Thursday, January 20, 2011

கந்தகமும், கட்டெறும்பும் !

                        எங்கோ பல மைல் தொலைவிலுள்ள ஒரு அடர்ந்த காட்டினைக் குளிர்விக்கச் சென்று கொண்டிருக்கும் இம்மேகம், அக்காட்டிலே பிறந்து, வளர்ந்து, பூத்துக் குலுங்கும் "லந்தனா" மலரின் தேனைச் சுவைத்துக் கொண்டிருக்கும் வண்டு , அச்செடியின் அடியே மதியம் உண்ட எலியினை உருண்டு செமித்து கொண்டிருக்கும் நாகம், அக்காட்சியினை மரத்தின் மேலே அமர்ந்தவாறு காணும் காகம், இதோ தன் வாழ்க்கைப் பக்கத்தை பகிர்ந்துகொண்டு இருக்கும் அவன் அனைத்தும் , அனைவரும் ஒன்றுபட்டோர். நிறத்தால் ஒன்றுபட்டோர்! .
                                      இதோ அவன் அரக்க, பறக்க ஓடிக்கொண்டிருக்கிறான் அவனது வீட்டினைநோக்கி. அவன் தாயிடம் ஒரு கேள்வி. அக்கேள்விக்கு அவர்களின் பதில். அதற்குப்பின் அவனது மனநிலை இவை அனைத்தும் அவனது மனக்கண்ணில்  திரைப்படமாய். அக்கேள்வியின் உதயம் கண்டிப்பாக அவனுளில்லை. இலக்கை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கும்  அவன் வெறும் அம்பே !.
                           அரைமணி நேரத்திற்கு முன்பு , அவன் வழக்கம் போல் தட்டெழுத்து பயிற்சி முடிந்து அருகிலிருந்த அங்காடியில் ஒரு பாக்கெட் மிட்டாய் வாங்கிக்கொண்டு வழியில் இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.  வீட்டை அடைந்தான். உள்ளே அத்தைக்கும் , மாமாவுக்கும் பலத்த வாக்குவாதம். சத்தம் தெருவரை தெளிவாய் கேட்டது. தாழிடாத கதவினை திறந்துகொண்டு "மாமா" என்று கூவிக் கொண்டே உள்ளே சென்றான். அவனைக் கண்டதும் "வாடா மருமவபுள்ள ! என்ன சங்கதி " என்று வினவினார். "எனக்கு பர்த்டே மாமா இன்னைக்கு !" என்றான். "அப்படியா ! இந்தா 5 ரூவா போறவழியில அண்டி, கிஸ்மிஸ் வாங்கி சாப்புடு " என்று கையை பிடித்து குலுக்கினார். அருகிலிருந்த அத்தையோ " வந்துருச்சி கட்டெறும்பு காலங்காத்தாலே! " என்று அலுத்துக்கொண்டார். அத்தை எப்போதும் அவனை "கட்டெறும்பு" என்றே அழைப்பதுண்டு. அதனை அவன் "சீனி" அதிகம் உண்பதால் அவ்வாறு அழைப்பதாக வெகுகாலமாய் எண்ணிக்கொண்டிருந்தான் . பொதுவாக அவனை அப்படி யார் அழைத்தாலும் அவன் வருத்தமோ, கோபமோ கொள்வதில்லை. ஆனால் அன்று என்னவோ பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு. " அத்த ! இன்னிமே அப்படி கூப்டாதீங்க சொல்லிட்டேன் " என்றான் காட்டமாய். ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த அத்தைக்கு ஒரு சின்னஞ்சிறு பொடியன் எதிர்த்து பேசியதும் அத்தையை "ஆத்தா" ஆட்க்கொண்டுவிட்டாள். "அட சின்னபயபுள்ள ! கோவத்தபாரு ! நீயே தீக்குச்சிக்கு தப்பிபிறந்தவன் தெரியுமால உனக்கு ! நீ பெறக்கும் போது உங்கம்மா  உன்ன வேண்டாம்னு நெனச்சி ஆஸ்பத்திரில இருக்கும்போது தீக்குச்சியில இருக்கிற "கந்தகத்த"தின்னுட்டால  ! ஆனா நீ எப்படியோ தப்பிப் பிறந்துட்ட. அந்த விட்ட குறைதான் இப்படி கருப்பா கட்டெறும்பு மாதிரி இருக்க ! உங்க அக்கா, தங்கசியப் பாத்தியாலே ? செவப்பா இருக்காளுங்க ! ஓடு ! ஒங்கம்மாகிட்ட போய் கேளு!" என்று பொரிந்து தள்ளி பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு வழியாக. 
                                                 அருகிலிருந்த மாமாவோ சற்று கோபத்துடன் "ஏண்டீ ! புள்ள பிறந்தநாளுன்னு வந்துருக்கான் ! நீ என்னலாமோ தேவ இல்லாம பேசுறய ! " என்று கண்டித்தார். அவன் கையில் மிட்டாய் பாக்கெட்டுடன் என்ன பேசுவதென்று தெரியாமல் உறைந்து போய் நின்றான்.  இயல்புக்கு வர அவனுக்கு சில நிமிடங்கள் ஆயிற்று. மிட்டாய் பாக்கெட்டை அங்கேயே போட்டுவிட்டு , மாமா கொடுத்த 5 ரூபாயை அருகிலிருந்த மேஜையின் மீது வைத்துவிட்டு வீட்டினை நோக்கி ஓடினான். இதோ இப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கின்றான்.
                                               வீட்டினை  நெருங்க நெருங்க  அவனது ஓட்டத்தின் வேகம் மிதமானது. ஓட்டமும் , நடையும், பதட்டமும் கொண்டவனாய் வீட்டினுள் நுழைந்து சோபாவில் போய் அமர்ந்துகொண்டான். இப்பொழுது அக்கேள்வியின் எடை மனதில் பன்மடங்கு பெருகி இருந்தது. உள்ளே பற்றி எரியும் நெருப்பினால் உருக்கப்பட்ட கண்ணீர் அவனது விழிகளில் தேங்கி நிற்கிறது. அவனது தாய் அடுக்களையில் இருந்து கையில் ஒரு கிண்ணத்துடன் வெளியே வந்தார். "ராசா ! வந்துட்டயா  எல்லாருக்கும் முட்டாய் குடுத்துடயா? இந்தா சீம்பால் செஞ்சிருக்கேன் சாப்பிடு" என்று கிண்ணத்தை கொடுத்தார்.             
                                      "சீம்பால்"  அவனை எப்போதும் பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு சுராபானம். என்றாலும் மனதில் பாரம் இருக்கும்போது நாவிற்கும், வயிற்றிக்கும் உள்ள தொடர்பில் ஒரு தற்காலிக துண்டிப்பு இயற்கையன்றோ ? அவனோ இயற்கையின் சிறு தூசு. அவனது முகத்தினைக் கண்டதும் தாயிற்கு ஏதோ கணிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். "என்னாச்சுயா ! முகம் வாட்டமா இருக்கு ? கண்ணுவேற கலங்கி இருக்கு ? என்னாச்சு !" என்று வினவினார். "எம்மா ! நீ என்ன பிடிக்காம தா பெத்தயாமா ?" என்று கேட்டான் சற்றும் யோசிக்காமல். அம்மாவிற்கு அதிர்ச்சி என்றாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சிறுபுன்னகையுடன் அவனது அருகில் அமர்ந்தார். "என்னாச்சி ! யார் அப்படி சொன்னா?" என்று கேட்க , "அத்த வீட்டுக்கு முட்டாய் குடுக்கப்போனேனா அப்போ அத்த தான் நான் பெறக்கும்போது நீ தீக்குச்சி சாப்டுடேன்னு சொன்னாங்க ! அப்போ உனக்கு நா பிறக்கிறது பிடிக்கலையாமா ? " என்று அன்னையை எதிர்நோக்க முடியாமல் அவரது மடியில் முகம் புதைத்து அழுதான். அம்மா தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் அவனை சமாதானம் செய்ய முயன்றார். " அடடா ! அத்த சும்மா வெளையாட்டுக்கு சொல்லிருக்கா ! அதா போய் ! பிள்ள அழகூடாது . ஆம்பளப்புள்ள அழலாமா? . அக்கா , தங்கச்சிய விட உன்னதான் ரொம்ப பிடிச்சி பெத்துகிட்டேன் தெரியுமா? நீ வேணும்னா அப்பா வந்ததும் கேளு " என்று ஆறுதல் செய்ய முயன்றார். என்றாலும் அவன் மனம் ஆறவில்லை. கண்ணீரோடு கரைந்துகொண்டே இருந்தான்.
                        பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த அவனது அக்கா வீட்டிற்குள் வந்தாள். "எம்மா !! சீம்பால் ரெடியா ? சீக்கிரம் தாமா ? " என்று கூவினாள். " அது அப்போவே ரெடி ஆயுருச்சி போய் எடுத்து குடி " என்றார் அம்மா. " ஆமா உம்பிள்ளைக்கு மட்டும் நல்ல ஊட்டு ! நாதான மொதல்ல கேட்டே " என்று கடிந்து கொண்டாள்.ஏற்கனவே கோபத்தில் இருந்த அவன் அக்காவை நோக்கி "ஏன்  நீங்க ரெண்டாவதா குடிக்கமாட்டீங்களோ ?" என்றான் வெறிகொண்டவனாய். "நீ பேசாத ! ஆயிரந்தான் இருந்தாலும் என் எச்சி பால குடிச்சி வளந்தவன் நீ " என்றாள் அக்கா. இதை அடிக்கடி அவனது ஆச்சி சொல்லக் கேட்டிருக்கிறான். வம்ச வியாபாரக் கொள்கையின் படி பாட்டியிடம் இருந்து பேத்தியை அடைந்திருக்கிறது. மீண்டும் ஒரு அவமானத்தால் பொருமினான். " நான் ஒண்ணு எச்சி பால குடிக்கல்ல ! அம்மா தினமும் குளிப்பா ! இன்னமா ? என்று கேட்டான் அப்பாவியாய். அம்மாவும் அக்காவும் சற்றென்று சிரித்து விட்டார்கள். அவனால் சிரிக்கமுடியவில்லை. சில மணிநேரம் கடந்தது. அமைதியானான். சீம்பால் நினைவுக்கு வந்தது.
                               சீம்பாலினை அதன் கருப்பட்டி கலந்த சுவையினை ரசித்து ருசித்தான். அப்போது சுவற்றின் அருகே இருந்து ஒரு கட்டெறும்பு மெதுவாய் அவனது காலின் அருகே வந்து சிந்தியிருந்த சீம்பால் துளியினை சுவைத்துக்கொண்டிருக்கிறது. அத்தை சொன்னது நினைவுக்கு வர கட்டெறும்பை முதல் முதலாய் கூர்ந்து கவனித்தான். அதன் செய்கையும், நிறமும் சற்று கவர்ச்சியாகவே இருப்பதாய் உணர்ந்தான். திடீரென்று ஏதோ எண்ணியவனாய் அடுக்களையை நோக்கி ஓடினான். ஏதோ தேடினான். கிடைத்தது தீப்பெட்டி. உள்ளே இருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து ஆழ்ந்து அதன் நுனியினை நோக்கினான். இதையா அம்மா உண்டிருப்பாள்? இதற்கு தப்பிப் பிழைத்தா நான் வாழ்த்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணினான் .  தீக்குச்சி நுனி  கருப்பும் ,  கடுஞ்சசிவப்பும் கலவையாய் அவனுக்கு தென்பட்டது. பலவாறாக மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது . அந்த பிஞ்சு  மனதில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு நாட்கள், மாதங்கள் , ஏன் வருடங்களே கூட ஆகலாம்.
                                   
                            இன்று அவனுக்கு வயது 24 . ஆனால் அந்த 9 ம் பிறந்தநாளை மட்டும் இன்றும் மறக்க முடியவில்லை. அன்று கேட்ட கேள்விக்கு இன்றும் பதில் முழுமையாய் அறியவில்லை அதை அவன் அறியவும் விரும்பவில்லை. என்றாலும் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அக்கேள்வியின்  நினைவுகள் வடுவில் ஒரு கீரலை பரிசாக அளிக்கும். 9  வயது சிறுவனாய் அழத் தோன்றும். "ஆண்பிள்ளை அழுவது அசிங்கமன்றோ ? மனதிற்குள் ஆறுதலடைவான்.

   "ஆதவன் என்றொருவன்  இல்லையேல் அகிலமனைத்தும் "அவனின்" நிறம் "
                                                                                           -  இப்படிக்கு
                                                                                               அவன்.
Download As PDF

7 comments:

 1. keep posting your stories... mind blowing ....

  ReplyDelete
 2. காக்கைச் சிறகினிலே நந்தலாலா..! :)
  அருமையான பதிவு!

  ReplyDelete
 3. நிகழ்ந்தவை கூறுவது இயல்பு ..
  நிகழ்ந்தவையை நிகழ்வதுபோல் வடிவமைத்தது சிறப்பு..
  இன்னும் சற்று ஆழமாக கூறி இருக்கலாமோ என்று தோன்றுகிறது !!!..

  ReplyDelete
 4. Super eh iruku thala... Keep rocking...

  ReplyDelete
 5. Good Narration. Nice selection of words. Keep rocking.

  ReplyDelete