Thursday, December 15, 2011

இரத்த எண்ணம் !

                           கண்ணாடிக்கு வெளியே வெகுதூரத்தில் பிரம்மாண்ட மலை படுத்துறங்குகிறது. அதன் மேல் உயிர்வாழும் தடித்த மரங்கள் கூட சிறு பச்சை புள்ளி போல் தெரிகிறது. 

"தம்பி! கொஞ்சம் தள்ளி நில்லுப்பா" என்றொரு குரல். மருத்துவமனையை பினாயில் விட்டு துடைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. நான் அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டியதாயிற்று. காரணம் பினாயில்  துர்நாற்றம். பொதுவாக எனக்கு மருத்துவமனை நாற்றம் என்றால் கடும் வெறுப்பு . யாருக்குத்தான் பிடிக்கும்? மருத்துவர் உட்பட.

 எனது தந்தை தங்கியிருக்கும் அறையின் அருகே நேற்று தான் ஒரு பெண்மணியை சேர்த்திருந்தார்கள். அப்பெண்ணை தூக்கிவந்த கோலத்தை நினைக்கையில் இப்பொழுதும் உடல் நடுங்குகிறது. வழியெங்கும் சிவப்பு வண்ணம் அடித்ததை போல் இரத்தம் சிதறிக்கிடந்தது. அவளது சிவப்பு சேலை மேலும் சிவப்பாய் தெரிந்தது. இப்பொழுதும் அவளின் ரத்தத்தின் துர்நாற்றம் எனது மூக்கு துவாரங்களுக்குள் உலாவிகொண்டிருப்பதைபோல் ஒரு பிரம்மை.

இதோ இப்பொழுது அந்த அறைக்கு வெளியே இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவளது குழந்தைகளாகத்தான் இருக்கும். அக்காவும், தங்கையும் ஒரே அச்சில் வார்த்து எடுத்தாற் போன்ற சாயல்.

"அக்கா! நான் தா உம்பாவாம் (மாடு) நீ தான் அம்மா ! இப்போ நீ ஓடு நான் உன்ன முட்டவாறேன் ! உம்பா !! உம்பா !" என்றாள் தங்கை. அவளை மகிழ்ச்சிபடுத்தும் பொருட்டு அக்காவும் ஓடினாள். என்னை நோக்கி ஓடி வந்தாள். நான் நிற்பதை அவள் கவனிக்கவில்லை. கலகல வென இருவரின் சிரிப்பு மட்டும் அந்த இடத்தை ஆட்க்கொண்டது. என்னை இடித்து நின்று , அண்ணாந்து பார்த்தாள். மாடுபோல் அக்காவை மீண்டும் மீண்டும் முட்டிக் கொண்டிருந்தாள் தங்கை. "உம்பா ! உம்பா ! ....

       "ஒ ! நீ தான் உம்பா வா ? நா யாரு தெரியுமா ?" என்று கூறி எனது கண்ணின் மேல் புருவத்தை உயர்த்தி குழந்தைகளை விளையாட்டுக்கு பயமுறுத்தினேன்.  இரு குழந்தைகளும் பார்த்த மாத்திரத்தில் "அம்மா! தீ பூச்சாண்டி! தீ பூச்சாண்டி!" என்று அலறியவாறு அறைக்குள் ஓடின. "தீ பூச்சாண்டி ?"  இது என்ன புது வகை ? " கண் பூச்சாண்டி, மூக்காண்டி , ஏன் காதுபூச்சாண்டி கூட கேள்விப்பட்டிருக்கிறேன். கண்ணின் சிவப்பு அக்குழந்தைக்கு நெருப்பாய் தோன்றி இருக்கலாம் . குழந்தை சொன்னால் சரியாதான் இருக்கும்.`
                       
                                  அறைக்குள் தந்தை அமைதியாய் படுத்துறங்கி கொண்டிருக்கிறார்.இன்றோடு இரண்டு வாரங்கள் ஆயிற்று. அவரின் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் 90% அடைத்துவிட்டதாம். அறுவை சிகச்சை செய்யாவிடில் உயிருக்கே ஆபத்தாம். எப்படி இருந்தவர் தந்தை. தேக்கு போன்ற தோள்கள் . ஆஜானுபாகுவான தோற்றம். எப்பொழுதும் சிரித்த முகமும், மற்றவரை சிரிக்கவைக்கும் பேச்சுமாய் இருந்தவர். இன்று அமைதியின் உருவாய் உறங்கிக்கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு நீரிழவு நோய் வேறு. அவரின் கைகளின் தோல் இப்பொழுது தேநீரில் மிதக்கும் பாலாடையினைப் போல சுருங்கி மின்னிக்கொண்டிருக்கிறது. மூப்பு , பிணி இரண்டிற்கும் தப்புயோர் உண்டோ?

என்ன செய்ய? நோய்வாய்பட்டு இருக்கும் போதுதான் ஒருவரைப்பற்றி அதிகம் நினைக்கத்தோன்றுகிறது.

 "என்னடே சட்டம்பி! அப்பா எப்படி இருக்காரு ?" என்று குரல் கொடுத்தவாறே அறைக்குள் நுழைந்தார் அருணாச்சல மாமா. தந்தையின் நெருங்கிய நண்பர். அவரை அனைவரும் ஆபிசர் மாமா என்றே அழைப்பதுண்டு. ஏதோ ஆபிசில் வேலை பார்க்கிறார். எந்த ஆபீஸ் என்ற விவரமெல்லாம் நான் அறியேன்.

"வாங்க மாமா !" அப்பாவின் அருகில் சென்று அவரை எழுப்பினேன். மெதுவாய் கண்களைத் திறந்து பார்த்து புன்னகைத்தார். " உக்காருங்க" என்றவாறு உதட்டினை அசைத்தார். என்னை நோக்கி "காபி" என்றார். புரிந்துகொண்டவனாய் "மாமா! நீங்க பேசிட்டு இருங்க நா போய்காபி வாங்கிட்டு வாரேன்!" என்று கையில் சொம்பினை எடுத்துக்கொண்டேன். "டே ! காபி வேண்டாம் . எதிரால இருக்கிற நாயர் கடைல சூடு சுக்காபி வாங்கிட்டு வாடே ! ரெண்டு ஒரு நாளா நல்ல தடுமம் பிடிச்சிருக்கு. சுக்காபி குடிச்சா கொஞ்சம் தொண்டைக்கு நல்லா இருக்கும். உங்களுக்கு எதாவது வேணுமா?" என்று தந்தையை நோக்கி கேட்டவாறே காசினை எடுக்க தன் சட்டை பாக்கெட்டில் கை விட்டார். " வேண்டாம் மாமா! பைசா இருக்கு! அப்புறம் அப்பா இப்போ டீ, காபி ஒன்னும் குடிக்ககூடாதாம் நர்ஸ் சொல்லிருக்கு" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தேன்.

            மனம் முழுதும் எண்ணம் ! இரத்த எண்ணம் கரைபுரண்டு  ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் தந்தைக்கு அறுவை சிகிச்சை. தற்போதைய தேவை ஏழு பாட்டில் A1B+ive இரத்தம். அதை பெறுவது என்ன பெரிய வித்தை என்கிறீர்களா? இரத்த வங்கியில் சென்றால் எளிதாய் கிடைக்குமே என்கிறீர்களா? மருத்துவருக்கோ அறுவை சிகிச்சைக்கு பதபடுத்தபட்ட இரத்தம் வேண்டாமாம்! உடலில் இருந்து எடுத்த 2 -3 மணி நேரத்திற்குள் சிகிச்சையில் பயன்படுத்தவேண்டுமாம்.

சரி! காசுக்காக உயிரையே கொடுக்க ஆள் இருக்கும் உலகில் உதிரத்தையா தரமாட்டார்கள். இரத்த வங்கிக்கு வெளியே இது போன்று இரத்தம் கொடுக்க தயாராய் இருப்பவர்களை அணுகலாம் என்கிறீர்களா?  அதையும் செய்தேன் . அந்த நாள் மட்டும் 8 பேரை சந்தித்தேன். ஒவ்வொருவரையும் சந்திக்கும் போதும் ஒரு தெய்வத்தை சந்திப்பதை போல் உணர்ந்தேன். ஆனால் ஒவ்வொரு தெய்வமும் அருள் தரமுடியாமைக்கு ஒவ்வொரு காரணம் சொல்லிற்று. வருத்தம் !! வருத்தம் மட்டுமே மிச்சம். சில நேரங்களில் தெய்வங்களும் தவறலாம்.

"சேட்டா! 5 ரூபாய்க்கு சுக்காப்பி! 2 பருப்பு வடை ! 2 ஆரஞ்சு மிட்டாய்" என்று கூறி சொம்பினை அவரிடம் கொடுத்தேன். நேற்று கூட மருத்துவமனைக்கு அருகில் இருந்த கிராமங்களில் இரத்தத்தை தேடி அலைந்தேன். முதலில் அவர்கள் இரத்தம் கொடுக்க தயாராய் இருந்தனர். எந்த காரியமும் அவ்வளவு எளிதாக நடந்து விடுமா என்ன?. அதுவும் எனக்கு?.

கிராம மக்களின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை சந்தித்தேன். " A1B +ve இரத்தம் தான ரெடி பண்ணிரலாம் சார் நீங்க ஒண்ணும் கவலபடாதீங்க! தலைக்கு 3௦௦ ரூவா குடுதிருங்க! அப்புறம் ஆபரேஷன் எப்போ பெரிய ஆஸ்பித்திரிக்கு எப்போ வரணும் சொல்லுங்க! ஜூஸ் , பேரிச்சம் பழம் எல்லாம் ரெடி பண்ணிருங்க!" என்றார்.  சிறிது நம்பிக்கையை மனதிலும் , மகிழ்ச்சியை முகத்திலும் கொண்டு " சார் ! ரொம்ப நன்றி  ! அப்பா இருக்கிறது ராஜா ஆஸ்பித்திரில இருக்கார்" என்றேன். சட்ரென்று அவர் முகம் மாறியது.

                     "தனியார் ஆஸ்பித்திரியா ?  அப்போ நெறைய பணம் இருக்கும் உங்ககிட்ட !  நல்ல கறப்பானே அந்த ஆஸ்பித்திரி காரன். மன்னிச்சிக்கோங்க  தம்பி ! நாங்க தனியார் ஆஸ்பித்திரில கொடுகிறது இல்ல ! " என்றார். எனக்கு ஏதோ கைக்கு எட்டியது வாய்வழியே சென்று தொண்டையில் தடை பட்டதைப்போல் ஒரு எண்ணம்.

"என்னங்க இப்படி சொல்றீங்க ! இரத்தம் கடைல கிடைக்கிற விஷயமாங்க ? தயவு செய்து ஹெல்ப் பண்ணுங்க ! வேணும்னா கொஞ்சம் காசு அதிகமா தாரேன் " என்றேன். "தம்பி உங்க நிலைமை புரியது ஆனா என்ன பண்றது. இப்போ நானே நெனச்ச கூட இவங்க குடுக்க மாட்டாங்க. இவங்க எல்லாம் காசுக்கு இரத்தம் குடுகிறவங்க தான். ஆனா அவங்களுக்கும் சில கொள்கை இருக்கு . என்ன பண்றது ? மன்னிச்சிக்கோங்க" என்று சொல்லிவிட்டு சென்றார். ஏதும் செய்யமுடியா வண்ணம் அனைத்தும் செயல் இழக்கும் பொழுது வருமே ஒரு செத்த சிரிப்பு அது பொத்துக்கொண்டு வந்தது.

                    அடடா ! காபி வாங்கியப்பின் கடைக்காரன் கொடுத்த 5 ரூபாய்  நோட்டு செல்லாத நோட்டு. வேறு எங்கேயாவது சிந்தனையை வைத்துக்கொண்டு வாழ்ந்தால் நடப்பதெல்லாம் தப்பாய் தான் போகும். இருந்தாலும் பரவாயில்லை. இதனை பேருந்தில் மாற்றிக்கொள்ளலாம். அருகில் பிச்சைக்காரர் ஒருவர்."தம்பி ! சாப்டு ரெண்டு நாளாச்சி" என்றார். உண்மையோ ? பொய்யோ ? முகமும் அதையே சொல்லியது.

                ஏற்கனவே செல்லா நோட்டு பைக்குள் இருந்துகொண்டு மனதை அரித்துகொண்டு இருக்கிறது. இதனை இவரிடம் கொடுத்துவிட்டால்? முகத்தில் புன்னகையுடன் கைகூப்பியபடி சென்றார் பிச்சைக்காரர். எனது மன அரிப்பு சற்று மங்கிற்று. இதனால் எனக்கு நஷ்டம்தான் என்றாலும் மனம் லேசாய் இருப்பதாக ஒரு உணர்வு.

                மீண்டும் எண்ணம் ! மீண்டும் ரத்தம் ! ஒரு வேளை நினைத்தபடி ரத்தம் கிடைக்காவிடில் தந்தையின் நிலை ? செ ? ரத்தம் கிடைப்பது ஒன்றும் கடினம் அன்று. அதற்காக இப்படியா அபசகுணமாக நினைப்பது என்று நீங்கள் கேட்பீர்கள். நான் என்ன செய்வது.

எதிர்பார்ப்பு அனைத்தும் தவறும் போது எதிர்பாராதவை ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்றுதான் எண்ண தோன்றுகிறது.

 ஏதோ தோன்றியவனாய் பின்னால் திரும்பி பார்த்தேன். பிச்சைக்காரர் சாலையினை கடந்து நாயர் டீ கடையினை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வேறு எதற்கு அவர் சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. எனக்கு பதற்றம் மெல்ல பற்றிக்கொண்டது.

இவர் ஐந்து ரூபாய் நோட்டை கொடுப்பார். கடைக்காரன் தான் கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டை அவனே "செல்லாது" என்று தூக்கி எறிவான்.பிச்சைக்காரர் மனதில் என்னை சபித்துகொண்டு வயிற்றில் அமிலம் சுரந்த வண்ணம் மீண்டும் பிச்சை பயணத்தை தொடங்குவார்.

வேகமாக கடையை நோக்கி ஓடினேன். அவர் காசினை கடைக்காரரிடம் கொடுக்கும் முன்னர் அதனை நான் பெற்று விட வேண்டும். அருகில் சென்று அண்ணே ! என்றேன். என்னப்பா ! என்றார். அவரிடமிருந்து செல்லா நோட்டினை பெற்றுக்கொண்டு வேறொரு ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு திரும்பினேன். அவர்க்கேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு இப்பொழுது பசியாற்றுவதே பிரதான வேலை. ஆற்றட்டும்.

மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருக்கையில் கைபேசி அழைக்கிறது. நண்பன் எதிர் முனையில். "டேய் சொல்லுடா" என்றேன்.
"ஓ அப்படியா".
"சரி எத்தனை மணிக்கு போகணும்".
 "சரி லெட்டர் வாங்கிட்டு வந்துடறேன் நாளைக்கு கால் பண்ணு" என்று கூறிவிட்டு கைபேசியை வைத்தேன்.

 எண்ணத்தில் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கையும் கொஞ்சம் மகிழ்ச்சியும் கலந்து ஓடுகிறது. அருகில் இருக்கும் கல்லூரியில் மாணவர்கள் சிலர் ரத்தம் தர தயாராயிருக்கிறார்களாம். மீண்டும் நாளை தெய்வங்களுடன் சந்திப்பு.

சுக்கு காப்பி வேறு ஆறிகொண்டு இருக்கிறது. வேகமாய் சென்று மாமாவிடம் கொடுக்க வேண்டும்.
எதிர் அறையில் இருந்த சிறுமிகளில் ஒருத்தி என்னை படிகளில் நின்று பார்த்துகொண்டிருக்கிறாள்.

அவள் அருகில் சென்று எனது பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயினை எடுத்து கொடுத்தேன். பயந்தாள், மெல்ல பதுங்கினாள், பாய்ந்து என் கையிலிருந்து மிட்டாயினை பிடிங்கி கொண்டு சிரித்து கொண்டே அறைக்குள் ஓடினாள்.

"ஏய் இந்தா பாரு மிட்டாய்" என்று தங்கையை நோக்கி கூவினாள்.
"யார் தந்தா?"
"தீப்பூச்சாண்டி மாமா தந்தது"
"எனக்கு" என்றாள் தங்கை.
உள்ளே  ஏதோ ரகசிய கருத்துப்பரிமாற்றம். ஏதோ விளையாட தயாராகிக்கொண்டிருகிறார்கள் போலும்.

ஒண்ணு - ஒங்க வீட்டு பொண்ணு
ரெண்டு - ரோஜா மலர் செண்டு
மூணு - முக்கு கடை பன்னு
நாலு - நாய் குட்டி வாலு
அஞ்சு - அவரைக்காய் பிஞ்சு
ஆறு - ஐயர் கடை மோரு
ஏழு - எலி குஞ்சி காலு.
எட்டு - டம டம கொட்டு
ஒன்பது - ஒரு முழம் கயிறு
பத்து - பாளையங்கோட்டை ராஜாவுக்கு விடிய விடிய கல்யாணம் விடுஞ்சு பாத்தா பனியாரம்"  என்று முடிக்க இருவரும் கை கொட்டி சிரித்தனர். நானும் புன்னகைத்துக்கொண்டேன்.

இன்னும் ஒர் ஆரஞ்சு மிட்டாய் எனது பைக்குள்ளேயே காத்துக்கிடக்கிறது.


Download As PDF

Wednesday, July 13, 2011

ஆல் அழித்த ஆனை!

                 "ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய வெரட்டுசாம்" என்பது தமிழ் கொள்ளுப்பாட்டியின்  அனுபவமொழி. பாட்டியாகத்தான் இருக்கமுடியும்.  பழமொழிகளுக்குப் பெரும்பாலும் உபயத்தகவல் இருப்பதில்லை. பிடாரிகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. மூர்க்கமாய் , குருதி கொப்பளிக்கத் தாக்கிக்  கொள்கின்றன.கடைசிக் காற்றினை சுவாசித்துப் பூவுலகம் நீங்குமட்டும் காத்திருந்து அடுத்தவரின் சாவைக் காணத் தன் உயிரினைப் பிடித்துக்கொண்டு, வேட்டையாடும் வல்லூரினைப் போன்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 

                                       "எப்பா ! கால் ரொம்ப வலிக்கி " என்று கூவிக் கொண்டே நொண்டி நொண்டி தந்தையின் பின்னே சென்று கொண்டிருந்தான் ராசு. "மண்ணாங்கட்டி ! சொன்ன கேக்கயால ? எங்கயாவது போயி மேலயும், கீழயும் கொரங்கு மாதிரி குத்திக்க வேண்டியது, அப்புறம் வந்து அங்க வலிக்கி, இங்க வலிக்கின்னு அழ வேண்டியது. பேசாம வா !" என்று வாய்முழுக்க வசையும், கையில்  காயத்திருமேனி எண்ணெய் டப்பாவுடன் மரக்கடை நோக்கிச் சென்றார் ராசுவின் தந்தை. மரக்கடையை அடைந்ததும் கடைமுதலாளி கடையில் இல்லாததை அறிந்து சுற்றும், முற்றும் பார்த்தார். தூரத்தில் ஆலமரத்தின் அடியில் முதலாளி அமர்ந்து ஓய்வெடுப்பது தெரிந்தது. ராசுவை நோக்கி "டே ! மரத்துக்கு கீழ மாமா இருக்காரு ! அங்க வா என்னா !" என்று கூறி வேகமாய் நடந்தார் தந்தை.
                                அடிபட்ட காலுடன் இன்னும் சிறிது தூரம் நடக்கவேண்டும் என்ற கடுப்புடன் மனதுள் குமுறிக்கொண்டே நடந்தான் ராசு. "என்னப்பா ! பைய ஏதோ நொண்றான் என்ன பொதையல் எடுத்தான்? " என்றார் முதலாளி சிரித்துக்கொண்டே. "இல்ல மாமா ! வழக்கம் போல தான். பயலுக்கு கால் கரண்டையில அடி விழுந்துருக்கும்னு நெனைக்கேன் ! ஒரு உருவு உருவி விட்டேகன்னா சரியாயிடும்" என்றார் தந்தை. "என்னடே மக்கா ! நொண்டுக தோரணையை பாத்த அடி பலம் போல இருக்கேடே ?" என்றார் ராசுவிடம். அவன் ஏதும் கூறாமல் நொண்டியவாறே நின்றான். முகம் சிறிது அஷ்ட கோணல். இதற்கு முன் பலமுறை அவரிடம் சுளுக்கெடுக்க வந்துள்ளான். அவரது கரவித்தையில் சுளுக்கு போகிறதோ இல்லையோ ஒரு வினாடி உயிர் போய் மீண்டு வரும். "இப்புடி திண்டுல படுடே!" என்று கூறி, தந்தையிடம் காயத்திருமேனி எண்ணெயை வாங்கினார். ராசுவின் கால் கரண்டையை மென்மையாய் தடவினார். ராசுவிற்கு இத்தடவலின் நோக்கம் தெரியும். புயலுக்கு பின் மட்டுமல்ல , முன்னும் அமைதிதான். அடிபட்ட இடத்தை கண்டு கொண்ட பின் மெதுவாய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளிலும் குளிர தடவி கரண்டையில் தொடங்கியது சுளுக்கு வேட்டை. "ஞ ! ங் !" என்று மெல்லினத்தில் முனங்கிக் கொண்டிருந்தான் ராசு. வலி கொஞ்ச கொஞ்சமாய் ஏறிக்கொண்டிருந்தது. முதலாளி  வேட்டையில் முன்னேறிக் கொண்டிருப்பதின் அறிகுறி. "அப்புறம் ! அந்த நில காரியம் என்னாச்சி !" என்று வினவார் முதலாளி. "அது என்ன மாமா ! ஓவரா வெல சொல்லுகான். கொஞ்ச கூட கொறைக்க மாட்டக்கான் !! ரொம்ப சொல்லிப் பாத்தேன். பிடிச்ச பிடியிலயே நின்னான்! போல மயிராண்டின்னு வந்துட்டேன் " என்று தந்தை சொல்லிமுடிக்கும் முன்னர் ராசுவின் கரண்டையை முதலாளி ஒரு உருவு உருவினார். "ஆ !" எனக் கதறினான் ராசு " அவளோ தானடே ! போட்டு ! போட்டு ! செரியாயுடும்" என்று இருதுளி எண்ணையினை குளிர தேய்த்தார். ராசுவுக்கு கண்களில் இரு துளி கண்ணீர் பிதுங்கிக் கொண்டு வந்தது. " அப்படியே படுடே கொஞ்ச நேரம் " என்று கூற முதலாளியும் , தந்தையும் உரையாடலைத் தொடர்ந்தனர்.
                  மீண்டும் புதிதாய் பிறந்ததைப் போன்ற ஓர் எண்ணம் ராசுவுக்கு. கால் சிறிது மரத்துப் போயிற்று. ஆலமரக்காற்று மிகவும் சுகமளித்தது. இலைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினான். பறவைகளின் ஓசையும், இலைகளின் அசைவும், காற்றில் மிதக்கும் விழுதுகளும் , அங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்புநிற பழங்களும் ஏதோ அவன் வலிக்கு ஆறுதல் அளிப்பதாய் உணர்ந்தான். இந்த மரத்தின் கீழே பலநாட்கள் விளையாடியுள்ளான் . இன்று ஏதோ புதிதாய் தோன்றியது.
                               விசாலமான அந்த ஆலமரத்திற்கு சுமார் 60 வயது இருக்கலாம். அப்பகுதியில் குடியேறிய முதல் குடும்பத்திற்கு மூத்தது அம்மரம் .அடை மழையிலும், கொடும் வெயிலிலும் தனித்து நின்று தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பமது.அம்மரம்  சொந்தக்காலில் நிற்கத் தொடங்கிய நாள் முதல் பறவைகளின் வாசம் அங்குண்டு. 
                            பலவகை பறவைகளின் பல தலைமுறைகளை கண்டது அம்மரம். அதன் பலனாய் அப்பறவைகள் அம்மரத்தின் பழத்தினை உண்டு விதைகளை வேறெங்காவது விதைத்திருக்கலாம் வாய்ப்பிருகிறது. அதன் மூலம் ஆலமரத்திற்கு அக்கம்பக்கத்தில் சொந்த, பந்தங்கள் இருக்கலாம்.
                                 காலம் வேகமாய் கடந்தன. மரத்தின் அருகில் மக்கள் குடியேற்றம்  அதிகமாயிற்று. பெரும்பாலும் மக்களும், பிற உயிர்களும் ஓய்வெடுக்கும் இடமாய் ஆலமரம் ஆயிற்று. இவ்வாறாக ஒரு நாள் ஒரு மஞ்சனை (சிவப்பு நிற களிபோன்ற பொருள்.சாமி சிலைகளின்மேல் தேய்க்கும் பொருள்) விற்கும் பெண் ஓய்வெடுக்கும் போது மீதமிருந்த மஞ்சனையை ஆலமரத்தில் தேய்த்துவிட்டு போக , அடுத்த நாள் மரத்தின் கீழே பூசை செய்து  கொண்டிருந்தார் ஒருவர் , பூசாரி என்ற பதவியை தனக்கு தானே அளித்துக்கொண்டு காலை மாலை என்று இருவேளைகளும்  தவறாமல் பூசை செய்து வந்தார். பெரிதாய் கூட்டமில்லை என்றாலும் போக, வர அவ்விடத்தை கடந்து செல்பவர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு சென்றனர். சிலமாதங்கள் சென்றபின், விநாயக சதுர்த்தி நாளன்று ஒரு சிறிய விநாயகரின் சிலையை செய்து மரத்தின் அடியில் வைத்து பூசையை ஆரம்பித்தார். அன்றிலிருந்து கூட்டம் களைகட்டத் தொடங்கியது. பெண்டீர்  கூட்டம் அலைமோதியது. பூ, பழம், சூடம் விற்க சிறு கடையும் வந்துவிட்டது.
                                                     கடந்த ஒரு வாரமாய் ஊருக்குள் ஓர் வதந்தி. உண்மையென்று அறியும் மட்டும் உண்மையும் வதந்திதான். சிறு கோவில் , சிறு பிள்ளையார் மக்களுக்கு போதவில்லைபோலும். பிரமாண்ட பிள்ளையார் வரப்போகிறார் என்ற காட்டுதீ போன்ற வதந்தி. காட்டுத்தீக்கு பொறி கிளப்பியவர்கள் ஊர்பெரியவர்களாகத்தான் இருக்க முடியும். ஊர்பெரியவர்கள் என்றால் மூன்று பணம் படைத்தவர்கள் , அவர்கள் அடிக்கும் கொட்டுக்கு ஆடும் இரண்டு படித்தவர்கள்.  கோவில் காரியம் ! ஆதலால் இந்த கூட்டத்தில் பூசாரியும் சேர்ந்து கொண்டார். கோயில் வளர வளர அவரும் வளர்ந்தார் வாழ்விலும் , வசதியிலும். பெரிய கோவில் என்பதால் பெரிய வளர்ச்சியிருக்கும் என்று நம்பிக்கையில் அவர்  வழக்கத்திற்கு மேலாய் கோவில் கட்டும் திட்டத்தில் சிறப்பாய் செயல்படுவதாகவும் ஓர் வதந்தி.
                    புதன்கிழமை காலை ஊர் கூட்டத்தை கூட்டினர். வதந்தி 50 % உண்மையை நோக்கி பயணப்பட்டிருந்தது. மக்களுக்கு கொஞ்ச அகமகிழ்வுதான். பெரிய கோவில் வீட்டுக்கு பக்கம் வந்த சர்கார் இன்னும் இரண்டு பஸ் அதிகம் விடுவாங்க " என்ற பேச்சும் அடிபட்டது. ஊர் பெரியவர்களில் ஒருவர் தொண்டையை சிறிது செருமிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார். "இப்போ எதுக்கு கூடி இருக்கோம்னா நம்ம பிள்ளையார் கோவில இடிச்சிட்டு பெருசா காட்டணும்னு பல பேர் ரொம்ப நாலா சொல்லிட்டு இருக்கிறது எல்லாத்துக்கும் தெரியும். அதுக்கு செரியான நேரம் வந்துருச்சின்னு நெனைகிறோம். அதுனால எல்லாரும் முடிஞ்ச நன்கொடையை குடுங்க ! இது நம்மலா எடுத்த முடிவில்ல! பூசாரிக்கு கனவு வந்துருக்கு ! விஷயம் கொண்ட மூணு தோசியர்கிட்ட விசாரிச்சதுல கோவில் பெருசா கட்டணும்னு சொன்னங்க ! அதனால இத சீக்கிரமா முடிக்கணும்." என்று கூறி  மக்களை நோக்கினார். கூட்டத்தில் ராசா தந்தையின் கைப்பற்றி நின்றான். கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி முன்வந்தாள். அரசாங்கத்தின் ஆசிரிய வேலையை பெற போராடிக் கொண்டிருப்பவள். அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது தற்காலிக வேலை. "அய்யா ! கோவில் பெரிசா கட்டுனா நெறைய இடப் பிரச்னை வரும்ணு தோணுது. ஏற்கனவே இந்த சின்ன கோவிலால நெறைய போக்குவரத்து பிரச்னை வருதுன்னு பேப்பர்ல கூட வந்தத பாத்துருப்பீங்கன்னு நெனைகிறேன்" என்று பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். " இந்த பாருமா ரேவதி ! இதெல்லாம் யோசிக்காமலா நாங்க முடிவெடுப்போம். இடபிரச்சனைய மனசுல வச்சிதான் இந்த மரத்த வெட்டிட்டு அதுல கோவில காட்டுவோம் " என்று முகமலர்ந்து கூறினார் படித்த பெரியவர் ஒருவர். மக்களுக்கு சற்று அதிர்ச்சி. இதனை யாரும் கனவில் கூட எண்ணிப்பார்க்கவில்லை. "அய்யா ! மரத்த வெட்டுகது கொஞ்ச கூட செரி இல்ல. இந்த கோவில் இப்படியே இருந்துட்டு போட்டும். இப்படி ஒரு பெரிய மரம் இங்க இருக்கிறது நமக்கு தான் நல்லது" என்றாள் ரேவதி. "அட ! ஊரோட ஒத்து வாழம்மா ! சும்மா நாலு வார்த்த படிச்சிட்டு எதாவது உளற வேண்டியது ! சாமி விஷயமாங்கும் !" என்று மிரட்டினார் அமைதியாக. ஊர் மக்கள் யாரும் வாய் திறக்க வில்லை. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்றிருக்க மௌனம் சம்மதம் என்ற பொதுவான கருத்தை மக்களின் முடிவாக ஏற்று ஒரு ஆலமரத்தைக் கொல்லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                                                   ஆலமரம் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது. கொலைக்கு நாளும், கிழமையும் நேரமும் கூட பார்த்தாயிற்று. என்றாலும் பிள்ளையாருக்கு இத்தீர்மானத்தில் சம்மதமா என்பது ஐயமே !.
                                           வாரங்கள் கடந்தன. ராசு வீட்டிற்குள் ஓடிவந்தான். தந்தை உணவருந்திக் கொண்டிருந்தார். "எப்பா ! கோவில் மரத்த வெட்டுகாங்கப்பா!" என்றான் ராசு   அதிர்ச்சியுடன். தட்டிலே கையை கழுவி விட்டு பதட்டத்தோடு கிளம்பினார் மரத்தினை  நோக்கி. ராசு பின்தொடர்ந்தான். கோடாலியின் அடி விழ, விழ பறவைகள் கூட்டம் கூட்டமாய் பறந்து சென்றன மரத்திலிருந்து. ரம்பம் தனது வேலையை செம்மையாய் செய்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் யாவரும் ஏதும் செய்வதிறியாது அமைதியாய் உறைந்து நின்றனர். ஆலமரம் தனது உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கும் பறவைகள் இன்றில்லை. சட்டி உடைந்த பின்  பூனைக்கென்ன வேலை. மரம் வெட்டப்படப் போகிறது என்று முடிவடுத்த அன்றே மரம் செத்து விட்டது. கூடி இருந்தவர்கள் அனைவரும் இன்று செய்வது வெறும் மௌன அஞ்சலியே !
                     நாட்கள் ஓடின. சிறப்பமாய் நின்ற ஆலமரம் சிதைக்கப்பட்டு, பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கோவில் நிறுவப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியோடு கும்பாபிசேகம் கொண்டாடினர். ராசு கோவிலுக்கு சென்றான் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சிலைகளை ரசித்தான். நெற்றியில் இரண்டு கொட்டு, சிறு திருநீர்பட்டை கோவிலுக்கு வெளியே வந்தமர்ந்தான். ஏதோ ஒரு புரியாத வெறுமை ஆட்கொண்டது.
                   சுயம்புவாய் வளர்ந்த ஆலமரத்தால் அங்கே ஆனைமுகத்தான் (பிள்ளையார்) வந்தான். இன்று அவன் வளர்ந்து , சுண்டேலியுடன் நிற்க  அவன் வரக்காரணமாய் இருந்த "ஆல்" அங்கில்லை.
                             கொடும் நெருப்புக்கு  நீர், ஆழிபேரலைக்கு கல்லும் ,மண்ணும்  என்று இயற்கை தோற்பது இயற்கையுடன் மட்டும் தான் என்பதும் இயற்கைதான் போலும்.
                        
Download As PDF

Thursday, April 28, 2011

எக்கரையும் பச்சை !

                              ஒரு படி . வலக்கால் பல தசைகளின் உதவி பெற்று , முயன்று இடக்காலை மேலே ஏற்றுகிறது. பயணம் சிறிது தான் . பாதையும் தெளிவுதான் . இடக்காலுக்கு வேறு எந்த எதிர்பார்ப்பு இருக்கமுடியும் வலக்கால் தன்னை மேலே ஏற்றும் என்ற எண்ணத்தைத் தவிர.
                 வீட்டினுள் நுழைந்தார் சாமி. உள்ளே முதலாளி காசினைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார். சில்லறை ஒலி துல்லியமாய் கேட்டது. சாமிக்கு இந்த தருவாய் எப்பொழுதும் பிடிப்பதில்லை. அடுத்த 5 முதல் 10  நிமிடத்திற்கு அவர் அவராய் அன்றி ஓர் அடிமையை போல் நின்று பதில் கூற கடமைப்பட்டவர். பிடிப்பதில்லை என்றாலும் தவிப்பதற்கில்லை.
               "வாடே சாமி ! ஜோலி முடிஞ்சா?" என்று கணீர் குரலில் கேட்டார் கோமதி கிழவி. "முடிஞ்சிட்டு ஆச்சி " என்று கூறியவாறே அக்குளில் இருந்த பையினை எடுத்து அதற்குள் இருக்கும் ரூபாய் நோட்டுகளை அடுக்கினார். "எவளோ பிரிஞ்சி இன்னைக்கு ?" என்றார் கோமதி. "அது 5338  ரூவா ஆச்சி " என்றார் சாமி. "ஹ்ம்ம் ! புள்ளிக்கு பின்னால ஒண்ணும் இல்லையாடே " என்ற வினவ " இருக்கு ஆச்சி ! 75 பைசா !" என்றார் சாமி. அதயாருடே சொல்லுவா ? உங்க வீட்டு சின்ன கெழவி வந்து சொல்லுவாளா ?" என்று செல்லமாய் கடிந்துகொண்டார் கோமதி.
"சாப்டயாடே ? " கோமதி .

"இல்ல ஆச்சி ! வீட்ல போய் தா கஞ்சி குடிக்கணும் " என்றார் சாமி.
"நேரம் 9 .30 ஆச்சி கடைல சாப்டுட்டு வந்துருக்கலாம்லா ?" என்று கோமதி கேட்க."இல்ல ஆச்சி ! நா வீட்டுக்கு போயிட்டு வாரே " என்று உத்தரவு வாங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார் வீட்டை நோக்கி.
                  கோமதி கிழவி தென்காசியின் அருகே உள்ளே ஒரு கிராமத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்தவர். இன்றும்  அக்கிராமத்தவர்கள் அவரை "வசூல் சக்கரவர்த்தி " என்றே அழைப்பதுண்டு. வட்டிக்கு விட்டு சம்பாதித்த பணம் அவரை பலருக்கும் அறியச் செய்திருந்தது.

 காசு காரியங்களில் மிகவும் கறாரான கிழவி கோமதி. முதுமை காரணத்தால் தனக்கு கீழே மூன்று பேரை வைத்து வேலை வாங்குவது மட்டுமே இப்போதைய வேலை. அவர்களுள் கோமதிக்கு சாமி மீது கொஞ்சம் கரிசனம் அதிகம். பொதுவாக கோமதி சொந்தங்களை அருகில் அண்ட விடுவதில்லை சாமியை தவிர்த்து. 

ஊரில் லாரி ஒட்டிக்கொண்டிருந்தவனின் குணம் பார்த்து தன்னிடம் வேலைக்கு வைத்துக்கொண்டார். வேலைக்கு சேர்த்தவுடன் கோமதி கிழவி சில அறிவுரைகள் வழங்குவதுண்டு. அப்பகுதியில் வட்டித்தொழில் செய்பவர்களில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பவர் கோமதி . அதன் காரணமாய் அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் பெருவாரியான மக்கள் கோமதியிடமே காசு பெறுவர். சிலர் காசு கொடுக்காமல் கம்பி நீட்டுவதுண்டு. உயிரை விட்டாலொழிய அவரிடமிருந்து தப்ப இயலாது.  அதையே தன் கீழுள்ள வேலையாட்களுக்கும் வேதமாய் ஒதியிருந்தார்.

 " கருணை எள்ளளவும் கூடாது ! காசை திரும்பப்பெற வசைகளை பாரபட்சமில்லாமல் பயமில்லாமல் பயன்படுத்து" என்பது கோமதி வாக்கு. 

சாமிக்கு இக்கூற்றுகளில் உடன்பாடில்லை. வாட்டசாட்டமாய் உடலை வளர்த்துக் கொண்டார். அரும்பு மீசை பக்கடா மீசையானது. வாய் மொழியிலின்றி உடல் மொழியின் மூலம் பயத்தை உண்டாக்க இந்த மாற்று ஏற்பாடு.
                                 சனிக்கிழமை காலை 11.15 மணி சமீபம். சாமி வழக்கம் போல் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கையில் பையுடன் வசூலுக்குக் கிளம்பினார். தெருவில் அவரது மகன் சுதாகர் நண்பர்களுடன் பம்பரத்தை சுழல விட்டுக்கொண்டிருந்தான். தந்தையை கண்டான். சனிக்கிழமை நினைவு மூளையை உரச "எப்பா ! வரும்போது பரோட்டா, கோழி என்னா ? என்று கூவினான். சாமி சிரித்தவாறே அவனைநோக்கி கையசைத்து சென்றார். பேருந்து ஏறி இன்றைய வசூல் இடமான "வல்லகுமாரன்விளை" நோக்கி கிளம்பினார்.
                                    மதிய நேரம் பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டை நோக்கிக் திரும்பிக்கொண்டிருந்தான் ராஜா. கையிலே தட்டு , தட்டிலே சத்துணவுக் (?) கஞ்சி வீட்டை நோக்கிப் பொடிப்பயணம். கசங்கிய வெள்ளை சட்டை (பெயரளவில் மட்டுமே ) காக்கி டவுசர் அதன் பின்னால் இரண்டு துளைகள்.
 அதன் வழியே காற்றோட்டம் கொஞ்சம் அதிகம் தான்.

 தோளில் பையுடன் மெதுவாய் நத்தைபோல் நகர்ந்துகொண்டிருந்தான். கஞ்சியோ கடல் அலைபோல் ஆடி ஆடி அடங்கிக்கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஒரு மிட்டாயை பார்த்தான். அது ஏதோ ஒரு குழந்தையின் வாய் தவறிய பச்சை நிறமிட்டாய். அதைக் கண்டதும் சிறிதும் சிந்திக்காமல் ரோட்டோரம் கஞ்சி தட்டினை வைத்துவிட்டு மிட்டாயினை கையிலெடுத்தான். அதில் சுற்றிலும் ஒட்டியிருந்த மண்ணை துடைத்துக்கொண்டு சட்டைப் பையில் பதுக்கிகொண்டான். மீண்டும் பயணத்தை தொடர்ந்தான்.

வீட்டினில் அவனது தாய் வாயிலில் பதட்டத்துடன் ராஜாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். சாமி இன்று வட்டிப்பணம் வாங்க வருவார், அதற்குள் வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது மட்டுமே ராஜாவின் தாயின் இன்றைய குறிக்கோள். ராஜாவின் தாய்க்கு கூலித் தொழில் . தந்தைக்கு குடியே தொழில். எப்போது வீட்டிற்கு வருவார் என்பதை அவர்கூட அறிவாரா என்பது ஐயமே !. வட்டிக்குப் பணம் வாங்கி குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவர் தாய்தான். பணம் கொடுத்தவரின் வாய் வசைகளை பலவாறாய் கேட்டு புளித்து போய்விட்டது. மரத்துப் போன மனதின் மீது அமிலம் ஊற்றினால் என்ன ? அமிர்தம் ஊற்றினால் என்ன ?

வசைகளை வெற்று தூசியென உதிர்த்துவிட்டு வாழ்க்கையை தொடரப் பழகிக்கொண்டவர் (வேறு வழியும்  இல்லை ) . என்றாலும் பலநேரம் அந்த தருணத்தை விட்டு முடிந்தமட்டும் தப்பிக்கொள்வார்.
                                 
         வீட்டை அடைந்தான் ராஜா. "சீக்கிரம் வர சொன்னேம்லா ?" என்றார் தாய். ராஜா எதிர்வினை ஏதும் செய்யாமல் கஞ்சி தட்டினை தாயிடம் ஒப்படைத்துவிட்டு மிட்டாயிருந்த பையினைப் பற்றிக்கொண்டு குடிசையின் அருகே நின்ற நாய்குட்டியுடன் விளையாடத் தொடங்கினான் . பாதிக் கஞ்சியினை வேறு ஒரு தட்டினில் ஊற்றிவிட்டு , மீதி கஞ்சியில் தண்ணீரை ஊற்றி , சிறிது உப்பினைக் கலந்து வேகமாய் குடித்தார் தாய். அருகில் இருந்த வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே கஞ்சியினை குடித்து பசியினை ஆற்றிக்கொண்டார். தட்டினை கழுவி கவுற்றிவிட்டு , "ராஜா ! அம்மா வேலைக்கு போறே ! தம்பிய பாத்துக்கோ ? சாய்திரமா வந்துருவே . தம்பி அழுத பிஸ்கட் குடு. கொஞ்சம் கஞ்சி இருக்கு ! குடிச்சிரு !" என்று கூவிக் கொண்டே கூட்டை விட்டு பறந்தது தாய்ப்பறவை.  பையில் இருந்த மிட்டாயினை எடுத்து சுவைக்கத் தொடங்கினான் ராஜா.
                                       
      அரைமணிநேரம் கழித்து , சாமி ராஜாவின் வீட்டின் முன் வந்தார். "என்னடே ! ஸ்கூலுக்கு போயிட்டு வந்தியா? உள்ளபோய் உங்கம்மாகிட்ட  பைசாவையும் , சிட்டையையும் எடுத்திட்டு வர சொல்லு " என்றார் சாமி.

  " மாமா ! அம்மா வேலைக்கு போயிருக்கு மாமா !" என்றான் ராஜா. " உங்கமைக்கு சீல ! ஒழுங்கபோய் வரசொல்லு பொய் சொல்லாதடே !" என்று மிரட்டும் தோரணையில் கூற , " உண்மையில அம்மா வேலைக்கு தான் போயிருக்கு. சாயங்காலம் தான் வரும் !" என்றான் பாவமாய். சாமி கோபம்கொண்டவராய் "சாயங்காலம் வருவே . உங்கம்மாகிட்ட சொல்லு !" என்று கோபத்துடன் கிளம்பினார்.
                                           மாலைப் பொழுது. சுதாகர் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். மனதில் மகிழ்ச்சி கொஞ்சம் தூக்கல். தந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். சுதாகர் ஒரு "தொட்டா சிணுங்கி " அவனது நண்பர்கள் அவனை அடிக்கடி அழவைத்து வேடிக்கைப் பார்ப்பதுண்டு. அதுபோன்ற ஒரு திட்டம் அன்றும் தயாரானது.

" என்னடே ! சனிக்கிழமை ஆனா ஜாலியா உனக்கு ?" என்று தூண்டிலைப் போட்டன் ஒருவன். " ஆமா ! எங்கப்பா ஜோலிக்கு போயிட்டு வரும்போது பரோட்டா, கோழி வாங்கிட்டு வருவால்லா " என்னும் போது அவன் முகத்தில் ஒரு பரவசம்.

" ஜோலியா? உங்கப்பா என்ன ஜோலிடே பாக்கு ?" என்று ஊசியை சிறிது ஆழமாய் இறக்கினான். "வசூல் ஜோலி " என்றான் சுதாகர் அப்பாவியாய். " என்னடே சொல்லுக ? கார் ஓட்டுகது  ஜோலி ! முடி வெட்டுகது ஜோலி, கட வச்சிருகிறது ஜோலி ! வசூல் ஜோலி யாடே ? " என்று கேட்டவாறே பலமாய் சிரித்தான். அவன் சிரிப்பு அருகில் இருந்தவர்களை பற்றிக்கொண்டு பலமாய் எரிய தொடங்கியது. ஒன்றும் புரியாதவனாய் அவ்விடத்தை விட்டு வீடு நோக்கிச் சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டான் தந்தையிடம் இக்கேள்வியை கேட்டே தீரவேண்டும் என்ற முடிவுடன்.
                                    
      சாமி வீடு திரும்பும் முன் மீண்டும் வட்டியை கேட்க சென்றார். " என்னடே ! உங்கம்மா எங்கடே ?" என்று கேட்க , " இன்னும் வரல மாமா !" என்றான் ராஜா. சிறிது நேரம் காத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அருகிலிருந்த கல்லில் அமர்ந்து கொண்டார் சாமி.

     நாய்க்குட்டி அவரது அருகில் சென்று அவரது கையிலிருந்த பரோட்டா, கோழியினை முகர்ந்து பார்த்தவாறு, அவரையும் பார்த்துக்கொண்டிருந்தது. பொரித்த கோழியின் மணம் ராஜாவின் மூக்கை துளைக்க "மாமா ! பொரிச்ச கோழியா ?" என்று புன்சிரிப்புடன் சாமியிடம் கேட்டான். பொறுமையிழந்த சாமி " ஆமா டே ! உங்கம்மா வந்தா சொல்லு அடுத்த வாரம் பைசா கண்டிப்பா தரணுமானு என்னா ? " என்று கூறி நடந்தார். ராஜாவின் ஐம்புலன்களிலும் பொரித்த கோழியின் மணம். தொண்டை எச்சிலை தானாகவே விழுங்கிக்கொண்டது.
                                 சாமி வீட்டை அடைந்தார். திண்ணையில் கோபத்துடன் அமர்ந்திருந்தான். சுதாகரின் காதில் அவனது நண்பர்களின் சிரிப்பொலி மீண்டும் மீண்டும் ஒலித்தவாறே இருந்தது. மறு திண்ணையில் தாய், தந்தை, தங்கை ஆகியோர் அனைவரும் நிலவொளியில் அமர்ந்து உண்ணத் தொடங்கினர். " சுதாகரு ! சாப்பிட வரலையா ? சீக்கிரம் வந்து சாப்ட்ரு ! இல்ல தங்கச்சி அவளவையும் சாப்டுருவா பாத்துக்கோ !" என்றார் சாமி.

மனமுழுக்க நண்பர்கள் கேட்ட கேள்வியே ஒலித்துக்கொண்டிருந்தது சுதாகருக்கு. தந்தையின் குரலை சட்டை செய்யாமல் நிலவினைப் பார்த்துக்கொண்டிருந்தான். பொரித்த கோழியின் வாசனை மெல்ல அவனது நாசியினை துளைக்க , வயிற்றின் அமிலமும் அதற்கு உதவ , வயிற்றுப் பசியினை விட வைராக்கியம் பெரிதா என்ன? தந்தையிடம் கேட்க எண்ணிய  கேள்வியை தனக்குள்ளே விழுங்கிவிட்டு உணவு உண்ண தந்தையின் அருகில் அமர்ந்தான்.
                                       ராஜாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. தண்ணீரில் பிஸ்கட் இரண்டினை கரைத்து தம்பிக்கு கொடுத்து விட்டு , தாய் அடுக்களையில் வைத்திருந்த மீதி கஞ்சியினை தண்ணீர் ஊற்றி , வாசலில் அமர்ந்து நிலவினை பார்த்துக்கொண்டே சுவைத்தான் மனமுழுக்க பொரித்த கோழியினை நினைத்துகொண்டே.
                                       இரு சிறுவர்களின் எண்ணகளுக்கும், ஏக்கங்களுக்கும் சாட்சியாய் இருக்கிறான் இரவுச்சூரியன். அவன் கண்டுகொண்டிருப்பதை அச்சிறுவர்கள் அறிவார்களா என்ன ? என்றாலும் அவன் அவர்களை கண்சிமிட்டாமல் கண்டுகொண்டிருக்கிறான் வெண்சிரிப்போடு.
                                             
                          
Download As PDF

Wednesday, March 2, 2011

ஓட்டில் ஓர் ஓட்டை !

                             "எஞ்சினியர்" சமீபத்தில் பெருமாளின் பெயரோடு ஒட்டிக்கொண்ட பட்டம். ஒன்றரை மாதத்திற்குப்பின் மூன்று நாள் விடுமுறையில் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தான். ஊருக்கு வந்ததும் அவனது முதல் செயல்  காலை உணவைப் பற்றி கனவு காண்பது தான் (கனவு காண்பதும் ஒரு செயலா என்ன?). வீட்டை அடைந்து காலை கடன்களை முடித்துவிட்டு சாரத்தை (லுங்கி) மடித்துக் கட்டிக் கொண்டு ஆயத்தமானான்  வடைவேட்டைக்கு. "எம்மா !! வாளிய எடு , நா போய் ரசவடை வாங்கிட்டு வாரே " என்றான். அடுக்களையில் இருந்து அம்மா இரண்டு வாளியுடன் வந்தார். "இதுல உனக்கு ரசவட வாங்கிக்கோ ! இந்த வாளியில அப்பாக்கு ஐயர் கடைல ஒரு சாம்பார்வட வாங்கிரு! " என்றார். வாளிகளை வாங்கிக்கொண்டு நாயர் கடையை நோக்கிப் பயணப்பட்டான் பெருமாள். நாயர் கடையில் வேலை பார்க்கும் ராசா அண்ணன் "என்ன பெருமாளு ! எப்போ வந்த ?" என்று கேட்டவாறே வாளியை பெற்றுக்கொண்டு ரசவடை இரண்டை உள்ளே போட்டு 3 கரண்டி ரசத்தை அதனுள் ஊற்றினார். "இன்னைக்கு தாண்ணே!" என்றுவிட்டு கல்லாவில் இருந்தவரிடம் காசை கொடுத்துவிட்டு, ஐயர்கடையில் சாம்பர்வடையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான்.வழியில் இருந்த ஒரு பாழடைந்த வீடு ஒன்றினை கடக்கும் போது ஏதோ எண்ணியவனாய் நின்றான். மெதுவாய் அவ்வீட்டினுள் நுழைந்தான். உள்ளே ஓர் உடைந்த கட்டில், இரண்டு வளைந்து, நெளிந்த பாத்திரங்கள் மட்டுமே கிடந்தது. தற்போது அவ்வீட்டில் யாரும் வாழ்வதற்கான அறிகுறி ஏதுமில்லை. வெடிப்புகள் நிறைந்த தரையினில் ஒரே ஒரு மஞ்சள் வட்டம். அது பலவருட தனிமையின் வெறுப்பினால் "ஆதவன்" உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒளி வட்டம். அவ்வொளி கடந்து வந்துகொண்டிருக்கும் பாதையை பெருமாள் நோட்டமிட்டான். மேலே ஓட்டில் இருந்த ஓட்டை ஒன்றின் வழியாய் சூரியன் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த ஓட்டின் சிதைவிற்கும் , ஒளி சிதறலுக்கும் கண்டிப்பாக ஓர் வரலாறு இருந்திருக்க வேண்டும். அந்த  ஓட்டையின்  பிறப்பரிக்கையில் பெருமாளின் பெயர் இருப்பதாய் ஓர் நினைவு.
                                                    "ஆமைக்கண்ணன்" அவ்வீட்டில் பலவருடங்களுக்கு முன் குடியிருந்தவரின் பெயர். "ஆமைக்கண்ணன்" அவரது அம்மையப்பன் இட்ட பெயராய் இருக்குமா என்ன ? சுற்றார் இட்ட பெயாராகதான் இருக்கும். மேலும் அப்பெயர் அவரது உருவத்தினால் உண்டானது. பெரும்பாலும் பட்டப்பெயர்கள் அவ்வாறே அமைகின்றன(?). அவரது தலை ஆமையின் தலை போன்றே இருக்கும். இடுப்பில் ஒரு வெள்ளை வேட்டி, தோளில் ஓர் துண்டு அவையே அவரது பிராதான உடை. அவை இரண்டும் தனது வெண்மை தன்மையை விட்டு விலகி பலவருடம் இருக்கும் போலும். ஆமைக்கண்ணனை எண்ணிய கணத்தில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒன்று தான்."வசை மொழி பொழிவதில் அவர் ஒரு வற்றாத ஜீவநதி". கெட்ட வார்த்தைகளின் அகராதி. அவர் திட்டத்தொடங்கினால் முன் நிற்பவரின் "பாட்டன், முப்பாட்டன் " என்று அனைவரின் கண் , காது என்று அத்தனை துளைகளிலும் குருதிபாயும் மட்டும் வசையை வாரி வழங்குவார். இத்தனை வருடங்களில் அவர் யாரிடமும் அமைதியாய், அன்பாய் , பேசியதை பெருமாள் கண்டதில்லை. அவர் எந்த வேலையும் பார்ப்பதாய் தெரியவில்லை
                                                     ஒரு முறை அவரது வீட்டின் எதிரில் இருக்கும் கோவிலில் அமர்ந்து குச்சி ஐஸை உரிந்து சுவைத்துக்கொண்டிருந்தான் பெருமாள். அருகே அக்கோவிலயே வீடாய் கொண்டு வாழ்த்து கொண்டிருக்கும் "நண்டு" ஆச்சி( ஒரு பாட்டி ) . அவரை நோக்கி " ஆச்சி! இந்த ஆமைக்கண்ணனுக்கு யாருமே இல்லையா ? எப்பவும் இப்புடி தனியா இருக்காறே? " என்று வினவினான் பெருமாள். " அதுவா ! அவன் ஒரு வட்டு(பைத்தியம்) கேஸு. அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருந்தா ! ஒரே ராத்திரிதான் இவங்கூட வாழ்த்தா . அடுத்த நாள் ஓடியே போய்டா! அவன் போன ஜெம்மத்துல நெறையா பாவம் பண்ணிருக்கானோ என்னமோ ? அதுதா இந்த ஜெம்மத்துல பல்ல இளிச்சிகிட்டு இருக்கு! " என்றார்.  ஐஸின் மேல் ஆர்வங்கொண்டவனாய் அதனை உரிந்து கொண்டே " அப்புடியா!  ஹ்ம்ம் அப்போ நீயும் போன ஜென்மத்துல எதாச்சும் பண்ணிட்டயா ?  எப்போ பாரு கோவில்லயே கெடக்க ? " என்று கூறியவாறே ஐஸை உரிந்துகொண்டிருந்தான். நண்டு ஆச்சி சிறிது அமைதியாய் பார்த்து விட்டு ஏதும் கூறாமல் போர்வைக்குள் புகுந்து கொண்டார்.
                                                 கிழமை வியாழன் . நேரம் 10 .45 . " அண்ணே ! கிரிக்கெட் வெளையாடுவோமானே? எங்கப்பா எனக்கு புது டென்னிஸ் பால் வாங்கி தந்துருக்கு" என்று ட்ரவுசர் பைக்குள்ளிருந்து புதிய பச்சை நிற பந்தினை எடுத்து பெருமாளிடம் காட்டினாள் கார்த்தி. " சரி போவோம் " என்று தனது பேட்டினை எடுத்துக்கொண்டு சென்றான். சாலையே மைதானம். " அண்ணே ! 1  பிச் கேட்ச் சரியா ?" என்றான் கார்த்தி. "லேய் ! சின்ன பப்பவாலே நீ ! 1  பிட்சா ? ஏன் 2 பிட்ச் வச்சி விளையாடேன் . சும்மா போடுடே பந்த , அடிச்சா சிக்ஸ் , போர் தான் " என்று கூற விளையாட்டு ஆரம்பம். வழக்கம் போல் பெருமாள் பேட்டினை வீசிக்கொண்டே இருந்தான். பந்து பறந்தது ஆமைக்கண்ணன் வீட்டை நோக்கி. கார்த்தி " அண்ணே !" என்று அலறினான். பந்து வீட்டினுள் தஞ்சம் புகுந்தது. கார்த்தி அழத்தொடங்கினான் . "அண்ணே ! நீ தா பந்த வாங்கிதரணு ! எங்கப்பா  ஏசும் (திட்டும் )" என்று கூறி கண்ணைக் கசக்கிக் கொண்டே கதறினான். ஆமைக்கண்ணனின் வீட்டினுள் இதுவரை பலமுறை பந்துகள் பறத்தப்பட்டுள்ளன. பந்துகளுக்கு அது ஒரு வழிப்பாதை, மீண்டு வருதல் இயலாது.  அழுது கொண்டிருக்கும் கார்த்தியிடம் " பொறுடே !  என்னத்துக்கு அழுக இப்போ ? நா போய் கேட்டுட்டு வாரே" என்று குறைந்தபட்ச நம்பிக்கையுடன் அவரின் வீட்டை நோக்கி சென்றான்.  உள்ளே ஆமைக்கண்ணன் பந்தினை கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பெருமாள் வெளியே நின்றவாறே "அண்ணே ! பந்து ?" என்று தொக்கினான்.
" பந்தா ? என்ன மண்ணாங்கட்டிக்குல வீட்டுக்குள்ள அடிக்கே ? "
"தெரியாம அடிச்சிட்டேணே ! இனி வராதுணே  "
"தெரியாம எவளோ தரம்ல அடிப்பே ! ஒங்கப்பனால வீடகட்டி விட்டான் ! இங்கயே அடிச்சிகிட்டு இருக்க ? "
"அண்ணே ! இப்போ பந்த தரபோறீங்களா ? இல்லையா ? " என்றான் பெருமாள் கோபத்துடன்.
"பந்துதானால இந்தா " என்று கூறிய வாறே அருகில் இருந்தா அரிவாளினை எடுத்து பந்தினை இரண்டு துண்டாக்கினார்." இந்தால ! ஒன்ன வந்து , இப்போ ரெண்டா கொண்டு ஓடுல " என்று அவனை நோக்கி தூக்கிவீசினார். அதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி கதறி அழுதான். பந்தினை பொருக்கி கொண்டு வெளியே வந்தான் பெருமாள். " எனக்கு தெரியாது ! நீ தா புது பந்து வாங்கித்தரணும்" என்று கூவினான். புது பந்து வாங்கவேண்டியது தான் வேறு வழியே இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டான் பெருமாள். தனது ட்ரவுசர் பாக்கட்டினை தடவியபடியே உள்ளே இருந்தா காசனை கணக்குப் போட்டான். "ஒரு 10  ரூபாய் நோட்டு, நான்கு 1  ரூபாய் காசுகளும் குலுங்கின. 14  ரூபாய். செய்வதறியாது திணறினான். அவனது மனதில் கீழேயுள்ள விலைப்பட்டியல் பளிச்சிட்டு மறைந்தது.
                      ஆட்டு கால் சூப் -                              ரூ 3
                     ஆட்டு இரத்த பொரியல் -               ரூ 7
                     ஆட்டு குடல் வறுவல் -                  ரூ 7
                     ஆட்டு  ஈரல் ஆயில் ரோஸ்ட்  -  ரூ 10
                  மூன்று வாரங்களாய் சிறிது சிறிதாய் சூப் மற்றும் இரத்த பொரியல் உண்ண பெருமாள் சேர்த்த காசு. இன்று ஒரு மட்டை அடியில் கணநேரத்தில் காணமல் போகபோகிறது. ஏமாற்றம் . ஓர் பந்தும் , ஆமைக்கண்ணனும் அவனது சூப்பிற்கு உளை வைத்ததாகவே உணர்ந்தான். கோபம் உள்ளே கொழுந்து விட்டெரிந்தது என்றாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் "சரிடே ! வா யூசுப் கடைக்கு போவோம் பந்துவாங்க " என்று கார்த்தியை அழைத்துக் கொண்டு விரைந்தான் பெருமாள். போகும் வழியில் சாலை ஓரக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த விலைப்பட்டியலை கண்டதும் மீண்டும் ஒருமுறை மனதில் குமுறினான். யூசுப் கடைக்குள் சென்றதும் கார்த்தி முகத்தில் சிறு மலர்ச்சி. கன்னங்களில் வழிந்து காயிந்து போயிருந்த கண்ணீர் தடத்தினை துடைத்துக்கொண்டான். நேராகப் போய் ஓர் பச்சை நிற டென்னிஸ் பந்தினை எடுத்து பெருமாளிடம் காட்டினான். பெருமாள் அதன் விலையை நோக்கினான். ரூ 10 . கடும் வருத்ததுடன் பாக்கட்டில் இருந்து 10  ரூ எடுத்து அவனிடம் கொடுத்தான். இருவரும் பந்துடன் வெளியே வந்தனர். சிறிது தூரம் சென்றதும் பெருமாள் ஏதோ எண்ணியவனாய் நின்றான் . "என்னணே ?" என்றான் கார்த்தி. " கொஞ்சம் இரு இப்போ வாரே" என்று கூறிவிட்டு மீண்டும் கடைக்குள் சென்றான் . "எண்ணே! 1  ரூவாய்க்கு கலச்சி ( கோலிகுண்டு ) குடுங்கணே " என்றான் பெருமாள். "சின்னதா ? பெருசா டே?" என்றார் கடைக்காரர்.
" சின்னது எவளோ ? பெருசு எவளோ ?"
"சின்னது நாலணா (25  பைசா ) , டொம்மர் (பெரிய கோலிகுண்டு ) அம்பைசா ( 50  பைசா )" என்றார் .
"ஹ்ம்ம் ! ரெண்டு சின்னது . ஒரு டொம்மர் குடுங்க ".
                   மூன்று கோலி குண்டுடன் கடையை விட்டு வெளியேறினான் பெருமாள். அதனைக் கண்ட கார்த்தி " என்னணே கோலிகுண்டு வெளையாட போறோமா?" என்று கேட்க , "கிர்க்கெட்டையும், கலச்சியும் சேத்து வெளையாடுவோம் " என்றான் பெருமாள் பலமாய் சிரித்துக்கொண்டே. "அண்ணே ! டொம்மர் எவளோணே ? என்றான் கார்த்தி. " அம்பைசா" என்றான் பெருமாள் . 
                           இருவரும் ஆமைக்கண்ணனின் வீட்டின் அருகில் மறைவாக ஓர் இடத்தில் போய் நின்றார்கள்.  கோலி குண்டுகளை கார்த்தியிடம் கொடுத்துவிட்டு பெருமாள் பேட்டுடன் நின்றான். " போடுடே சின்ன கலச்சிய" என்றான் பெருமாள். திட்டம் அறியாமல் கோலிகுண்டினை எறிந்தான் கார்த்தி. பெருமாள் மட்டையால் ஓங்கி அடிக்க அது ஆமைக்கண்ணனின் வீட்டு ஓட்டின் கீழிருக்கும் மரக்கட்டையின் பட்டு தெறித்தது. நடந்ததை கண்டு கார்த்தி பதட்டமடைந்தான். " எண்ணே வேண்டாம்ணே ! நா போறே எனக்கு பயமா இருக்கு " என்று பம்மினான். " அதெல்லாம் ஒண்ணு ஆகாது ! அவன் ஒரு இழவும் கிழிக்கமுடியாது ! நீ போடுடே , பந்த ரெண்டாக்குனாம்லா அவன் மண்டைய ரெண்டாக்கம விட கூடாது. நீ டொம்மரப்போடு !" என்றான் பெருமாள். கார்த்தி வீச மீண்டும் ஓங்கி அறைந்தான் . அடித்த அடியில் அது ஆமைக்கண்ணன் வீட்டு ஓட்டினை பொத்துக்கொண்டு வீட்டினுள் புகுந்தது. "எவம்ல" என்று கூவிக்கொண்டே வெளியே வந்தார் ஆமைக்கண்ணன். இருவரும் தெறித்து ஓடினார்கள். பெருமாளின் அங்கமெல்லாம் வாய் முளைத்து சிரிப்பதை போல் ஒரு உணர்வு . ஓட்டை உடைத்தது, ஆமைக்கண்ணனின் மண்டையையே உடைத்ததை போல் பெருமாளுக்கு ஒரு பேரானந்தம்.
                                பின்னொருநாள். மழை பொழிந்துகொண்டிருந்த மாலை நேரம். மழைக்காக கோவிலில் ஒதுங்கினான் பெருமாள். எதிர் இருந்தா ஆமைக்கண்ணனின் வீட்டை நோட்டமிட்டான். வீட்டின் ஒரு கதவு திறந்தநிலையில், உள்ளே கட்டிலில் அமர்ந்துகொண்டு ஆவிபறக்கும் காபியினை ஆரச்செய்து கொண்டிருந்தார் ஆமைக்கண்ணன். வீட்டின் நடுவே ஓர் பாத்திரம். வீட்டினுள் ஓட்டின் வழியாக ஒழுகிக்கொண்டிருந்த நீரினை சேமித்துக் கொண்டிருந்தது. அக்காட்சியினை கண்டதும் பெருமாளுக்கு ஏதோ ஓர் குற்ற உணர்வு .
                இன்றும் அவ்வுடைந்த ஓட்டினைப் பார்க்கும் போது அதே உணர்வு . அவ்வோட்டை இன்றும் அங்கே இருக்கிறதா என்ன ? . வீட்டில் அவர் இல்லை. வீடு வீடாகவே இருக்கிறது . ஓடு ஓடாகவே இருக்கிறது. ஆனால் ஓட்டை மட்டும் ஒளியால் நிறைந்திருக்கிறது . ஒருவித வெளிபடுத்த முடியாத  மனநிலையில் அவ்வீட்டைவிட்டு வெளியேறினான் பெருமாள் கையிலும், மனத்திலும் கனத்துடன. 
Download As PDF

Thursday, January 20, 2011

கந்தகமும், கட்டெறும்பும் !

                        எங்கோ பல மைல் தொலைவிலுள்ள ஒரு அடர்ந்த காட்டினைக் குளிர்விக்கச் சென்று கொண்டிருக்கும் இம்மேகம், அக்காட்டிலே பிறந்து, வளர்ந்து, பூத்துக் குலுங்கும் "லந்தனா" மலரின் தேனைச் சுவைத்துக் கொண்டிருக்கும் வண்டு , அச்செடியின் அடியே மதியம் உண்ட எலியினை உருண்டு செமித்து கொண்டிருக்கும் நாகம், அக்காட்சியினை மரத்தின் மேலே அமர்ந்தவாறு காணும் காகம், இதோ தன் வாழ்க்கைப் பக்கத்தை பகிர்ந்துகொண்டு இருக்கும் அவன் அனைத்தும் , அனைவரும் ஒன்றுபட்டோர். நிறத்தால் ஒன்றுபட்டோர்! .
                                      இதோ அவன் அரக்க, பறக்க ஓடிக்கொண்டிருக்கிறான் அவனது வீட்டினைநோக்கி. அவன் தாயிடம் ஒரு கேள்வி. அக்கேள்விக்கு அவர்களின் பதில். அதற்குப்பின் அவனது மனநிலை இவை அனைத்தும் அவனது மனக்கண்ணில்  திரைப்படமாய். அக்கேள்வியின் உதயம் கண்டிப்பாக அவனுளில்லை. இலக்கை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கும்  அவன் வெறும் அம்பே !.
                           அரைமணி நேரத்திற்கு முன்பு , அவன் வழக்கம் போல் தட்டெழுத்து பயிற்சி முடிந்து அருகிலிருந்த அங்காடியில் ஒரு பாக்கெட் மிட்டாய் வாங்கிக்கொண்டு வழியில் இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.  வீட்டை அடைந்தான். உள்ளே அத்தைக்கும் , மாமாவுக்கும் பலத்த வாக்குவாதம். சத்தம் தெருவரை தெளிவாய் கேட்டது. தாழிடாத கதவினை திறந்துகொண்டு "மாமா" என்று கூவிக் கொண்டே உள்ளே சென்றான். அவனைக் கண்டதும் "வாடா மருமவபுள்ள ! என்ன சங்கதி " என்று வினவினார். "எனக்கு பர்த்டே மாமா இன்னைக்கு !" என்றான். "அப்படியா ! இந்தா 5 ரூவா போறவழியில அண்டி, கிஸ்மிஸ் வாங்கி சாப்புடு " என்று கையை பிடித்து குலுக்கினார். அருகிலிருந்த அத்தையோ " வந்துருச்சி கட்டெறும்பு காலங்காத்தாலே! " என்று அலுத்துக்கொண்டார். அத்தை எப்போதும் அவனை "கட்டெறும்பு" என்றே அழைப்பதுண்டு. அதனை அவன் "சீனி" அதிகம் உண்பதால் அவ்வாறு அழைப்பதாக வெகுகாலமாய் எண்ணிக்கொண்டிருந்தான் . பொதுவாக அவனை அப்படி யார் அழைத்தாலும் அவன் வருத்தமோ, கோபமோ கொள்வதில்லை. ஆனால் அன்று என்னவோ பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு. " அத்த ! இன்னிமே அப்படி கூப்டாதீங்க சொல்லிட்டேன் " என்றான் காட்டமாய். ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த அத்தைக்கு ஒரு சின்னஞ்சிறு பொடியன் எதிர்த்து பேசியதும் அத்தையை "ஆத்தா" ஆட்க்கொண்டுவிட்டாள். "அட சின்னபயபுள்ள ! கோவத்தபாரு ! நீயே தீக்குச்சிக்கு தப்பிபிறந்தவன் தெரியுமால உனக்கு ! நீ பெறக்கும் போது உங்கம்மா  உன்ன வேண்டாம்னு நெனச்சி ஆஸ்பத்திரில இருக்கும்போது தீக்குச்சியில இருக்கிற "கந்தகத்த"தின்னுட்டால  ! ஆனா நீ எப்படியோ தப்பிப் பிறந்துட்ட. அந்த விட்ட குறைதான் இப்படி கருப்பா கட்டெறும்பு மாதிரி இருக்க ! உங்க அக்கா, தங்கசியப் பாத்தியாலே ? செவப்பா இருக்காளுங்க ! ஓடு ! ஒங்கம்மாகிட்ட போய் கேளு!" என்று பொரிந்து தள்ளி பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு வழியாக. 
                                                 அருகிலிருந்த மாமாவோ சற்று கோபத்துடன் "ஏண்டீ ! புள்ள பிறந்தநாளுன்னு வந்துருக்கான் ! நீ என்னலாமோ தேவ இல்லாம பேசுறய ! " என்று கண்டித்தார். அவன் கையில் மிட்டாய் பாக்கெட்டுடன் என்ன பேசுவதென்று தெரியாமல் உறைந்து போய் நின்றான்.  இயல்புக்கு வர அவனுக்கு சில நிமிடங்கள் ஆயிற்று. மிட்டாய் பாக்கெட்டை அங்கேயே போட்டுவிட்டு , மாமா கொடுத்த 5 ரூபாயை அருகிலிருந்த மேஜையின் மீது வைத்துவிட்டு வீட்டினை நோக்கி ஓடினான். இதோ இப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கின்றான்.
                                               வீட்டினை  நெருங்க நெருங்க  அவனது ஓட்டத்தின் வேகம் மிதமானது. ஓட்டமும் , நடையும், பதட்டமும் கொண்டவனாய் வீட்டினுள் நுழைந்து சோபாவில் போய் அமர்ந்துகொண்டான். இப்பொழுது அக்கேள்வியின் எடை மனதில் பன்மடங்கு பெருகி இருந்தது. உள்ளே பற்றி எரியும் நெருப்பினால் உருக்கப்பட்ட கண்ணீர் அவனது விழிகளில் தேங்கி நிற்கிறது. அவனது தாய் அடுக்களையில் இருந்து கையில் ஒரு கிண்ணத்துடன் வெளியே வந்தார். "ராசா ! வந்துட்டயா  எல்லாருக்கும் முட்டாய் குடுத்துடயா? இந்தா சீம்பால் செஞ்சிருக்கேன் சாப்பிடு" என்று கிண்ணத்தை கொடுத்தார்.             
                                      "சீம்பால்"  அவனை எப்போதும் பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு சுராபானம். என்றாலும் மனதில் பாரம் இருக்கும்போது நாவிற்கும், வயிற்றிக்கும் உள்ள தொடர்பில் ஒரு தற்காலிக துண்டிப்பு இயற்கையன்றோ ? அவனோ இயற்கையின் சிறு தூசு. அவனது முகத்தினைக் கண்டதும் தாயிற்கு ஏதோ கணிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். "என்னாச்சுயா ! முகம் வாட்டமா இருக்கு ? கண்ணுவேற கலங்கி இருக்கு ? என்னாச்சு !" என்று வினவினார். "எம்மா ! நீ என்ன பிடிக்காம தா பெத்தயாமா ?" என்று கேட்டான் சற்றும் யோசிக்காமல். அம்மாவிற்கு அதிர்ச்சி என்றாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சிறுபுன்னகையுடன் அவனது அருகில் அமர்ந்தார். "என்னாச்சி ! யார் அப்படி சொன்னா?" என்று கேட்க , "அத்த வீட்டுக்கு முட்டாய் குடுக்கப்போனேனா அப்போ அத்த தான் நான் பெறக்கும்போது நீ தீக்குச்சி சாப்டுடேன்னு சொன்னாங்க ! அப்போ உனக்கு நா பிறக்கிறது பிடிக்கலையாமா ? " என்று அன்னையை எதிர்நோக்க முடியாமல் அவரது மடியில் முகம் புதைத்து அழுதான். அம்மா தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் அவனை சமாதானம் செய்ய முயன்றார். " அடடா ! அத்த சும்மா வெளையாட்டுக்கு சொல்லிருக்கா ! அதா போய் ! பிள்ள அழகூடாது . ஆம்பளப்புள்ள அழலாமா? . அக்கா , தங்கச்சிய விட உன்னதான் ரொம்ப பிடிச்சி பெத்துகிட்டேன் தெரியுமா? நீ வேணும்னா அப்பா வந்ததும் கேளு " என்று ஆறுதல் செய்ய முயன்றார். என்றாலும் அவன் மனம் ஆறவில்லை. கண்ணீரோடு கரைந்துகொண்டே இருந்தான்.
                        பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த அவனது அக்கா வீட்டிற்குள் வந்தாள். "எம்மா !! சீம்பால் ரெடியா ? சீக்கிரம் தாமா ? " என்று கூவினாள். " அது அப்போவே ரெடி ஆயுருச்சி போய் எடுத்து குடி " என்றார் அம்மா. " ஆமா உம்பிள்ளைக்கு மட்டும் நல்ல ஊட்டு ! நாதான மொதல்ல கேட்டே " என்று கடிந்து கொண்டாள்.ஏற்கனவே கோபத்தில் இருந்த அவன் அக்காவை நோக்கி "ஏன்  நீங்க ரெண்டாவதா குடிக்கமாட்டீங்களோ ?" என்றான் வெறிகொண்டவனாய். "நீ பேசாத ! ஆயிரந்தான் இருந்தாலும் என் எச்சி பால குடிச்சி வளந்தவன் நீ " என்றாள் அக்கா. இதை அடிக்கடி அவனது ஆச்சி சொல்லக் கேட்டிருக்கிறான். வம்ச வியாபாரக் கொள்கையின் படி பாட்டியிடம் இருந்து பேத்தியை அடைந்திருக்கிறது. மீண்டும் ஒரு அவமானத்தால் பொருமினான். " நான் ஒண்ணு எச்சி பால குடிக்கல்ல ! அம்மா தினமும் குளிப்பா ! இன்னமா ? என்று கேட்டான் அப்பாவியாய். அம்மாவும் அக்காவும் சற்றென்று சிரித்து விட்டார்கள். அவனால் சிரிக்கமுடியவில்லை. சில மணிநேரம் கடந்தது. அமைதியானான். சீம்பால் நினைவுக்கு வந்தது.
                               சீம்பாலினை அதன் கருப்பட்டி கலந்த சுவையினை ரசித்து ருசித்தான். அப்போது சுவற்றின் அருகே இருந்து ஒரு கட்டெறும்பு மெதுவாய் அவனது காலின் அருகே வந்து சிந்தியிருந்த சீம்பால் துளியினை சுவைத்துக்கொண்டிருக்கிறது. அத்தை சொன்னது நினைவுக்கு வர கட்டெறும்பை முதல் முதலாய் கூர்ந்து கவனித்தான். அதன் செய்கையும், நிறமும் சற்று கவர்ச்சியாகவே இருப்பதாய் உணர்ந்தான். திடீரென்று ஏதோ எண்ணியவனாய் அடுக்களையை நோக்கி ஓடினான். ஏதோ தேடினான். கிடைத்தது தீப்பெட்டி. உள்ளே இருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து ஆழ்ந்து அதன் நுனியினை நோக்கினான். இதையா அம்மா உண்டிருப்பாள்? இதற்கு தப்பிப் பிழைத்தா நான் வாழ்த்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணினான் .  தீக்குச்சி நுனி  கருப்பும் ,  கடுஞ்சசிவப்பும் கலவையாய் அவனுக்கு தென்பட்டது. பலவாறாக மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது . அந்த பிஞ்சு  மனதில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு நாட்கள், மாதங்கள் , ஏன் வருடங்களே கூட ஆகலாம்.
                                   
                            இன்று அவனுக்கு வயது 24 . ஆனால் அந்த 9 ம் பிறந்தநாளை மட்டும் இன்றும் மறக்க முடியவில்லை. அன்று கேட்ட கேள்விக்கு இன்றும் பதில் முழுமையாய் அறியவில்லை அதை அவன் அறியவும் விரும்பவில்லை. என்றாலும் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அக்கேள்வியின்  நினைவுகள் வடுவில் ஒரு கீரலை பரிசாக அளிக்கும். 9  வயது சிறுவனாய் அழத் தோன்றும். "ஆண்பிள்ளை அழுவது அசிங்கமன்றோ ? மனதிற்குள் ஆறுதலடைவான்.

   "ஆதவன் என்றொருவன்  இல்லையேல் அகிலமனைத்தும் "அவனின்" நிறம் "
                                                                                           -  இப்படிக்கு
                                                                                               அவன்.
Download As PDF