சுரணை கெட்ட
பருவுக்கு
நேரம் காலம் தெரியாது
போலும். இன்று போயா
தனது உக்கிரத்தைக் காட்ட வேண்டும். கன்னத்திற்கு
ஒன்று என்ற விகிதத்தில்
இரண்டு பருக்கள். சீரான வளர்ச்சி.
தொட்டுப்பார்க்கும்
பொழுது சிறிதாய்த்தான் உணர்கிறேன். ஆனால் கண்ணாடி
முன்நின்று
பார்க்கையில்
பருத்து,
பழுத்து
தெரிகிறது.
கண்ணாடி
ஏதேனும்
பூதக்கண்ணாடியின்
பணியைச்
செய்கிறதா
என்றொரு
ஐயம்.
பரு தனது
கருவை வெளியேற்ற இன்னும் இரண்டு நாட்களாகும்
போல் தெரிகிறது. சிறிது உதிர
இழப்பு, கொஞ்சம் நீர் இழப்பு
இவை அது கடந்து
வரவேண்டிய
இரண்டு மைல்கற்கள். என்னதான் இருந்தாலும் இவை இன்று
தனது உக்கிரத்தைக் காட்டியிருக்க வேண்டாம்.
காலம் கடந்துகொண்டிருக்கிறது.
இன்னும்
அழைப்பு
வரவில்லையே?
ஒருவேளை
நான் அழைப்பனோ என்று எதிர்ப்பார்த்துக்
காத்துக்கிடக்கிறாளோ?
. இதோ
கைபேசி அதிர்கிறது. கிளம்பவேண்டியது தான்.
இன்று
தான் அவளது வீட்டில்
எனது முதல் பிரவேசம்.
அவள் எனக்குத் தோழியாகி இரண்டு மாதங்கள்
இருக்கும்.
அன்பு மழை கொஞ்சம்
அதிகமாகத்தான்
பொழிந்துகொண்டிருக்கிறது.
அதுவும்
கொஞ்சம்
சுகாமாகத்தான்
உள்ளது. அவளது தாய்,
தந்தை சொந்தபந்தங்கள் என்று குடும்பத்தின்
அனைவரையும்
பற்றியும்
சொல்லியிருக்கிறாள்.
ஒரு தோழியின்
வீட்டிற்குச்
செல்வது
இதுவே முதன்முறை. அவளது குடும்பத்தார்
முன்னிலையில்
என்ன பேசவேண்டும் என்பதைக்காட்டிலும் என்ன பேசக்கூடாது
என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று
எனக்கு நானே ஒப்பந்தம்
செய்துகொண்டேன்.
ஒருவாறாய் தேடிப்பிடித்து அவள் வீட்டிற்கு
வந்தாயிற்று.
ஆகா! என்னவொரு நறுமணம். வண்ணவண்ண பூக்களைக் கொண்ட நல்லதொரு
சிறு பூங்கா. தினமும்
அவள் கல்லூரிக்குச் சூடி வரும்
கடுஞ்சிவப்பு
ரோஜா அதோ இடப்பக்கமாய்.
அச்செடி
அவளுக்கான
அடுத்த மலரினைக் அளிக்க ஆயத்தமாகிக்
கொண்டிருக்கிறது.
அந்த தெருவில்
"நாய்கள்
ஜாக்கிரதை"
இல்லாத ஒரே பங்களா
இது தான். அவள்
தான் நாயைப் பற்றி
எதுவும்
சொன்னது
இல்லையே?. வாயிலில்
நின்றவாறே
கைப்பேசியில்
அழைத்தேன்.
புன்முறுவலுடன்
ஓடி வருகிறாள்.
"என்ன இவ்வளவு
லேட்?"
என்றாள்.
"எல்லா வீடும்
ஒரே மாதிரி இருக்குது!
அப்புறம்
நீவேற போன் பண்ணுவேனு
ரொம்ப நேரம் வெயிட்
பண்ணேன்!"
என்றேன்.
"சரி! வா
! என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
பங்களாவின் வெளியே பிரம்மாண்டம்
என்றால்
உள்ளே சுவர்முழுக்க ஓவியகளின் அணிவகுப்பு. அதன் நிறங்களில்
சிறுகச்சிறுகக்
கரைந்து
கொண்டிருந்தேன்.
அனைத்தும்
வடஇந்திய
மக்களின்
வாழ்க்கை
முறையினை
ஆதாரமாய்
கொண்டு
வரையப்பட்ட
ஓவியங்கள்.
அவள் எனது முகத்தின்
ஆச்சரிய
ரேகையினை
கண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
அதோ மூன்றாவதாக
இருக்கும்
அழகிய ஓவியத்தின் நடுவே ஒரு
பெருத்த
பல்லி சிலைபோல் ஒட்டியிருக்கிறது. அதன் வயிறு
வீங்கி இருப்பதைக் கண்டால் இன்னும் சிலநாட்களில் முட்டைகளை இடப்போகிறது என்றே எண்ணுகிறேன்.
அப்பல்லியின்
உடல் முழுவதும் முட்கள் போன்றும், கரும்புள்ளிகள் போன்றும் காணப்படுகிறது.
எனது வலக்கை
விரல்கள்
வலக்கன்னத்தை
மெதுவாகத்
தடவிப் பார்த்துக்கொண்டிருந்தது. பருவின் அளவு சிறிதும்
கூட இல்லை. குறையவும்
இல்லை.
நான்காவது
ஓவியத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கையில்
முன்னே கண்ட ஓவியத்தில்
இருந்த பல்லி ஊர்ந்து
செல்வதைப்
போன்றொரு
எண்ணம் ஓரகக்கண்களின் மூலம் மூளைக்குக்
கிடைக்கப்பெற்று
மூன்றாம்
ஓவியத்தைத்
மீண்டும்
பார்த்தேன்.
பல்லி ஊராமல், ஓடாமல்,
அதே இடத்தில் ஒட்டி இருந்தது.
என்ன பிரமை இது
?
உள்ளேயிருந்து கையில் ஒரு
தட்டுடன்
வந்தாள்.
தட்டில்
இரண்டு டம்ளர்கள். "அம்மா உள்ள
வேலையா இருக்காங்க. இப்போ வருவாங்க"
என்று கூறி தட்டினை
நீட்டினாள்.
"இல்ல ! நா வீட்லயே
டீ சாப்டுதான் வந்தேன்" என்றேன். " இது பால்
பாயாசம்!
நானே செஞ்சது!" என்றொரு பார்வை பார்த்தாள்.
அப்புறம்
என்ன தட்டவா முடியும்?.
"பால்பாயாசம்" என்றவுடன் என் அம்மா
தான் மனமுழுதும் உலவுகிறாள். அம்மாவுக்குத் தெரியும் எனக்கு பால்
பாயாசத்தின்
மீது தீராவிருப்பமென்று. பிறந்தநாள் என்றால் பால்பாயாசம் தான். அதுவும்
அம்மாவின்
கைப்பக்குவம்
பாயாசத்தின்
ஒவ்வொரு
துளியிலும்
தித்திக்கும்.
ஆனால் இவளுக்கு
எப்படி எனது விருப்பம்
தெரிந்தது?
. இரண்டு மாதப்பழக்கம். பிடித்த நிறம், பிடித்த
நடிகர், பிடித்த நடிகை, பிடித்த
படம் என்று எத்தனையோ
நாட்டிற்கு
உபயோகமான
தகவல்கள்
பரிமாற்றம்
செய்யப்பட்டுள்ளது
எங்களுக்குள்
. அதில் என்றாவது ஒரு நாள்
இந்த பால்பாயாச விருப்பத்தையும் பகிர்ந்திருப்பேன் போலும். சரியாக
நினைவில்லை.
ஆனால் இன்றும்
நினைவில்
நிற்கும்
இன்னொரு
விஷயம், சிறுவயதில் நான் குடித்த
பல்லி விழுந்த பால்பாயாசம். பால்பாயாசத்தில் கிடந்த ஏலக்காயை கரண்டியைக்
கொண்டு எடுக்க , மாட்டியதோ
சிறு பல்லியின் தலை. சற்று
அதிர்ந்துவிட்டேன்.
அம்மா மிகவும் பதறிவிட்டாள். நல்ல வேளையாய்
விபரீதம்
ஏதும் நடக்க வில்லை.
இந்த பாயசமும்
சுவையாகத்தான்
உள்ளது என்றாலும் அம்மாவின் கைப்பக்குவம்! சொல்லில் அடங்காது. அது
ஒரு பரவச நிலை.
நானும் , தோழியும்
பேசிக்கொண்டிருக்கையில்
உள்ளேயிருந்து
அவளது தாய் வந்தார்,
" வாப்பா ! எப்படி இருக்கிற?
அம்மா அப்பா எல்லாரும்
நல்ல இருக்காங்களா?" என்று பரிவோடு
விசாரித்தார்.
"எல்லாரும்
நல்ல இருக்காங்க ஆண்டி! " என்றேன். "ஆண்டி" என்ற வார்த்தையை
வாழ்வில்
முதன்முறை
பயன்படுத்துகிறேன். அத்தை
என்று கூட அழைத்திருக்கலாம்.
ஊரில் அவ்வாறு தானே அழைத்துப்பழக்கம்.
"நீங்க பேசிட்டு
இருங்க இப்போ வறேன்"
என்று கூறியவாறே சென்றார். எனக்கு பின்னே
சென்றதும்,
அவர் தனது மகளை
ஏதோ ஜாடை செய்து
உள்ளே அழைத்தார். அவர் எனக்குப்
பின்னால்
ஜாடை செய்தது எதிரே இருக்கும்
டிவியில்
தெரிந்தது.
எனக்கு ஏதும் புரியவில்லை.
தோழியும்
"இப்போ வறேன்" என்று கூறிவிட்டு
சென்றாள்.
டம்பளரின்
அடியில்
ஒட்டிக்கிடந்த
இரண்டு சேமியாவினை கரண்டியால் எடுத்து உண்டுவிட்டு மீண்டும் ஓவிய ஆய்வில்
மூழ்கினேன்.
இன்னும்
அதே பல்லி, அதே
இடத்தில,
அசைவில்லாமல்
சிலைபோல்.
உள்ளேயிருந்து மீண்டும் வந்தாள் தோழி.
முன்னிருந்த
நாற்காலியில்
அமர்ந்தாள்.
அவளிடம்
ஏதோ ஒரு மாற்றத்தை
உணர்ந்தேன்.
முன்புக்கும்,
இப்போதைக்கும்
அவளிடம்
உள்ள ஒரு வித்தியாசம்
ஒரு கருப்பு துப்பட்டா!.
எனது மனம்
ஏதேதோ முனங்கியது. குழம்பியது. இப்போ தான்
அவளின் தாய் செய்த
ஜாடை , டிவியில் நான் கண்ட
காட்சி அனைத்தையும் தொடர்பு படுத்த முடிகிறது.
கொஞ்சம்
எனக்குள்
கூனி, குருகிப்போனேன். இரத்தம் சூடாக ஆரம்பித்தது.
ஏனோ கல்லூரி பற்றிய எண்ணம்
வந்து துன்புறுத்தியது. அவள் சிரித்துக்கொண்டே
இருந்தாள்.
துப்பட்டாவும்
என்னைப்ப்பர்த்து
நகைத்துக்
கொண்டிருக்கிறது.
எனது கண்கள் என்னை
அறியாமல்
எதுவும்
செய்து விட்டதோ? அதனை அவளின்
தாயார் கண்டுவிட்டரோ?
என்னைப்பற்றி ஏதேனும் தவறான முடிவுக்கு வந்திருப்பாரோ?
எதுவும்
விளங்கவில்லை.
மனமுழுவதும் இருள்.
கை விரல்கள்
வேறு நடுங்குகிறது. இந்த சிறு
துணி என்னை அவமானப்படுத்திக்
கொண்டிருக்கிறது.
இரத்தத்தின்
சூடு, கோபமாகி ஏதேனும் நான் கூறிவிடக்கூடாது.
கவனமாய்
இருக்க வேண்டும்.
"இதில் என்ன
தவறு இருக்கிறது. அவளுக்கு எது சரியாய்
இருக்கும்
என்று அவளது தாய்க்கு
தெரியாதா? அவளது
தாய் அதனை எதார்த்தமாய்
செய்திருக்கலாம்.
அதை ஏன் நீ
உனக்கானதாய்
எடுத்துக்கொள்கிறாய்?.
சாந்தம்
! அமைதி!"
என்று வேறொரு எண்ணம்
என்னை ஆறுதல் செய்கிறது.
"சிரி துப்பட்டாவே
! நன்றாக சிரி! பறந்து,
பறந்து சிரி இன்று
நீ என்னைப்பற்றிய சனி!"
முதல் சந்திப்பு
! வாழ்வில்
மறக்கமுடியாத
சந்திப்பாக
முடிந்துவிட்டது.
இங்கிருந்து
நடையைக்
கட்டுவது
சாலச்சிறந்தது.
"அப்புறம் நான் கிளம்புறேன்!"
என்றேன்.
"ஏன் ! இன்னும் 15 நிமிஷத்துல அப்பா வந்துடுவாங்க!
" என்றாள்.
ஆனால் எனக்கோ அவ்விடத்தில்
இருக்க சிறிதும் விருப்பமில்லை. " இல்ல! ரொம்ப
லேட் ஆயிடுச்சி! நான் கிளம்புறேன்"
என்றேன்.
கோபம்கொண்டவாறு
"அம்மா! கிளம்புறான்மா" என்று தனது
தாயினை அழைத்தாள். தாயார் வந்தார்.
வணங்கினேன்.
விடைப்பெற்றேன்.
தற்செயலாய் மீண்டும் மூன்றாவது ஓவியத்தைப் பார்த்தேன். அங்கே அசைவின்றி
இருந்த பல்லியைக் காணவில்லை. அதற்குள் எங்கு சென்று
விட்டது.
வேகமாய்
சுவரெங்கும்
நோட்டம்
விட்டேன்.
எங்கும்
தென்படவில்லை.
உண்மையில்
அங்கு பல்லி இருந்ததா?
இல்லை பிரமையா? ஏதும் புரியவில்லை.
அதற்கு இன்று முட்டை
இடும் நாளாகக்கூட இருக்கலாம்.
சிறு மன
உளைச்சலுடன்
வெளியேறுகிறேன்.
என்ன செய்வது ? இது போன்ற
வேளைகளில்
உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்த
பலவாறாய்
முயன்றாகிவிட்டது.
என்றாலும்
மனதிற்குள்
புகைச்சல்
தான் . புலம்பல் தான். இது
இன்னும்
எத்தனை நாட்களுக்கு என்னை வாட்டபோகிறதோ
யான் அறியேன்.
விரல்கள் தானாக கன்னத்தினைத்
தடவிப்பார்க்கிறது.
பரு தனது கருவினை
வெளியேற்ற
இன்னும்
இரண்டு நாட்கள் ஆகும்.
எதார்த்த சிறுகதை நன்றாக இருந்தது.
ReplyDeleteஆங்காங்கே சற்று தொடர்பு விட்டுபோனதாக எண்ணுகிறேன்.
palli uvamai allagu
ReplyDeleteபல்லி விழாமலேயே மயக்கம் வந்துருக்குமே :-D
ReplyDelete