Sunday, February 7, 2010

களவும் கற்று மற

இடம் :- நாகர்கோயில்
நேரம் :- மாலை 06 :35
கிழமை : வெள்ளி

"மக்கா முத்து! நாளைக்கு சாயுங்காலம் கிரிக்கெட் விளையாடுவோம்ல ! ஏற்கனவே 4 பேர் விளையாட்டுக்கு ரெடி . பேட் இருக்கு ! பால் இனி தான் வாங்கணும் . பைசா வேற இல்ல " என்றேன். நாங்கள் இருவரும் டியுசன் முடிந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். "பைசாவா ? எதுக்கு மக்கா ? தேவை இல்ல. வழக்கம் போல " என்று கூறி கண்ணடித்தான். நான் அவனைப் பார்த்து சிறிது அதிர்ச்சியுடன் சிரித்தேன். "டேய் ! ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு " என்றேன்." பயமா ? ஏம்ல நீ சின்ன பையனா பயபடுறதுக்கு நாம இப்ப 7ம் கிளாஸ் !" என்று காலரை தூக்கிவிட்டான். "களவும் கற்று மற" தமிழ் புக்ல படிச்சிருகோம்ல என்று தமிழையும் இந்த திருட்டுக்கு கூட்டு சேர்த்தான். "தமிழ் புக்ல சொல்லிருக்கு ! வேறு வார்த்தையே கிடையாது " என்று மனதில் நினைத்துக்கொண்டு "சரி" என்று எனது சம்மதத்தை தெரிவித்தேன். எதிரில் ரங்கு என்ற ரங்கசாமியும் , கார்த்தியும் வந்தார்கள். கார்த்திக்கு இந்த திட்டம் பற்றி முன்னரே தெரிந்திருகிறது . அதனால் முத்துவைப் பார்த்து "போலாமா திருவிளையாடலுக்கு " என்றான் . ரங்கு ஏதும் அறியாதவனாய் "எங்க மக்கா போறோம் " என்றான். முத்துவும் ,கார்த்தியும் சிரித்தனர். நான் ரங்குவிடம் திட்டத்தைக்கூற அதிர்ந்தான்." மக்கா ! அதெல்லாம் தப்புலா ! எங்க அம்மா சொல்லிருக்கு " என்று பின்வாங்கினான். நான் அவனை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் தமிழை ஆயுதமாக்கினேன். ஆனால் "களவும் கற்று மற" அவனை திருப்திபடுத்தவில்லை . இவனை வேறு விதமாய் அணுகவேண்டும் என்று எண்ணிக் கொண்டு " லேய் ! நீ என்ன சின்ன பப்பாவா ? பயந்தோனி பக்கடா !! பருப்பு சட்டிய நக்குடா !" என்று கிண்டலடிக்க அவனது கழுத்து நரம்புகள் புடைத்தன. " போலே ! நான் ஒண்ணும் சின்ன பையன் இல்ல !! பயபடுற ஆள் இல்ல பாயுற ஆள் " என்று போன சனிக்கிழமை பார்த்த "பாயும் புலி " படத்தின் பஞ்ச் ஒன்றை எடுத்துவிட்டு திருட்டில் இணைத்துக்கொண்டான் அரைமனதாக. முத்து, கார்த்தி,நான்,ரங்கு(1/2 மனதாக), திட்டத்தை செயல்படுத்த சென்றோம் முஹம்மது யூசுப் கடைக்கு.
முத்துவும்,கார்த்தியும் திருடுவதில் சிறிது தேர்ந்தவர்கள். நான் இரண்டாம் ரகம். அதிக பயம் கொஞ்சம் தைரியம். ரங்குவிற்கு இதுவே முதல்அனுபவம். கடைக்குச் செல்லும் வழியில் திட்டத்தை சிறிது விவரமாக விளக்கினான் முத்து. "டேய் !! ரொம்ப நேரம் கடைக்குள்ள இருக்கக் கூடாது. எல்லோரும் சேர்த்து போக கூடாது . நீ எடுக்க வேண்டியது எடுத்துட்டு வெளியே போய்டணும். முக்கியமான விஷயம் யாராவது மாட்டினா யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது . முடிச்சிட்டு எல்லாரும் சவேரியார் கோவில் பக்கத்தில இருக்கிற குமார் பரோட்டா கடைக்கு வந்துருங்க , என்கிட்ட 10 ரூபா இருக்கு , பரோட்டா சாப்டுட்டு போலாம் " என்றான். யூசுப் கடையும் வந்தது. ரங்கு சிறிது நடுங்கினான். இம்முறை பந்தை திருட வேண்டியது என் பொறுப்பு. அதைத் தவிர அவனவன் திருடும் பொருள் அவனவனுக்கு சொந்தம் என்பது திட்டத்தின் சிறப்பு அம்சம். முதலில் முத்து உள்ளே நுழைந்து படிக்கும் பையனைப் போல் பென்சில் , பேனா பிரிவிற்குச் சென்று துலாவிக் கொண்டிருந்தான் . அவனுடைய அன்றைய இலக்கு ஒரு "Geometry பாக்ஸ்" . இரண்டாவதாக நான் நேராக விளையாட்டுப் பொருள்களின் பிரிவிற்குச் சென்று பந்துகள் இருக்கும் பக்கெட் அருகே நின்றுகொண்டிருந்தேன். கடையில் வேலை செய்யும் பையன் " என்னனே வேணும் ?" என்றான். "பந்து வேணும் " என்றேன். "ரப்பர் பாலா ? டென்னிஸ் பாலா ? " என்றான் . " ரப்பர்" என்றேன். அவன் பந்துகள் இருக்கும் பக்கெட்டை காட்டி "பாருங்க , எது வேணும்னு சொல்லுங்க" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றான். அவன் செல்வதை கண்களால் பின்தொடர்ந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது "இறகு பந்து". கண்கள் விரிந்தன. எனது நினைவுகளில் ரம்யமாக தோன்றினாள் "ரம்யா".
ரம்யா எனது எதிர்வீட்டு பெண். சிறுவயது தோழி. சமீபத்தில் அவளுக்கும், எனக்குமிடையே நடந்த "இறகு பந்து" போட்டியில் நான் தோற்கடிக்கப் பட்டேன். தோல்வியை ஒத்துக் கொள்ளமுடியாமல் கோபத்தில் அவளுடைய இறகு பந்தினை சாக்கடையில் தூக்கி வீசி ,அதைக் கண்டு அவள் அழுவதைப் பார்த்து ரசித்தேன். அன்றிலிருந்து அவள் என்னுடன் பேசுவதில்லை. இறகு பந்தினால் உதிர்ந்த நட்பினை இறகு பந்தின் மூலமாகவே ஒட்டவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ரப்பர் பந்தினை மறந்து இறகு பந்திற்கு அருகே சென்றேன். முத்து எனது நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தான். கன நேரத்தில் இறகு பந்தினை எடுத்து trouserல் சொருகினேன். முத்து கோபமாக என்னைப் பார்த்து ரப்பர் பந்தின் அருகில் செல்லுமாறு கண் ஜாடை செய்தான் . நான் ரம்யாவுடன் ஏற்படப் போகும் நட்பினை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அந்த மகிழ்ச்சியில் பந்து திருடுவது ஒன்றும் பெரிய கடினமான காரியமாக தெரியவில்லை. சுலபமாக எடுத்து வலப்பையில் சொருகினேன். மூன்று பேரும் என்னையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். நான் பந்து எடுத்ததை உறுதி செய்தவுடன் முத்துவும், கார்த்தியும் கண் ஜாடை செய்துவிட்டு கடையை விட்டு வெளியே சென்றனர். ரங்கு மிகுந்த பதற்றத்துடன் எனது அருகில் வந்தான் ." லேய் ! எனக்கு செம பயமா இருக்கு . இதெல்லாம் தப்புலே!" என்று போதனை செய்தான். " லேய் ! முடிஞ்சா நீயும் எதாவது எடு ! இல்ல பொத்திகிட்டு பின்னாலயே வா " என்று கோபமாக கூறினேன். கடைப்பையன் மீண்டும் என்னிடம் வந்து " என்னனே பந்து வேணாமா ? " என்றான். " இல்ல தம்பி ! பந்து quality சரி இல்ல , ஒரு அடி போட்ட பொக்குனு போயிரும் போல இருக்கு ! வேண்டாம்பா " என்று இரண்டு பைகளிலும் கையையை விட்டுக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன் . அதுவரை அமைதியாக இருந்த ரங்கு சிறிது கோபங்கொண்டான். கடையின் வாசலை நான் கடக்கும் போது ரங்கு ஓடி வந்து "என்னையா பொத்திகிட்டு வர சொல்றே ?" என்று கோபமாக எனது இடது கையை இழுக்க ,பையில் இருந்து கை வெளியே வர , கையில் இருந்து இறகு பந்து வெளியே வந்து பறந்து கீழே விழ , முதலாளி பார்த்து விட ," அடி திருட்டு நாய்ங்களா !" என்று கர்ஜித்து கொண்டே வெளியே ஓடி வந்தார். அடுத்த கணம் நானும்,ரங்குவும் தலைதெறிக்க ஓடி ஆரம்பித்தோம்.
தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த முத்துவும்,கார்த்தியும் ஓட்டம் பிடித்தனர். ரங்குவின் இச்செயல் பெருங்கோபத்தை உண்டாக்கியது. இருவரும் முறைத்துக்கொண்டே ஓடினோம். இறுதியில் இருவரும் குமார் பரோட்டா கடையை அடைந்தோம். முத்துவும், கார்த்தியும் எங்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். நாய் போல மூச்சி வாங்கிக் கொண்டு அவர்களின் முன் நின்றோம். "பந்து எங்க ?" என்றான் முத்து. " அடபாவி கொஞ்சம்ன மாட்டிருப்போம் தெரியும்ல ! எல்லாம் இந்த குரங்கு பயலால வந்தது. இறகு பந்த தட்டிவிட்டுடான் " என்று ரங்குவை குற்றம் சாட்டினேன். முத்து சிறிதும் லட்சியம் செய்யாமல் "பந்து இருக்குல்ல அது போதும் . வாங்க பரோட்டா சாப்டலாம் " என்றான். மாடிப்படியேறி சென்றோம் . செல்லும் வழியில் " லேய் மக்கா ! சாரி டே! தெரியாம பண்ணிட்டேன். கொஞ்சம்ன மாட்டிருப்போம் " என்று மன்னிப்பு கேட்டான். " அதுதான் நடக்கலலாடே விடு " என்றேன். ஆளுக்கு இரண்டு பரோட்டா வாங்கி நன்றாக பிய்த்து போட்டு சால்னாவில் பரோட்டாவை மிதக்கவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம். எனக்குள் பலவாறாக எண்ணம் தோன்றியது. செய்வது சரியா? தவறா ? " என்ற கேள்வி. அருகில் இருந்த ரங்கு " என்னடா ரொம்ப யோசிக்கிற ? அடி வாங்கிருந்த எப்படி இருக்கும்னு யோசிக்கிறாயா? " என்றான். " அட போலே ! யூசுப் கிட்ட மாட்டி அடி வாங்கினா கூட பரவாயில்ல . ரம்யாவுக்காக கஷ்டப்பட்டு திருடுன பந்து போயிருச்சே !! அது தான் ஒரு மாதிரி இருக்கு " என்றேன். ரங்குவின் காதுகள் சிவந்தன . "மவனே ! உன்ன திருத்தவே முடியாது " என்று மண்டையை தட்டினான். நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். "சரி ! எல்லாரும் நாளைக்கு விளையாட வந்துருங்க " என்று ஆணையிட்டான். "சரி " என்றோம். அப்போது கார்த்தி "கொஞ்சம் பொறுங்கலே " என்று சொல்லிக்கொண்டு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கவரினை வெளியே எடுத்தான். "அடப்பாவி " என்றேன். கவரின் உள்ளே இருந்து இரண்டு "பரோட்டாகளை" எடுத்தான். "பரோட்டாவையும் திருடியால நீ " என்றான் ரங்கு. " களவும் கற்று மற மக்கா " என்றான் முத்து . அனைவரும் பலமாக சிரித்தோம். இரண்டு பரோட்டா நான்காக பங்குவைக்கப்பட்டது . அனைவரின் வயிறும் நிரப்பப்பட்டது. வீடு நோக்கிப் பயணப்பட்டோம்.

தற்போதய நிலை :
================
நான் - பெங்களூரில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறேன்.
ரங்கு - Mechanical engineer . இந்தியாவின் தலை சிறந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான் .
கார்த்தி - புனேயில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறான்.
முத்து - இந்திய ராணுவத்தில் நாட்டைக் காக்கும் பணியில் உள்ளான்.
ரம்யா - அழகான இரட்டைக் குழந்தைகளின் தாய். தனது கணவருடன் மதுரையில் வாழ்ந்து வருகிறாள்.

பி.கு :களவும் கற்று மற என்பதின் பல்வேறு விளக்கம்

*அறிந்த விளக்கம் :
==================
*திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு
பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவுகாதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.

*அறியாத விளக்கம் :
===================
*மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில்
கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.

நன்றி --> http://groups.google.ge/group/piravakam/browse_thread/thread/0ae2202345ee4840 Download As PDF