கண்ணாடிக்கு வெளியே வெகுதூரத்தில் பிரம்மாண்ட மலை படுத்துறங்குகிறது. அதன் மேல் உயிர்வாழும் தடித்த மரங்கள் கூட சிறு பச்சை புள்ளி போல் தெரிகிறது.
"தம்பி! கொஞ்சம் தள்ளி நில்லுப்பா" என்றொரு குரல். மருத்துவமனையை பினாயில் விட்டு துடைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. நான் அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டியதாயிற்று. காரணம் பினாயில் துர்நாற்றம். பொதுவாக எனக்கு மருத்துவமனை நாற்றம் என்றால் கடும் வெறுப்பு . யாருக்குத்தான் பிடிக்கும்? மருத்துவர் உட்பட.
எனது தந்தை தங்கியிருக்கும் அறையின் அருகே நேற்று தான் ஒரு பெண்மணியை சேர்த்திருந்தார்கள். அப்பெண்ணை தூக்கிவந்த கோலத்தை நினைக்கையில் இப்பொழுதும் உடல் நடுங்குகிறது. வழியெங்கும் சிவப்பு வண்ணம் அடித்ததை போல் இரத்தம் சிதறிக்கிடந்தது. அவளது சிவப்பு சேலை மேலும் சிவப்பாய் தெரிந்தது. இப்பொழுதும் அவளின் ரத்தத்தின் துர்நாற்றம் எனது மூக்கு துவாரங்களுக்குள் உலாவிகொண்டிருப்பதைபோல் ஒரு பிரம்மை.
இதோ இப்பொழுது அந்த அறைக்கு வெளியே இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவளது குழந்தைகளாகத்தான் இருக்கும். அக்காவும், தங்கையும் ஒரே அச்சில் வார்த்து எடுத்தாற் போன்ற சாயல்.
"அக்கா! நான் தா உம்பாவாம் (மாடு) நீ தான் அம்மா ! இப்போ நீ ஓடு நான் உன்ன முட்டவாறேன் ! உம்பா !! உம்பா !" என்றாள் தங்கை. அவளை மகிழ்ச்சிபடுத்தும் பொருட்டு அக்காவும் ஓடினாள். என்னை நோக்கி ஓடி வந்தாள். நான் நிற்பதை அவள் கவனிக்கவில்லை. கலகல வென இருவரின் சிரிப்பு மட்டும் அந்த இடத்தை ஆட்க்கொண்டது. என்னை இடித்து நின்று , அண்ணாந்து பார்த்தாள். மாடுபோல் அக்காவை மீண்டும் மீண்டும் முட்டிக் கொண்டிருந்தாள் தங்கை. "உம்பா ! உம்பா ! ....
"ஒ ! நீ தான் உம்பா வா ? நா யாரு தெரியுமா ?" என்று கூறி எனது கண்ணின் மேல் புருவத்தை உயர்த்தி குழந்தைகளை விளையாட்டுக்கு பயமுறுத்தினேன். இரு குழந்தைகளும் பார்த்த மாத்திரத்தில் "அம்மா! தீ பூச்சாண்டி! தீ பூச்சாண்டி!" என்று அலறியவாறு அறைக்குள் ஓடின. "தீ பூச்சாண்டி ?" இது என்ன புது வகை ? " கண் பூச்சாண்டி, மூக்காண்டி , ஏன் காதுபூச்சாண்டி கூட கேள்விப்பட்டிருக்கிறேன். கண்ணின் சிவப்பு அக்குழந்தைக்கு நெருப்பாய் தோன்றி இருக்கலாம் . குழந்தை சொன்னால் சரியாதான் இருக்கும்.`
அறைக்குள் தந்தை அமைதியாய் படுத்துறங்கி கொண்டிருக்கிறார்.இன்றோடு இரண்டு வாரங்கள் ஆயிற்று. அவரின் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் 90% அடைத்துவிட்டதாம். அறுவை சிகச்சை செய்யாவிடில் உயிருக்கே ஆபத்தாம். எப்படி இருந்தவர் தந்தை. தேக்கு போன்ற தோள்கள் . ஆஜானுபாகுவான தோற்றம். எப்பொழுதும் சிரித்த முகமும், மற்றவரை சிரிக்கவைக்கும் பேச்சுமாய் இருந்தவர். இன்று அமைதியின் உருவாய் உறங்கிக்கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு நீரிழவு நோய் வேறு. அவரின் கைகளின் தோல் இப்பொழுது தேநீரில் மிதக்கும் பாலாடையினைப் போல சுருங்கி மின்னிக்கொண்டிருக்கிறது. மூப்பு , பிணி இரண்டிற்கும் தப்புயோர் உண்டோ?
என்ன செய்ய? நோய்வாய்பட்டு இருக்கும் போதுதான் ஒருவரைப்பற்றி அதிகம் நினைக்கத்தோன்றுகிறது.
"என்னடே சட்டம்பி! அப்பா எப்படி இருக்காரு ?" என்று குரல் கொடுத்தவாறே அறைக்குள் நுழைந்தார் அருணாச்சல மாமா. தந்தையின் நெருங்கிய நண்பர். அவரை அனைவரும் ஆபிசர் மாமா என்றே அழைப்பதுண்டு. ஏதோ ஆபிசில் வேலை பார்க்கிறார். எந்த ஆபீஸ் என்ற விவரமெல்லாம் நான் அறியேன்.
"வாங்க மாமா !" அப்பாவின் அருகில் சென்று அவரை எழுப்பினேன். மெதுவாய் கண்களைத் திறந்து பார்த்து புன்னகைத்தார். " உக்காருங்க" என்றவாறு உதட்டினை அசைத்தார். என்னை நோக்கி "காபி" என்றார். புரிந்துகொண்டவனாய் "மாமா! நீங்க பேசிட்டு இருங்க நா போய்காபி வாங்கிட்டு வாரேன்!" என்று கையில் சொம்பினை எடுத்துக்கொண்டேன். "டே ! காபி வேண்டாம் . எதிரால இருக்கிற நாயர் கடைல சூடு சுக்காபி வாங்கிட்டு வாடே ! ரெண்டு ஒரு நாளா நல்ல தடுமம் பிடிச்சிருக்கு. சுக்காபி குடிச்சா கொஞ்சம் தொண்டைக்கு நல்லா இருக்கும். உங்களுக்கு எதாவது வேணுமா?" என்று தந்தையை நோக்கி கேட்டவாறே காசினை எடுக்க தன் சட்டை பாக்கெட்டில் கை விட்டார். " வேண்டாம் மாமா! பைசா இருக்கு! அப்புறம் அப்பா இப்போ டீ, காபி ஒன்னும் குடிக்ககூடாதாம் நர்ஸ் சொல்லிருக்கு" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தேன்.
மனம் முழுதும் எண்ணம் ! இரத்த எண்ணம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் தந்தைக்கு அறுவை சிகிச்சை. தற்போதைய தேவை ஏழு பாட்டில் A1B+ive இரத்தம். அதை பெறுவது என்ன பெரிய வித்தை என்கிறீர்களா? இரத்த வங்கியில் சென்றால் எளிதாய் கிடைக்குமே என்கிறீர்களா? மருத்துவருக்கோ அறுவை சிகிச்சைக்கு பதபடுத்தபட்ட இரத்தம் வேண்டாமாம்! உடலில் இருந்து எடுத்த 2 -3 மணி நேரத்திற்குள் சிகிச்சையில் பயன்படுத்தவேண்டுமாம்.
சரி! காசுக்காக உயிரையே கொடுக்க ஆள் இருக்கும் உலகில் உதிரத்தையா தரமாட்டார்கள். இரத்த வங்கிக்கு வெளியே இது போன்று இரத்தம் கொடுக்க தயாராய் இருப்பவர்களை அணுகலாம் என்கிறீர்களா? அதையும் செய்தேன் . அந்த நாள் மட்டும் 8 பேரை சந்தித்தேன். ஒவ்வொருவரையும் சந்திக்கும் போதும் ஒரு தெய்வத்தை சந்திப்பதை போல் உணர்ந்தேன். ஆனால் ஒவ்வொரு தெய்வமும் அருள் தரமுடியாமைக்கு ஒவ்வொரு காரணம் சொல்லிற்று. வருத்தம் !! வருத்தம் மட்டுமே மிச்சம். சில நேரங்களில் தெய்வங்களும் தவறலாம்.
"சேட்டா! 5 ரூபாய்க்கு சுக்காப்பி! 2 பருப்பு வடை ! 2 ஆரஞ்சு மிட்டாய்" என்று கூறி சொம்பினை அவரிடம் கொடுத்தேன். நேற்று கூட மருத்துவமனைக்கு அருகில் இருந்த கிராமங்களில் இரத்தத்தை தேடி அலைந்தேன். முதலில் அவர்கள் இரத்தம் கொடுக்க தயாராய் இருந்தனர். எந்த காரியமும் அவ்வளவு எளிதாக நடந்து விடுமா என்ன?. அதுவும் எனக்கு?.
கிராம மக்களின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை சந்தித்தேன். " A1B +ve இரத்தம் தான ரெடி பண்ணிரலாம் சார் நீங்க ஒண்ணும் கவலபடாதீங்க! தலைக்கு 3௦௦ ரூவா குடுதிருங்க! அப்புறம் ஆபரேஷன் எப்போ பெரிய ஆஸ்பித்திரிக்கு எப்போ வரணும் சொல்லுங்க! ஜூஸ் , பேரிச்சம் பழம் எல்லாம் ரெடி பண்ணிருங்க!" என்றார். சிறிது நம்பிக்கையை மனதிலும் , மகிழ்ச்சியை முகத்திலும் கொண்டு " சார் ! ரொம்ப நன்றி ! அப்பா இருக்கிறது ராஜா ஆஸ்பித்திரில இருக்கார்" என்றேன். சட்ரென்று அவர் முகம் மாறியது.
"தனியார் ஆஸ்பித்திரியா ? அப்போ நெறைய பணம் இருக்கும் உங்ககிட்ட ! நல்ல கறப்பானே அந்த ஆஸ்பித்திரி காரன். மன்னிச்சிக்கோங்க தம்பி ! நாங்க தனியார் ஆஸ்பித்திரில கொடுகிறது இல்ல ! " என்றார். எனக்கு ஏதோ கைக்கு எட்டியது வாய்வழியே சென்று தொண்டையில் தடை பட்டதைப்போல் ஒரு எண்ணம்.
"என்னங்க இப்படி சொல்றீங்க ! இரத்தம் கடைல கிடைக்கிற விஷயமாங்க ? தயவு செய்து ஹெல்ப் பண்ணுங்க ! வேணும்னா கொஞ்சம் காசு அதிகமா தாரேன் " என்றேன். "தம்பி உங்க நிலைமை புரியது ஆனா என்ன பண்றது. இப்போ நானே நெனச்ச கூட இவங்க குடுக்க மாட்டாங்க. இவங்க எல்லாம் காசுக்கு இரத்தம் குடுகிறவங்க தான். ஆனா அவங்களுக்கும் சில கொள்கை இருக்கு . என்ன பண்றது ? மன்னிச்சிக்கோங்க" என்று சொல்லிவிட்டு சென்றார். ஏதும் செய்யமுடியா வண்ணம் அனைத்தும் செயல் இழக்கும் பொழுது வருமே ஒரு செத்த சிரிப்பு அது பொத்துக்கொண்டு வந்தது.
அடடா ! காபி வாங்கியப்பின் கடைக்காரன் கொடுத்த 5 ரூபாய் நோட்டு செல்லாத நோட்டு. வேறு எங்கேயாவது சிந்தனையை வைத்துக்கொண்டு வாழ்ந்தால் நடப்பதெல்லாம் தப்பாய் தான் போகும். இருந்தாலும் பரவாயில்லை. இதனை பேருந்தில் மாற்றிக்கொள்ளலாம். அருகில் பிச்சைக்காரர் ஒருவர்."தம்பி ! சாப்டு ரெண்டு நாளாச்சி" என்றார். உண்மையோ ? பொய்யோ ? முகமும் அதையே சொல்லியது.
ஏற்கனவே செல்லா நோட்டு பைக்குள் இருந்துகொண்டு மனதை அரித்துகொண்டு இருக்கிறது. இதனை இவரிடம் கொடுத்துவிட்டால்? முகத்தில் புன்னகையுடன் கைகூப்பியபடி சென்றார் பிச்சைக்காரர். எனது மன அரிப்பு சற்று மங்கிற்று. இதனால் எனக்கு நஷ்டம்தான் என்றாலும் மனம் லேசாய் இருப்பதாக ஒரு உணர்வு.
மீண்டும் எண்ணம் ! மீண்டும் ரத்தம் ! ஒரு வேளை நினைத்தபடி ரத்தம் கிடைக்காவிடில் தந்தையின் நிலை ? செ ? ரத்தம் கிடைப்பது ஒன்றும் கடினம் அன்று. அதற்காக இப்படியா அபசகுணமாக நினைப்பது என்று நீங்கள் கேட்பீர்கள். நான் என்ன செய்வது.
எதிர்பார்ப்பு அனைத்தும் தவறும் போது எதிர்பாராதவை ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்றுதான் எண்ண தோன்றுகிறது.
ஏதோ தோன்றியவனாய் பின்னால் திரும்பி பார்த்தேன். பிச்சைக்காரர் சாலையினை கடந்து நாயர் டீ கடையினை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வேறு எதற்கு அவர் சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. எனக்கு பதற்றம் மெல்ல பற்றிக்கொண்டது.
இவர் ஐந்து ரூபாய் நோட்டை கொடுப்பார். கடைக்காரன் தான் கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டை அவனே "செல்லாது" என்று தூக்கி எறிவான்.பிச்சைக்காரர் மனதில் என்னை சபித்துகொண்டு வயிற்றில் அமிலம் சுரந்த வண்ணம் மீண்டும் பிச்சை பயணத்தை தொடங்குவார்.
வேகமாக கடையை நோக்கி ஓடினேன். அவர் காசினை கடைக்காரரிடம் கொடுக்கும் முன்னர் அதனை நான் பெற்று விட வேண்டும். அருகில் சென்று அண்ணே ! என்றேன். என்னப்பா ! என்றார். அவரிடமிருந்து செல்லா நோட்டினை பெற்றுக்கொண்டு வேறொரு ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு திரும்பினேன். அவர்க்கேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு இப்பொழுது பசியாற்றுவதே பிரதான வேலை. ஆற்றட்டும்.
மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருக்கையில் கைபேசி அழைக்கிறது. நண்பன் எதிர் முனையில். "டேய் சொல்லுடா" என்றேன்.
"ஓ அப்படியா".
"சரி எத்தனை மணிக்கு போகணும்".
"சரி லெட்டர் வாங்கிட்டு வந்துடறேன் நாளைக்கு கால் பண்ணு" என்று கூறிவிட்டு கைபேசியை வைத்தேன்.
எண்ணத்தில் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கையும் கொஞ்சம் மகிழ்ச்சியும் கலந்து ஓடுகிறது. அருகில் இருக்கும் கல்லூரியில் மாணவர்கள் சிலர் ரத்தம் தர தயாராயிருக்கிறார்களாம். மீண்டும் நாளை தெய்வங்களுடன் சந்திப்பு.
சுக்கு காப்பி வேறு ஆறிகொண்டு இருக்கிறது. வேகமாய் சென்று மாமாவிடம் கொடுக்க வேண்டும்.
எதிர் அறையில் இருந்த சிறுமிகளில் ஒருத்தி என்னை படிகளில் நின்று பார்த்துகொண்டிருக்கிறாள்.
அவள் அருகில் சென்று எனது பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயினை எடுத்து கொடுத்தேன். பயந்தாள், மெல்ல பதுங்கினாள், பாய்ந்து என் கையிலிருந்து மிட்டாயினை பிடிங்கி கொண்டு சிரித்து கொண்டே அறைக்குள் ஓடினாள்.
"ஏய் இந்தா பாரு மிட்டாய்" என்று தங்கையை நோக்கி கூவினாள்.
"யார் தந்தா?"
"தீப்பூச்சாண்டி மாமா தந்தது"
"எனக்கு" என்றாள் தங்கை.
உள்ளே ஏதோ ரகசிய கருத்துப்பரிமாற்றம். ஏதோ விளையாட தயாராகிக்கொண்டிருகிறார்கள் போலும்.
ஒண்ணு - ஒங்க வீட்டு பொண்ணு
ரெண்டு - ரோஜா மலர் செண்டு
மூணு - முக்கு கடை பன்னு
நாலு - நாய் குட்டி வாலு
அஞ்சு - அவரைக்காய் பிஞ்சு
ஆறு - ஐயர் கடை மோரு
ஏழு - எலி குஞ்சி காலு.
எட்டு - டம டம கொட்டு
ஒன்பது - ஒரு முழம் கயிறு
பத்து - பாளையங்கோட்டை ராஜாவுக்கு விடிய விடிய கல்யாணம் விடுஞ்சு பாத்தா பனியாரம்" என்று முடிக்க இருவரும் கை கொட்டி சிரித்தனர். நானும் புன்னகைத்துக்கொண்டேன்.
இன்னும் ஒர் ஆரஞ்சு மிட்டாய் எனது பைக்குள்ளேயே காத்துக்கிடக்கிறது.
Download As PDF

super..
ReplyDelete""எந்த காரியமும் அவ்வளவு எளிதாக நடந்து விடுமா என்ன?. அதுவும் எனக்கு?"" ,
ReplyDelete"" ஏதும் செய்யமுடியா வண்ணம் அனைத்தும் செயல் இழக்கும் பொழுது வருமே ஒரு செத்த சிரிப்பு அது பொத்துக்கொண்டு வந்தது"" -- thalaiva pinreenga ...!...