசக்கிக் கொண்டே கதறினான். ஆமைக்கண்ணனின் வீட்டினுள் இதுவரை பலமுறை பந்துகள் பறத்தப்பட்டுள்ளன. பந்துகளுக்கு அது ஒரு வழிப்பாதை, மீண்டு வருதல் இயலாது.  அழுது கொண்டிருக்கும் கார்த்தியிடம் " பொறுடே !  என்னத்துக்கு அழுக இப்போ ? நா போய் கேட்டுட்டு வாரே" என்று குறைந்தபட்ச நம்பிக்கையுடன் அவரின் வீட்டை நோக்கி சென்றான்.  உள்ளே ஆமைக்கண்ணன் பந்தினை கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பெருமாள் வெளியே நின்றவாறே "அண்ணே ! பந்து ?" என்று தொக்கினான்.
" பந்தா ? என்ன மண்ணாங்கட்டிக்குல வீட்டுக்குள்ள அடிக்கே ? "
"தெரியாம அடிச்சிட்டேணே ! இனி வராதுணே  "
"தெரியாம எவளோ தரம்ல அடிப்பே ! ஒங்கப்பனால வீடகட்டி விட்டான் ! இங்கயே அடிச்சிகிட்டு இருக்க ? "
"அண்ணே ! இப்போ பந்த தரபோறீங்களா ? இல்லையா ? " என்றான் பெருமாள் கோபத்துடன்.
"பந்துதானால இந்தா " என்று கூறிய வாறே அருகில் இருந்தா அரிவாளினை எடுத்து பந்தினை இரண்டு துண்டாக்கினார்." இந்தால ! ஒன்ன வந்து , இப்போ ரெண்டா கொண்டு ஓடுல " என்று அவனை நோக்கி தூக்கிவீசினார். அதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி கதறி அழுதான். பந்தினை பொருக்கி கொண்டு வெளியே வந்தான் பெருமாள். " எனக்கு தெரியாது ! நீ தா புது பந்து வாங்கித்தரணும்" என்று கூவினான். புது பந்து வாங்கவேண்டியது தான் வேறு வழியே இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டான் பெருமாள். தனது ட்ரவுசர் பாக்கட்டினை தடவியபடியே உள்ளே இருந்தா காசனை கணக்குப் போட்டான். "ஒரு 10  ரூபாய் நோட்டு, நான்கு 1  ரூபாய் காசுகளும் குலுங்கின. 14  ரூபாய். செய்வதறியாது திணறினான். அவனது மனதில் கீழேயுள்ள விலைப்பட்டியல் பளிச்சிட்டு மறைந்தது.
                      ஆட்டு கால் சூப் -                              ரூ 3
                     ஆட்டு இரத்த பொரியல் -               ரூ 7
                     ஆட்டு குடல் வறுவல் -                  ரூ 7
                     ஆட்டு  ஈரல் ஆயில் ரோஸ்ட்  -  ரூ 10
                  மூன்று வாரங்களாய் சிறிது சிறிதாய் சூப் மற்றும் இரத்த பொரியல் உண்ண பெருமாள் சேர்த்த காசு. இன்று ஒரு மட்டை அடியில் கணநேரத்தில் காணமல் போகபோகிறது. ஏமாற்றம் . ஓர் பந்தும் , ஆமைக்கண்ணனும் அவனது சூப்பிற்கு உளை வைத்ததாகவே உணர்ந்தான். கோபம் உள்ளே கொழுந்து விட்டெரிந்தது என்றாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் "சரிடே ! வா யூசுப் கடைக்கு போவோம் பந்துவாங்க " என்று கார்த்தியை அழைத்துக் கொண்டு விரைந்தான் பெருமாள். போகும் வழியில் சாலை ஓரக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த விலைப்பட்டியலை கண்டதும் மீண்டும் ஒருமுறை மனதில் குமுறினான். யூசுப் கடைக்குள் சென்றதும் கார்த்தி முகத்தில் சிறு மலர்ச்சி. கன்னங்களில் வழிந்து காயிந்து போயிருந்த கண்ணீர் தடத்தினை துடைத்துக்கொண்டான். நேராகப் போய் ஓர் பச்சை நிற டென்னிஸ் பந்தினை எடுத்து பெருமாளிடம் காட்டினான். பெருமாள் அதன் விலையை நோக்கினான். ரூ 10 . கடும் வருத்ததுடன் பாக்கட்டில் இருந்து 10  ரூ எடுத்து அவனிடம் கொடுத்தான். இருவரும் பந்துடன் வெளியே வந்தனர். சிறிது தூரம் சென்றதும் பெருமாள் ஏதோ எண்ணியவனாய் நின்றான் . "என்னணே ?" என்றான் கார்த்தி. " கொஞ்சம் இரு இப்போ வாரே" என்று கூறிவிட்டு மீண்டும் கடைக்குள் சென்றான் . "எண்ணே! 1  ரூவாய்க்கு கலச்சி ( கோலிகுண்டு ) குடுங்கணே " என்றான் பெருமாள். "சின்னதா ? பெருசா டே?" என்றார் கடைக்காரர்.
" சின்னது எவளோ ? பெருசு எவளோ ?"
"சின்னது நாலணா (25  பைசா ) , டொம்மர் (பெரிய கோலிகுண்டு ) அம்பைசா ( 50  பைசா )" என்றார் .
"ஹ்ம்ம் ! ரெண்டு சின்னது . ஒரு டொம்மர் குடுங்க ".
                   மூன்று கோலி குண்டுடன் கடையை விட்டு வெளியேறினான் பெருமாள். அதனைக் கண்ட கார்த்தி " என்னணே கோலிகுண்டு வெளையாட போறோமா?" என்று கேட்க , "கிர்க்கெட்டையும், கலச்சியும் சேத்து வெளையாடுவோம் " என்றான் பெருமாள் பலமாய் சிரித்துக்கொண்டே. "அண்ணே ! டொம்மர் எவளோணே ? என்றான் கார்த்தி. " அம்பைசா" என்றான் பெருமாள் . 
                           இருவரும் ஆமைக்கண்ணனின் வீட்டின் அருகில் மறைவாக ஓர் இடத்தில் போய் நின்றார்கள்.  கோலி குண்டுகளை கார்த்தியிடம் கொடுத்துவிட்டு பெருமாள் பேட்டுடன் நின்றான். " போடுடே சின்ன கலச்சிய" என்றான் பெருமாள். திட்டம் அறியாமல் கோலிகுண்டினை எறிந்தான் கார்த்தி. பெருமாள் மட்டையால் ஓங்கி அடிக்க அது ஆமைக்கண்ணனின் வீட்டு ஓட்டின் கீழிருக்கும் மரக்கட்டையின் பட்டு தெறித்தது. நடந்ததை கண்டு கார்த்தி பதட்டமடைந்தான். " எண்ணே வேண்டாம்ணே ! நா போறே எனக்கு பயமா இருக்கு " என்று பம்மினான். " அதெல்லாம் ஒண்ணு ஆகாது ! அவன் ஒரு இழவும் கிழிக்கமுடியாது ! நீ போடுடே , பந்த ரெண்டாக்குனாம்லா அவன் மண்டைய ரெண்டாக்கம விட கூடாது. நீ டொம்மரப்போடு !" என்றான் பெருமாள். கார்த்தி வீச மீண்டும் ஓங்கி அறைந்தான் . அடித்த அடியில் அது ஆமைக்கண்ணன் வீட்டு ஓட்டினை பொத்துக்கொண்டு வீட்டினுள் புகுந்தது. "எவம்ல" என்று கூவிக்கொண்டே வெளியே வந்தார் ஆமைக்கண்ணன். இருவரும் தெறித்து ஓடினார்கள். பெருமாளின் அங்கமெல்லாம் வாய் முளைத்து சிரிப்பதை போல் ஒரு உணர்வு . ஓட்டை உடைத்தது, ஆமைக்கண்ணனின் மண்டையையே உடைத்ததை போல் பெருமாளுக்கு ஒரு பேரானந்தம்.
                                பின்னொருநாள். மழை பொழிந்துகொண்டிருந்த மாலை நேரம். மழைக்காக கோவிலில் ஒதுங்கினான் பெருமாள். எதிர் இருந்தா ஆமைக்கண்ணனின் வீட்டை நோட்டமிட்டான். வீட்டின் ஒரு கதவு திறந்தநிலையில், உள்ளே கட்டிலில் அமர்ந்துகொண்டு ஆவிபறக்கும் காபியினை ஆரச்செய்து கொண்டிருந்தார் ஆமைக்கண்ணன். வீட்டின் நடுவே ஓர் பாத்திரம். வீட்டினுள் ஓட்டின் வழியாக ஒழுகிக்கொண்டிருந்த நீரினை சேமித்துக் கொண்டிருந்தது. அக்காட்சியினை கண்டதும் பெருமாளுக்கு ஏதோ ஓர் குற்ற உணர்வு .
                இன்றும் அவ்வுடைந்த ஓட்டினைப் பார்க்கும் போது அதே உணர்வு . அவ்வோட்டை இன்றும் அங்கே இருக்கிறதா என்ன ? . வீட்டில் அவர் இல்லை. வீடு வீடாகவே இருக்கிறது . ஓடு ஓடாகவே இருக்கிறது. ஆனால் ஓட்டை மட்டும் ஒளியால் நிறைந்திருக்கிறது . ஒருவித வெளிபடுத்த முடியாத  மனநிலையில் அவ்வீட்டைவிட்டு வெளியேறினான் பெருமாள் கையிலும், மனத்திலும் கனத்துடன. 
Download As PDF

4 comments:

  1. U r really growing.. excellent.. superb..i enjoyed it..

    ReplyDelete
  2. kadhaye guess panna mudingithu...twist konjam kammia iruku..ana sonna vitham valakam pola super..puthu varthaigal niraya iruku...
    -Santhosh.

    ReplyDelete
  3. ஆட்டு கால் சூப் - ரூ 3
    ஆட்டு இரத்த பொரியல் - ரூ 7
    ஆட்டு குடல் வறுவல் - ரூ 7
    ஆட்டு ஈரல் ஆயில் ரோஸ்ட் - ரூ 10
    list super

    ReplyDelete