Thursday, January 31, 2013

முதற்பொய்
பொய்கள் அழகானவை. அற்புதமானவை. விபரீத விளைவுகளை அளிக்காத வரையில்.

விளைவுகளை அளிக்காத பொய்கள் நினைவில் தங்குவதில்லை

அவ்வாறு விளைவுகளை ஏற்படுத்திய பொய்களும் மனம் மறந்து பலகாலம் கடந்த பின்னும் தக்க தருணம் பார்த்து , நாம் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் நினைவினுள் இருந்து வெடித்து வெளியேறும் . அப்படிப்பட்ட ஓர் உணர்வு "அனுமானைப்" பார்த்தபொழுது எனக்குத் தோன்றியது.

பரபரப்பான காலைவேளை. நடக்கக்கூட இடமின்றி மக்கள் தமது தோள்கள் உரச உரச நடந்து கொண்டிருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அனுமானைக் கண்டேன் பல வருடங்களுக்குப் பிறகு.

கண்ட தருணம் என் நினைவுகள் பலகாலம் பின்னோக்கி ஓடி 5ம் வகுப்பு என்ற காலக்கல்லின் அருகில் நின்றவாறு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது . அங்கே எனது பள்ளிக்கூடம். 5ம் வகுப்பு. குமரேசன் வாத்தியாரின் இடக்கையில் எனது வீட்டுப்பாடநூல். வலக்கையில் சிறுத்தையின் தோலினை போர்த்தியதை போன்ற வண்ணத்தில் சூடு போட்ட பிரம்பு .

"யாண்டே ! உங்கப்பட்ட கையெழுத்து வாங்கிட்டு வரல?" என்றார் ஆசிரியர் .

"மறந்துட்டேன்" என்று உண்மையைக் கூறினால் மறக்காமல் இருக்க 5 அடி கிட்டும். பிரம்பு  என் புட்டதைப் பதம்பார்க்கும். அவ்வயதில் உள்ளாடை அணியும் பழக்கம் கூட இல்லை . அடி ஒவ்வொன்றும் தான்  வந்து போன தடத்தை தவறாமல் விட்டுச்செல்லும்.

வேறேதும் காரணம் கூறவேண்டும் . அதாவது  நாப்பிளக்க "பொய்" உரைக்க வேண்டும். தொண்டையில் தேங்கிக்கிடக்கும் எச்சிலை ஒன்றுக்கு இரண்டுமுறை நன்றாக விழுங்கிக் கொண்டேன். "பொய்" உண்மையைப் போன்றே தூய்மையாய் வெளிவர வேண்டுமல்லவாஅது ஆசிரியரை நம்பச் செய்ய வேண்டுமல்லவா?

"எங்கப்பா ஊருக்கு போயிருக்கு சார் " என்றேன் .
"எப்போடே போனா ?"
"போனவாரமே போயிட்டு சார். இன்னும் வரல "
"உங்கப்பதானடே அந்த பெரிய பக்கடா மீசை வச்சிட்டு சிவப்பு சுசுகி பைக்ல வரும் "
"ஆமா சார் "

"அப்போ மயிராண்டி நீ பொய் தான சொல்லுக . நேத்து சாந்தரம் கூட கோட்டார் சுக்காப்பி கடை  பார்த்தேஎன்று கூறும் போதே அவரது முகம் கோபத்தின் உச்சத்தைக் காட்டதொடங்கியது.  நான் அடுத்த வார்த்தை சொல்ல வாய் திறக்குமுன் தனது கையில் இருக்கும் பிரம்புக்கு நன்றாய் வேலை கொடுத்தார்.

"போல ! வெளில போய்  நில்லு ! வாயில வருகிறது எல்லாம் புழுத்த பொய் " என்று வசை புரிந்து புத்தகத்தைத் தூக்கி வெளியே வீசினார்.

நான் அழுது கொண்டும் , அடி வாங்கிய இடங்களைத் தடவிக் கொண்டும் வெளியே சென்றேன் . அங்கு ஏற்கனவே "அனுமான்" அமர்ந்திருந்தான். அனுமானுக்கு அடிவாங்குவதும் ,வகுப்பின் வெளியே அமர்ந்திருப்பதும் புதிதன்று.

அழுதுகொண்டிருந்த என்னை உற்று நோக்கினான். " என்ன மக்கா  வலிக்கா ? பிள்ள அழாத என்ன " என்று அன்புடன் ஆறுதல் கூறினான் . நான் அழுதுகொண்டே மேலும் , கீழும் தலையாட்ட ஒரு கண்ணீர் துளி எனது காக்கி நிற நிக்கரின் வீழ்ந்து படர்ந்தது.

"கரையாத மக்கா ! உனக்கு ஒண்ணு சொல்லுகேன். அடுத்த தடவ அடி வாங்குறதுக்கு முன்னாடி நான் சொல்லித்தார மந்திரத்த சொல்லு என்னா . அதுக்க கூட அனுமாரையும் மனசுல நெனச்சிக்கோ , அப்புறம் பாரு அடி வலிக்கவே வலிக்காது என்னா. " என்று கூறி எனது காதில் மந்திரத்தை கூறினான். நான் இன்னும் பலமுறை அடிவாங்குவேன் என்பதை மிக தீர்க்கமாக அனுமான் நம்பியிருப்பான் போலும்.

" யோகி ராம் சுரத் குமாரே
  யோகி ராம் சுரத் குமாரே
  யோகி ராம் சுரத் குமாரே
  ஜெய குரு ராயா "

நான் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து மனதில் பதியவைத்துக் கொண்டேன்.

"அனுமார் " எங்க தாத்தா வாக்கும் . பயங்கர பலம் உண்டும் பார்த்துக்கோ !. அவரையும் நெனச்சிக்கோ . நான் அடிவாங்கும் போது  கூட இப்படி தான் பண்ணுவே . அடியெல்லாம் சும்மா பஞ்சி மாறி இருக்கும் " என்றான் அனுமான்.

நான் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்கினேன். மந்திரமும் ஒருவாறு மனதில் நின்று கொண்டது .

"சொல்லிபார்க்கும் போதே ஒரு பவர் வருமே மக்கா ?" என்று வினவினான்.

 "ஆமா அது மாதிரி தான் இருக்கு " என்றேன் .

" இத யார்கிட்டயும் சொல்லாத மக்கா . "சொல்லமாட்டேன்னு" அம்மா மேல சத்தியம் போடு " என்று கூறி தனது கையை என்னிடம் நீட்டினான்.
நான் சத்தியம் செய்யபோகும் போது நீட்டிய கையை மீண்டும் உள் இழுத்து கொண்டு "நீ சொல்ல மாட்ட எனக்கு தெரியும் " என்று சிரித்தான்.
அடியின் வலி குறைத்திருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்தேன். அன்று ஆரம்பித்த நட்பு.

ஊரெல்லாம் ஒன்றாய் அலைந்து திரிந்தோம். அவன் காட்டிய உலகு அதுவரை நான் கண்டிராதது.

    அதிகாலை புல்வெளியில் ஓட்டம், பின்னர் கிணற்றில் குளியல் , மதிய வேளையில் போஞ்சி மிளகாய் தூவிய மாங்காய் , புளிச்சங்காய், மாலையில் சூப்பும், இரத்த பொரியலும் சிலநேரங்களில் சுக்குபாலும், பொறித்த கடலை மற்றும் வத்தல் என்று ஏதேதோ அறிமுகப்படுத்தின்னான்.

   அவற்றிக்கெல்லாம் அவனே காசு கொடுப்பது  வழக்கம். அவன் கைகளில் எவ்வாறு காசு புரள்கிறது என்று என்றுமே நான் எண்ணியதில்லை . அவன் ஒன்றும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் அல்லன் . அவனது தாய் வீடுகளில் பத்து பாத்திரங்கள் சுத்தம் செய்து , அதன் மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு யாருடைய துணையுமின்றி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்.

அனுமான் பள்ளியைக் காட்டிலும் வெளியே துடிப்புடனும், துணிவுடனும் திரிந்தான் . மதிய வேளைகளில் உணவு உண்ணும் போது  அவனுடனே உண்ணுதல்  வழக்கமானது.  

தினமும் அவனது தாய் சுடச்சுட சோறும் , மீன் குழம்பும் , தயிரும் சிலநேரங்களில் பொறித்த மீனும் கொண்டு வருவார் . எனது உணவு கூடையை ஒதுக்கி வைத்துவிட்டு என்னையும் அருகில் அமர வைத்து உணவு உண்ணச் செய்வார். சோற்றில் எண்ணெய் கறுத்த மிதக்கும் மீன் குழம்பினை ஊற்றி நன்றாக விரவிசிறு உருண்டையாய் மாற்றி அதன் மேலே  சிறு துண்டு பொறித்த மீனை வைத்து அன்புடன் ஊட்டுவார். அதன் சுவை இன்னும் எனது நாக்கின் நாளங்களில் நிலை பெற்றிருக்கிறது.

             ஒரு நாள் பள்ளியில் ரூ 7 மதிப்புள்ள ஆங்கில அகராதி வழங்க இருப்பதாகவும், அதற்கான காசினை அனைவரும் அடுத்த 2-3 நாட்களில் கொண்டு வர வேண்டும் என அறிவிக்க , அகராதியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது .
            மறுநாள் காலை வருகைப்பதிவேட்டை சரி பார்த்து முடிந்ததும் வகுப்பாசிரியை மாணவர்களை நோக்கி "லேய் ! எல்லாரும் இங்க பாருங்க . இங்க நம்ம சந்தோசுக்க டிக்சனரிய நேத்து காணமாம். யாருடே எடுத்தா ?" என்று கேட்டார். ஒரே நிசப்தம்.

"இப்போ சொல்லலேன HM ரூமுக்கு கூட்டிட்டு போய் TC வாங்கி குடுத்துருவேன் பாத்துகிடுங்க "  என்றார் .

"சந்தோஷ் இங்க வாடே நேத்து சாந்தரம் டிக்சனரி இருந்தா டே உங்கிட்ட ?" என்றார்.

"ஆமா மிஸ் லாஸ்ட் பீரிட் இருந்து அப்புறம் காணோம் " என்றான் சந்தோஷ் .
யாரும் எந்த பதிலும் கூறாமல் வெகுநேரம் அமைதியாய் இருக்க , நான் அனுமானைப்  பார்க்க , அனுமான் தனது வழக்கமான மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தான் .

பொறுமை இழந்த வகுப்பாசிரியை "சரிடே ! எவனும் உண்மைய சொல்லுக மாதிரி தெரியல . நாளைக்கு எல்லாரும் 25 பைசா கொண்டு வரணும்.அத வச்சி சந்தோஷ்க்கு ஒரு புது டிக்சனரி வாங்கிக்கொடுத்திருவோம் " என்றொரு தீர்ப்போடு பாடத்தை ஆரம்பித்தார் .

மறுநாள் பைசா வசூல் ஆரம்பமாகியது. நான் 25 காசுடன் தயாராய் இருந்தேன். அனுமானிடம் கேட்ட போது  அவன் கொண்டுவரவில்லை என்றறிந்தேன் .

"ஏன் மக்கா கொண்டு வரல ?" என்றேன் .
"அதுவா அம்மாட்ட கேட்டே , அம்மா இதுக்கெல்லாம் குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு " என்றான் .
"மிஸ் அடிக்கும்லா ?" என்றேன்.
"..............."

அதற்குள் ஆசிரியை எங்கள் இருக்கையின் அருகில் வந்துவிட்டார் .
"என்னல 25 பைசா எங்க? " என்று அனுமானிடம் கேட்க , அமைதியாய் நின்றான் அனுமான்.அவன் மனதிற்குள் மந்திரம் ஓதிக்கொண்டிருப்பான் என்பது நான் மட்டும் அறிந்த ரகசியம்.

"நாளைக்கி கொண்டு வரணும் என்னா ?" என்று மிரட்டினார் ஆசிரியை .


அடுத்தநாளும் அதே கூத்து .

"யான்டே ? 25 பைசா முட்டாய் வாங்கி திண்ணுடயா ? இல்ல உங்க வீட்ல 25 பைசாக்கு வக்கு இல்லயா ?" என்றார் ஆசிரியை .

"இல்ல மிஸ் ! எங்க அம்மா இதுக்கு எல்லாம் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு " என்றான் பாவமாய் .

"அப்படியா அப்போ போய் வெளிய நில்லு .உங்க அம்மா என்னடே செய்யி ? "  என்றார் .

"பாத்திரம் தேய்க்க வேல மிஸ் " என்றான்.

"ஹ்ம்ம் , நாளைக்கு வரும் போது  25 பைசா கொண்டு வரணும் இல்லனே உங்க அப்பாவ கூட்டு வரணும் என்னா ? " என்றார் .
"அப்பா இல்ல மிஸ்" என்றான் அனுமான்.
"அப்போ அம்மாவ கூட்டு வா . இப்போ போய் வெளில நில்லு " என்றார்.

சரி என்பது போல் தலையாட்டி விட்டு வகுப்பறையின் வெளியே சென்றான் .
நான் ஜன்னலின் வழியே அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன் . அவனோ தூரத்தில் சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருப்பதை கண்டு களித்து கொண்டிருந்தான்.

மறுநாள் அனுமான் தாயுடன் வகுப்பிற்கு வந்தான் . வகுப்பாசிரியை கொஞ்சம் கோபத்துடன் பேசினார் .

"25 பைசா கேட்ட பையன் ஏதோ சொல்லுகான் " என்றார் ஆசிரியை.

"எதுக்கு 25 பைசா குடுக்கனுங்க" என்றார் அனுமானின் தாய் சாந்தமாய்  .

விஷயத்தைக் கூறியதும் "இல்ல டீச்சர் , ஒரு பையன் எதோ தொலைச்சிட்டா எல்லார்கிட்டயும் பைசா வாங்கி குடுக்கிறது சரியா இல்ல டீச்சர் . நாளைக்கு என் பையனோ இல்ல வேற எந்த பையனாவது இத மாதிரி தொலைச்சிட்டு வந்த இதே மாதிரி ஒவ்வொரு தடவையும் கொடுபீங்களா ?" என்று கேட்கஆசிரியை சற்று அமைதியானார் .

       "மத்தபடி 25 பைசவுக்கெல்லாம் வீட்ல வக்கு இல்லாம இல்ல " என்று கூறி அருகில் நின்றுகொண்டிருந்த அனுமானிடம் 1 ரூபாய் கொடுத்து "மிஸ்ட 25 பைசா குடுத்திரு அம்மா வரட்டா " என்று சொல்லிவிட்டு வேகமாய் நடந்தார் . அவரைப் பார்த்த வண்ணமே ஆசிரியை நின்று கொண்டிருந்தார்.

        "மிஸ் நான் உள்ள போகவா?" என்றான் அனுமான். "போ " என்று கையசைத்தார் ஆசிரியை . அமைதியாய் நாற்காலியில் வெகு நேரம் அமர்ந்திருந்தார் .

"நா  போய்  குடுத்துட்டு வாரேன்" என்று கூறி ஆசிரியையை நோக்கிச் சென்றான் அனுமான். "மிஸ்" என்று 1 ரூபாய் நாணயத்தை நீட்டினான்.
ஆசிரியை என்ன எண்ணினாரோ தெரியவில்லை. மாணவர்களிடம் பெற்ற 25 காசுகள் கொண்ட " டப்பா"வை எடுத்து அனைத்தையும் மாணவர்களிடம் கொடுத்து, அனுமானையும் இடத்தில போய் அமரசொல்லிவிட்டார்அன்று மாணவர்கள் அனைவரும் மாங்காயோ, சுக்குப்பாலோ வாங்கி குடித்து மகிழ்ந்திருப்பார்கள்.

அனுமானை இப்பொழுது கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து காண்கிறேன் . அனுமானைக் காணும் போதெல்லாம் அவனது அம்மாவின் நினைவு வர தவறுவதில்லை. இன்றும் அதுவே நிகழ்கிறதுஅனுமான் இப்பொழுது "அனுமார்" போலவே ஆஜானுபாகுவாய் காட்சி அளித்தான் .

"எப்படிடே இருக்க? பார்த்து நாளாச்சி " என்றான் .
"நாளா ? வருஷம் ஆச்சே டே" என்றேன்
"நீ இங்க சென்னைலயா இருக்க?" என்றான் .
"இல்ல மக்கா . நான் பெங்களூர் இருக்கேன் . இப்போ கார்த்திய பார்க்க வந்தே . உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோசம் போ " என்றேன்

" எனக்கும் தான் மக்கா . நான் இங்க ஒரு கொரியர் கம்பெனில  வேல பாக்கேன் . நல்ல ஊர் சுத்துக வேல " என்று சிரித்தான்  அனுமான் .

"அம்மா எப்படி இருக்கு ?" என்றேன் .
"அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சொகமில்ல . அது தான் பாக்க  போறேன்." என்றான்.

சிறிது யோசித்தவாறு "மக்கா ! கைல கொஞ்சம் காசு கம்மிய இருக்கு , உங்ககிட்ட பைசா இருக்கா? ஒரு 200 " என்று கேட்டான் . கண்களில் அதே சிரிப்பு .

"இருக்குடே இந்தா " என்று கூறி 2 100 ரூபாய்  தாளினை அவனிடம் அளித்தேன் .
"ரொம்ப தேங்க்ஸ் டே " என்று கூறி , கொஞ்சம் அருகில் வந்து "மக்கா இன்னு ஒரு மேட்டரு , நான் உன்கிட்ட பைசா கேட்டத யார்கிட்டயும் சொல்ல மாட்டேல்லா ? " என்று கூறி சத்தியம் செய்ய வலக்கையை நீட்டினான்.

கையில் "அனுமார் சஞ்சீவிமலையுடன் " பச்சைநிறத்தில் பறந்தவண்ணம் தென்பட்டார் . அப்பொழுது என் கண்முன்னே 5ம் வகுப்பு அனுமானே தென்பட்டான் . நான் சத்தியம் செய்ய கையை கொண்டுசெல்லும் முன்னர் தனது கையினை உள்ளிழுத்து "நீ சொல்லமாட்ட எனக்கு தெரியும் " என்று வெள்ளை சிரிப்பை அள்ளிவீசினான் .

"மக்கா இங்க ஒரு கடைல சுக்காப்பி கெடைக்கும் குடிக்கலாமா ?" என்றான் .

"லே நான் இன்னும் பல்கூட தேய்க்கல " என்றேன்.

"அப்போ தானடே டேஷ்ட்டாடு இருக்கும் வாடே குடிப்போம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனான் . இருவரும் கடையை நோக்கி நடந்தோம். அவனது வலக்கை எனது தோள்களில். முதற்பொய்யின் விளைவுகள் இன்னும் மீதம் இருப்பதை போல் தோன்றியது.

 Download As PDF