Wednesday, April 21, 2010

"அன்பு"ள்ள ஆசானுக்கு,

                                              500 க்கு 474 ; கணக்கு - 99 ; அறிவியல் - 99 ; என்னடே பயங்கரமான மார்க்கா இருக்கு . நல்ல ஸ்கூல்ல நல்ல தானே படிச்சிட்டு இருக்கிற. அங்க விட்டுட்டு இந்த ஸ்கூல்ல சேரணும்னு ஏன் வந்துருக்கே ?" நமது முதல் சந்திப்பில் நீங்கள் கேட்ட முதல் கேள்வி. " இங்க கோச்சிங் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன் சார்!" என்றேன். "அப்போ அந்த ஸ்கூல்ல கோச்சிங் நல்லா இருக்காதா ?" என்றீர்கள். "அது இல்ல சார் , இங்க இயற்பியலுக்கு "அன்பு" சார் , வேதியலுக்கு "கண்ணன்" சார்லாம் இருக்காங்க. அவங்க கோச்சிங் செமையா இருக்கும்னு சொன்னாங்க" என்று நீங்கள் தான் அன்பு சார் என்பதை அறியாமல் உங்களிடமே கூறினேன். நீங்களோ அருகில் இருந்த லேப் டெக்னிசியன் முருகன் என்பவரைப் பார்த்து அடக்கத்துடன் புன்னகைத்தீர்கள். அவர் என்னை நோக்கி " தம்பி ! நீ இப்போ அன்பு சார் கிட்டதான் பேசிகிட்டு இருக்கிற " என்று கூறினார். என்னுள் ஒரு வித பதற்றம் . "அப்படியா ! வணக்கம் சார் !" என்றேன். நீங்கள் அமைதிகலந்த புன்னகையுடன் நான் கொடுத்த காகிதங்களில் கையெழுத்து இட்டீர்கள். நான் ஆர்வக்கோளாராக " நான் நல்லாபடிப்பேன் சார் " என்று கூற "இங்க படிப்பைவிட மொதல்ல ஒழுக்கம் தான் முக்கியம்! சரியா !" என்று எனக்கு முதல் போதனை செய்து அனுப்பினீர்கள்
                                         எப்பொழுதும் புன்னகைக்கும் முகம், கூரியபார்வை ,முறையான ஆடை அணிதல், வூட்லண்ட்ஸ் சூ, ஆளைத்தூக்கும் அரேபிய ஸ்சென்ட் நறுமணம், நுனிநாக்கு ஆங்கிலம் இவை அனைத்தும் கொண்ட ஒருவரை நீங்கள் "டி வி டி மேல்நிலைப் பள்ளியில் எதிர்பட நேர்ந்தால் அவர் கண்டிப்பாக எங்களின் "அன்பு" சாராகத்தான் இருப்பார்.
                                      இயற்பியல் பொதுவாக சிறிது இறுக்கமான பாடப்பகுதி தான். அதனை மாணவர்களுக்கு இனிமையான முறையில் கொண்டு சேர்ப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே . "frequency Modulation " என்று கரும்பலகையில் எழுதிவிட்டு இரண்டாம் உலகப்போர் முதல் உள்ளூர் தெரு சண்டை வரை மணிக்கணக்காக கதை சொல்லுவீர்கள். அவை அனைத்தின் அடியிலும் "frequency modulation " என்ற கருத்தே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். அன்பு என்று பெயர் சூட்டிக்கொண்டு அதிரடியை வகுப்பில் நீங்கள் கையாளுவீர்கள். அன்பினை படிப்பிற்கும் , அதிரடியை ஒழுக்கத்திற்கும் நீங்கள் பயன்படுத்தும் முறை மிகவும் ஆக்ரோஷமானது. இரண்டு மாணவர்கள் தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருந்த போது பேனாவை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களது கன்னத்தில் விட்ட அறையில் "சிங்கப்பல் " ஒன்று சிதறி வெளியே விழுந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.
                                                 ஒரு முறை உங்களிடம் பதிலுக்கு பதில் வாதாடும் தருணம் வந்தது . நீங்கள் சொல்லும் கருத்தை ஒத்துக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. தலைக்கனத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் "அது தவறு " என்று திரும்ப திரும்ப கூறியும் எனது கருத்திலே கர்வத்தோடு நிலைத்து நின்றேன். நீங்கள் அன்று தான் முதல் முறையாக என்னிடம் கோபப்பட்டீர்கள்." என்னடே நீ பெரிய ஆளாடே ! ஸ்டீபன் ஹாகின்ஸ் விட பெரிய ஆளாடே ?" என்றீர்கள் . "அது யாரு சார் "ஸ்டீபன் ஹாகின்ஸ்" நம்ம கிளாஸ்க்கு புது அட்மிசனா சார் " என்று நக்கலாக கேட்க , என்னை நூலகத்திற்கு அனுப்பி "ஸ்டீபன் ஹாகின்ஸ்" பற்றி பத்து வரிகள் எழுதிவரச் சொன்னீர்கள். அந்த பத்துவரிகள் என் தலைக்கனத்தை சுக்குநூறாக்கியது. இப்போதும் எனது வாழ்வில் தலைக்கனம் தலைத்தூக்கும் போதெல்லாம் எனது தலையில் தட்டிதணிய வைப்பது "ஸ்டீபன் ஹாகின்ஸ்" என்று ஒற்றைப் பெயர் தான். அதற்கொரு நன்றி.
                                                  "ஆங்கிலம்" கடைகோடியில் வாழும் தமிழ்நாட்டு மாணவர்களின் "சிம்மசொப்பனம்". ஆங்கிலத்தின் மீதுள்ள பயத்தினை போக்க நீங்கள் கையாண்ட யுக்திகள் சிறப்பானவை. பயன்பெற்ற மாணவர்களில் நானும் ஒருவன். நீங்கள் எங்களுக்கு கற்பிக்காத துறையே இல்லை என்பேன். "பெண்டுலத்தின் சூத்திரம் முதல் பெண்களிடம் பேசும் சாத்திரம் வரை அனைத்திலும் எங்களை அத்துப்படியாக்கினீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி .

                                உங்களுக்கு ஏன் அந்த "refill " பேனாக்கள் மீது அப்படி ஒரு வெறுப்பு ?. மை பேனாவை பெரிதும் விரும்புவீர்கள். மாணவர்களையும் அவ்வாறே பின்பற்றுமாறு மிரட்டுவீர்கள். உங்களுக்கு இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இக்கடிதத்தைக் கூட "refill " பேனாவில் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மன்னிக்கவும். மைப்பேனா இப்பொழுது உலகத்தில் பெரும்பாலும் காணாமல் போய்விட்டது. நீங்கள் இப்பொழுது எந்த பேனா பயன்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை. யாருக்குத் தெரியும் நீங்களும் மாறியிருக்கலாம். ஆனால் கண்டிப்பாக "refill " பேனா பிடிக்காத காரணத்தை பதில் கடிதத்தில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.                                                
                                                                 நிற்க!!!!!!!!!             
                              "பதில் " என்றதும் எனக்குள் ஒரு கேள்வி. உங்களுக்காக நான் எழுதும் இக்கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்புவது . நீங்கள் தான் இப்பொழுது இவ்வுலகத்தில் உயிருடன் இல்லையே !!!" ஆம் !! இன்று "அன்பு " சாரின் 9 வது நினைவு நாள் . ஒவ்வொரு வருடமும் அவரின் நினைவு நாள் அன்று அவருக்காக எழுதும் கடிதத்தின் 9 வது பிரதி இது.
                          சரியாக 9 வருடம் மற்றும் 3 நாட்களுக்கு முன்பு. அது ஒரு "லெவல் கிராசிங்". நான் தண்டவாளத்திற்கு இந்த பக்கம் நின்றுகொண்டிருந்தேன். "அன்பு சார் ! நீங்களோ எதிர்புறம் நின்று கொண்டிருந்தீர்கள்.! உங்களைப் பார்த்து பரவசத்தில் கையசைத்தேன் . நீங்கள் புன்னகைத்தீர்கள். ரயில் கடந்து சென்றபிறகு உங்களின் அருகில் வந்தேன்."என்னடே ! எப்படி இருக்கிற இன்ஜினியரிங் படிக்கிறே !! எப்படி போய்ட்ருக்கு " என்றீர்கள் ." நல்லா போகுது சார் ! கிளாஸ்ல பசங்க, பொண்ணுங்க எல்லாம் செமையா படிக்கிறாங்க சார் ! கொஞ்சம் பயமா தான் இருக்கு " என்றேன். " இதுக்கு போய் பயப்படலாமாடே ? if you cant , who can !!! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில உண்டுடே !! தைரியமா இரு !! வரட்டா?" என்று வல்லமை பொருந்திய வார்த்தைகளை என்னுள் விதைத்து விட்டு சென்றீர்கள். அவை தான் நீங்கள் என்னிடம் பேசும் கடைசி வார்த்தைகள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
                                         அன்றிலிருந்து மூன்றாவதுநாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்த என்னிடம் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியினை காண்பித்தார் என் தந்தை. "டி வி டி மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் குடும்பத்துடன் தற்கொலை" அச்செய்தியை பார்த்த எனக்கோ பேரதிர்ச்சி. என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை. நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு உங்கள் வீட்டை நோக்கி ஓடினேன். கூட்டம் அதிகமாய் இருந்தது . காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உங்கள் வீட்டிற்கு அருகே வர என்னுள் அச்சம் அதிகரித்தது. என்றாலும் அருகில் வந்து நீங்கள் உலாவிய இடத்தினை மதில் சுவர் வழியாக எட்டி எட்டிப் பார்த்தேன். விழியில் என்னை அறியாமல் கண்ணீர் ததும்பியது. மூன்று நாட்களுக்கு முன்பு எனக்கு கூறிய கடைசி வார்த்தைகளை நீங்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்திருந்தால் இவ்வாறு செய்திருக்கமாட்டீர்கள். நடந்து விட்டது. முடித்துவிட்டீர்கள். தற்கொலைக்கு பலர் பலவாறாக காரணங்களை கூறினார்கள். கடன் தொல்லை , தொழில் நஷ்டம் , இன்னும் சொல்லவே நாக்கூசுகின்ற சில என்று அவரவர் கற்பனைகேட்டிய காரணங்கள். இவை அனைத்தையும் எனது காதுகள் கேட்டுக்கொண்டிருந்தாலும் , மனதில் நீங்கள் இயற்பியல் வகுப்பு நடத்திக்கொண்டிருப்பதைப் போன்ற பிரமை. அருகில் இருந்த உங்கள் வீட்டின் பெயர் பலகையைப் பார்க்க "நிம்மதி இல்லம் " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கீழே "Mr .அன்பு MSc M Ed " IN - - OUT என்ற டப்பாவில் "OUT " என்று காட்டியது. சோகத்தோடு வீடு திரும்பினேன். இன்றும் வாழ்வில் நான் பின்பற்றும் விஷயங்கள் பெரும்பாலும் நீங்கள் கற்பித்தவை. கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையில் சொன்னதுபோல் "எனது கனவுகளில் வரும் ஒரே ஆண்மகன் நீங்கள் தான் அன்பு சார் !!" நீங்கள் செல்லும்போது "கிருத்திகா , கார்த்திகா " என்ற அழகிய இரண்டு மொட்டுகளையும் உங்களுடன் அழைத்துசென்றுவிட்டீர்களே!!! வருந்துகிறேன் மீண்டும். நீங்கள் என் போன்ற மாணவர்களுக்காக அளித்த அறிவு அமுதத்திற்கு நன்றி !! நீங்கள் என் போன்ற மாணவர்களின் உணர்வுகளில் ஒன்றிவிட்டீர்கள். உங்களின் நினைவாக என்னிடம் இருப்பது 12 ம் வகுப்பு இயற்பியல் ரெகார்ட் நோட்டும், இந்த புகைப்படமும் மற்றும் நீங்கள் கற்பித்தவைகளும்.

Pravin in XII Standard
அன்பு சார் - முதல் வரிசையில் பிங்க் நிறசட்டை அணிந்திருப்பவர்.

உங்களின் இழப்பு எனது மனதில் நீங்காத வடுவாய் நிலைத்து விட்டது. உங்களை மீண்டும் வணங்குகிறேன்.

இப்படிக்கு,
உங்களிடம் துடுபினைப் பெற்று வாழ்க்கைக் கடலினைக் கடக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு இயற்பியல் மாணவன்.
Download As PDF