Thursday, August 7, 2014

தலைவலி"மஞ்சள் வெயிலில் பறவைகள் தம் கூடு நோக்கிப் பறக்கின்றன." ஹ்ம்ம்.. இவ்வாறா ஆரம்பிப்பது? வேறு எவ்வாறு ? எவ்வாறு வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவரோ இவ்வாறெல்லாம் ஆரம்பிக்கக் கூடாது என்று 10 கட்டளைகள் இட்டுள்ளார்.

இப்போது எனக்கிருக்கும் ஒரே பிரச்சனை கதையை ஆரம்பித்தல் அல்ல. இந்த தலைவலி தான். அதுவும் ஒற்றைத் தலைவலி. சரியான நேரத்தில் வந்துவிட்டது எதிர்பார்த்தபடியே. இல்லையென்றால் எனக்கு காய்ச்சல் வந்திருக்கும். எனது மேஜையின் மீது காகிதங்களும், கையில் பேனாவும், அருகில் ஒரு சாரிடான் மாத்திரையும் இருக்க ஏதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சாரிடான் இதுவே வலிநிவாரணி. வேறதையும் இவ்வுடம்பு ஏற்க மறுக்கிறது என்ன செய்வது. தலைவலியை விட தலைவலி மாத்திரை அளித்த வலி இன்னும் மனதில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கிறது. மாத்திரை வாங்கிவரலாம் என்று கடைக்குச் சென்றால் "என்ன சார்! பார்த்து ரொம்ப நாளாச்சு! ஊர்ல இல்லையா ? " என்றார் கடைக்காரர்.

என்னை தினமும் எதிர்பார்ப்பார் போல. இருந்தாலும் ஒரு மருந்துகடைக்கு அடிக்கடி வருவது உடல் நலத்திற்குக் கேடு. ஆனால் மதுபனைக் கடைக்கு தினமும் செல்கிறேன். அது வீட்டிற்கும் நாட்டிற்கும் உயிருக்கும் கேடு. நாட்டைப் பற்றி என்னவொரு அக்கறை. எனினும்  மதுபானக்கடை செல்லவே மனம் விரும்புகிறது.  மருந்துகடைக்கு ? அது ஒரு சோக கதை விட்டுவுடுவோம் இப்பொழுது.

வலிதான் வெற்றிக்கு வழி. என்றாலும் வாழ்க்கை முழுவதும் வலியுடன் வாழ்ந்தால் வாழ்வதில் என்ன பயன். இப்பொழுது வெற்றியும் பிரச்சனை அல்ல.கதையை இன்னும் ஆரம்பித்த பாடில்லை.

இந்த ஒற்றை தலைவலியை மையாக்கி பேனாவில் நிரப்பி, தலைவலியின் அளவைப் பார்த்தால் பேனா தலைவலியினால் பொங்கி வழியும் என்றே தோன்றுகிறது. அதனால் பாதி தலைவலியினை மற்றும் மையாக்கி பேனாவில் நிரப்பி அதனைக் காகிதத்தில் கதையாய் ஓடவிடலாமா ? பின்னர் இந்த தலைவலி மாத்திரையை பொடியாக்கி அந்த தலைவலி எழுத்துக்களின் மீது மென்மையாக தூவி எங்கும் பரவவிட்டு  அக்காகிதத்தினைத் தலைவலிக்கு வலிக்காத வண்ணம் மெதுவாய் மடித்து அப்படியே விழுங்கிவிட்டால் ? தலைவலி மீண்டும் எனக்குள்ளேயே சென்று விடும் , இப்பொழுது தலைவலியும் அதன் நிவாரணமும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து.

சரி எப்படியாவது ஆரம்பிப்போம். "யுகன் காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் செய்தி தாளினைப் புரட்டிக்கொண்டிருந்தான். வேலையில்லா  பட்டதாரி காலையில் எழுந்து செய்தி தாளினைப் புரட்டுவது இன்றியமையாதது." அடுத்து ..

"அடுத்தெல்லாம் ஒன்றுமில்லை . உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றொரு குரல் என் பின்னே. நான் திடுக்கிடவில்லை. இவ்வாறான குரல்கள் அடிக்கடி எனக்கு கேட்பதுண்டு. எல்லாம் இந்த தலைவலியால் வந்த வினை.

"உன்னிடம் தான் பேச வேண்டும்" என்றது குரல் மீண்டும்.

திரும்பிப் பார்த்தால் ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான உடல். எண்ணிப்பார்த்தால் உடலுக்கு ஏற்ற குரல் வாய்க்கபெற்றிருக்கிறான்.

"யார் நீ ? யாராக இருப்பாய்" என்று யோசிக்கலானேன்.

"நான் தான் யுகன் உனது எழுத்தின்படி என்னை பற்றிதானே எழுதிக்கொண்டிருக்கிறாய்? எழுத்து பொல்லாத எழுத்து எல்லாம் கிறுக்கல்."

"சரி இந்த நாற்காலியில் அமர்ந்து கொள். எனக்கு நிறைய வேலையிருக்கிறது"

"ஆமாம்! உனக்கு மட்டும் தான் நிறைய அலுவல் நாங்கள் எல்லாம் வேலை ஏதுமின்றி இருக்கிறோமா?"

நான் ஏதோ யோசித்தவாறே " கதைப்படி நீ வேலையில்லா பட்டதாரி அல்லவா? இன்னும் வேலையைத் தேடி நாயாய் பேயாய் அலைந்துகொண்டிருக்கிறாய் தானே?" என்று சிரித்தேன்.

"சீ ! வாயை மூடு . இன்று பல் துலக்கினாயா ?"

பல் துலக்க மறந்துவிட்டேன். இம்மறதி தலைவலியால் வந்தது." இல்லை . இக்கதையினை எழுதி முடித்தவுடன் பல் துலக்கவேண்டும் ஆனால் கதைப்படி நீயும் இன்னும் பல் துலக்கவில்லை தானே?. நீ ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கின்றாய். கதைப்படி உனக்கு சிவப்பு சட்டையல்லவா அளிக்க எண்ணிகொண்டிருந்தேன்."

"உன்னிடம் ஒன்று கேட்கிறேன். என்ன நினைப்பில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ எண்ணி எழுதுவதின் படிதான் நாங்கள் அனைவரும் வாழ வேண்டுமா ? நீ என்னை வேலையில்லாதவன் என்று எழுதினாய். நான் ஏதுமின்றி உணவுக்குக் கூட கையேந்துபவன் என்று சித்தரிப்பாய். பல் கூட துலக்கவில்லை என்று நீயே ஒரு முடிவை மனதில் கொண்டு சுவாரசியமாக்க ஏதோ உளறுவாய். இப்பொழுது நான் என்ன நிற ஆடை அணியவேண்டும் என்பதையும் நீயே முடிவு செய்கிறாய். தெரியாமல் தான் கேட்கிறேன் எங்களுக்கும் விருப்பம் இருக்ககூடாதா என்ன ?"

இவன் என்ன பேசுகிறான் . ஒன்றும் புரியவில்லை." யுகன் அவர்களே ! மிக மரியாதையாய் சொல்கிறேன். அமைதியாய் இருக்கவும். நான் உங்களிடம் வழக்காட விரும்பவில்லை. எனக்கு இக்கதையினை எழுதி முடிக்க வேண்டும். பொறுமையாய் இருக்க்க முடியுமென்றால் இருக்கவும். இல்லையென்றால் கதையை இன்னும் விபரீதமாய் எழுத வேண்டிவரும். தங்கள் விருப்பம் என்ன?"

"என்ன மிரட்டுகிறாயா? உனது பேச்சில் ஆணவம் கொஞ்சம் அதிகப்படியாய் இருப்பது உனக்கு புரிகிறதா? கதைகளில் அன்பு, பொறுமை , தியாகம் , அடக்கம் என்று என்னென்னவோ எழுதுகிறாய். சரியாகச் சொல்லப்போனால் போதிக்கிறாய். அதைப் படிப்போர் உள்ளம் உருகவேண்டும். கண்ணீர் கசிய வேண்டும். இதெல்லாம் உனது கதைகளின் போக்கு . ஆனால் நிஜத்தில் நீ ஒரு போலி., எத்தனைக் கதைகளில் எத்தனை மனிதர்களை கொன்றிருப்பாய்? அவர்களின் நிலையினை அவர்களைச் சார்ந்தவர்களின் நிலையினை ஒரு கணமேனும் எண்ணியிருப்பாயா?"

"இப்பொழுது உனக்கு என்ன வேண்டும். எனக்கு எதுவுமே புரியவில்லை .தலைவேறு வலிக்கிறது. சொல்வதை நேர்படச்சொல்"

"ஏன் காதலியை திருப்பிகொடு"

"உன் காதலியா ?" சிரித்தேன் பலமாக.

"சிரிக்காதே ! என்னை கோபமூட்டதே! என்னை பற்றியும் என்றாவது எழுதுவாய். அன்று உன்னிடம் நேருக்குநேராக பல விடயங்களைக் கேட்க வேண்டும் என்று எண்ணி எண்ணிகொண்டிருந்தேன் அது இவ்வளவு விரைவாக நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு நன்றி.

"இப்பொழுது மீண்டும் என்னை நன்றாகக் குழப்புகிறாய். யார் உனது காதலி ஏன் அவளைப் பற்றி என்னிடம் கூறுகிறாய்.?"

"உனக்கு அவளை நன்றாகத் தெரியும். அவள் வாழ்வினைச் சீரழித்தவன் நீதான். அதை உன்னிடம் தானே கேட்க முடியும்"

"தலைவலிக்கிறது. அவள் பெயர் என்ன ?"

"ருக்மணி"
"ருக்மணியா ? அப்பெயர் கொண்ட எந்த பெண்ணையும் எனக்கு தெரியாது"
"எனக்கு அவள் ருக்மணி. உனக்கு உன்னைப் பொறுத்தவரை அவள் லட்சுமி"
"லட்சுமியா ? ஆமாம் இப்பொழுது புரிகிறது. போன கதை எழுதும் போது கூட உன்னை போல என் வீட்டிற்கு வந்திருந்தாள். அமைதியாகவே நின்றாள். எதுவும் பேச முற்படவில்லை. ஆமாம் அவளை உன் காதலி என்கிறாய் ? புரியவில்லையே?"

"நானும் அவளும் வெகு காலமாய் உனது மனதில் இருந்து காதலிக்குக் கொண்டிருந்தோம்"

"எனது மனதிலா? எனக்கு தெரியாமலா?"

யுகன் சிரித்தவாறே "உனது மனதில் இருப்பதனைத்தும் உனக்கு தெரியும் என்ற எண்ணமா? அப்படி இருந்தால் அதனை மாற்றிக்கொள். அறியாமை உன்னிடம் நிரம்ப இருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு அறியாமை ஆகாது,. நீ ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவராக உள்ளேயிருந்து பிரித்து சென்றுகொண்டிருந்தாய்.
பலரைக் கொன்றாய். சிலரை சிரிக்கவைத்தாய். சிலருக்கு உனது விருப்பத்தினை அவர்கள் மேல் புகுத்தி அதுவே அவர்களது மகிழ்ச்சி என்று நீயே எண்ணிக்கொண்டு போலியாய் மனநிறைவடைந்தாய். நானும் ருக்மணியும் பயந்தவண்ணமே எங்கள் இருவரையும் பிரித்துவிட்டாய். மகிழ்ச்சிதானே ?"

"ஆனால் நான் வேண்டுமென்றே செய்யவில்லை"

"உன் கதையைப் படிப்பவர்கள் உன்னைபுகழ வேண்டும். அதற்காக எதையேனும் எப்படியேனும் எழுதலாம் என்றெண்ணி நீ இவ்வாறு கடிவாளமின்றி திரிகிறாய்"

"கதையில் ருக்மணி இறுதியில் மகிழ்ச்சியாகத்தானே இருந்தாள்"

"இன்னும் நான் பேசுவது புரியவில்லையா?. முதலில் என்னைவிட்டு அவளை பிரித்தாய். பின்னர் கதையில் ருக்மணியை அதாவது லட்சிமியை வேசியாகப் படைத்தாய். அதுவும் 49 பேருடன் இருந்த பெண்ணாகவும் , 50 வது ஆளாக ஒரு பெரும் பணக்காரரைத் தேடும் பெண்ணாகவும் சித்தரிதாய். என்னவொரு வக்கிரம் உனது மனதில். ஏன் இவ்வாறு செய்கிறாய்?"

"கதை தானே! என்றாலும் ௫௦வது ஆளாக ஒரு பெரும் அரசனை அல்லவா சேர்த்து வைத்தேன்"

"கதையா ? வெறும் கதையா ?  சரி ஒரு பேச்சுக்கு வைத்துகொள்ளுவோம். உனது தாய் , அல்லது சகோதரி பெயர்களில் ஒன்றினை மட்டும் ஒரு கதபாதிரத்திற்குச் சூட்டி இவ்வாறு சித்தரித்து கதை எழுது பாப்போம்"

"யுகனே ! அதிகம் பேசுகிறாய். "யுகன்" என்பது எனது விருப்பத்திற்குரிய ஒரு பச்சிளம் பாலகனின் பெயர். அவனது பெயரில் இருந்து கொண்டு இவ்வாறு கோபமூட்டும் படி பேசாதே"

"புரிகிறதல்லவா?"

" என்ன செய்ய வேண்டும் உனக்கு"

"எனது ருக்மணி எனக்கு வேண்டும்"

"தலை வலிக்கிறது. சரி!. கொஞ்சம் பொறு !"

அருகில் கிடந்த காகிதங்களில் கடந்த மாதம் எழுதிய "வேசி" கதையினை எடுத்தேன். கிழித்து,கிழித்து,கிழித்து முழுவதும் சுக்குநூறாய் கிழித்து யுகனிடம் அளித்தேன்.

"உனது ருக்மணி எனது லட்சுமி இப்பொழுது மீண்டும் உனது ருக்மணியே! போதுமா ?"

: மகிழ்ச்சி ! ஆனால் இதுமட்டும் போதாது"

"புரிகிறது. ஆக்க பொறுத்த நீ ஆறப்பொறு"

புதிய காகிதத்தினை எடுத்தேன். கதையை இப்படி ஆரம்பித்தல் சாலச்சிறந்தது.

"யுகனும் ருக்மணியும் தங்களது முதல் திருமண நாளினைக் கடற்கரையில் கொண்டாடத் தீர்மானித்து " என்று எழுதி " போதுமா ?" என்றேன் யுகனிடம்.

யுகன் அன்புடன் புன்னகைத்தான் முதல்முறையாக. அவனது கன்னத்தில் அழகு குழி. கதையில் அதையும் மறக்காமல் எழுதவேண்டும்.

"மிக்க மகிழ்ச்சி ! ருக்மணி காத்திருப்பாள். போகட்டுமா ?" என்றான் யுகன்.

"சரி...  எனக்கு லட்சுமி  அவளே உனக்கு ருக்மணி.  எனக்கு நீ யுகன் , ருக்மணிக்கு நீ யார் ? உனது பெயர் தான் என்ன?"

யுகன் சிரித்தவாறே " உனது விருப்பத்திற்குரிய குழந்தையின் பாலகனின் பெயர் தான் எனது பெயரும் . வருகிறேன்" எனக்கூறிச் சென்றான் யுகன்.

என்னை அறியாமல் தலைவலி காணமல் போனது. சரிடோனுக்கு இன்று வேலை இல்லை.  கதையை சீக்கிரம் எழுதி முடிக்க வேண்டும்.
Download As PDF