ஒரு படி . வலக்கால் பல தசைகளின் உதவி பெற்று , முயன்று இடக்காலை மேலே ஏற்றுகிறது. பயணம் சிறிது தான் . பாதையும் தெளிவுதான் . இடக்காலுக்கு வேறு எந்த எதிர்பார்ப்பு இருக்கமுடியும் வலக்கால் தன்னை மேலே ஏற்றும் என்ற எண்ணத்தைத் தவிர.
வீட்டினுள் நுழைந்தார் சாமி. உள்ளே முதலாளி காசினைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார். சில்லறை ஒலி துல்லியமாய் கேட்டது. சாமிக்கு இந்த தருவாய் எப்பொழுதும் பிடிப்பதில்லை. அடுத்த 5 முதல் 10 நிமிடத்திற்கு அவர் அவராய் அன்றி ஓர் அடிமையை போல் நின்று பதில் கூற கடமைப்பட்டவர். பிடிப்பதில்லை என்றாலும் தவிப்பதற்கில்லை.
"வாடே சாமி ! ஜோலி முடிஞ்சா?" என்று கணீர் குரலில் கேட்டார் கோமதி கிழவி. "முடிஞ்சிட்டு ஆச்சி " என்று கூறியவாறே அக்குளில் இருந்த பையினை எடுத்து அதற்குள் இருக்கும் ரூபாய் நோட்டுகளை அடுக்கினார். "எவளோ பிரிஞ்சி இன்னைக்கு ?" என்றார் கோமதி. "அது 5338 ரூவா ஆச்சி " என்றார் சாமி. "ஹ்ம்ம் ! புள்ளிக்கு பின்னால ஒண்ணும் இல்லையாடே " என்ற வினவ " இருக்கு ஆச்சி ! 75 பைசா !" என்றார் சாமி. அதயாருடே சொல்லுவா ? உங்க வீட்டு சின்ன கெழவி வந்து சொல்லுவாளா ?" என்று செல்லமாய் கடிந்துகொண்டார் கோமதி.
"சாப்டயாடே ? " கோமதி .
"இல்ல ஆச்சி ! வீட்ல போய் தா கஞ்சி குடிக்கணும் " என்றார் சாமி.
"நேரம் 9 .30 ஆச்சி கடைல சாப்டுட்டு வந்துருக்கலாம்லா ?" என்று கோமதி கேட்க."இல்ல ஆச்சி ! நா வீட்டுக்கு போயிட்டு வாரே " என்று உத்தரவு வாங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார் வீட்டை நோக்கி.
கோமதி கிழவி தென்காசியின் அருகே உள்ளே ஒரு கிராமத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்தவர். இன்றும் அக்கிராமத்தவர்கள் அவரை "வசூல் சக்கரவர்த்தி " என்றே அழைப்பதுண்டு. வட்டிக்கு விட்டு சம்பாதித்த பணம் அவரை பலருக்கும் அறியச் செய்திருந்தது.
காசு காரியங்களில் மிகவும் கறாரான கிழவி கோமதி. முதுமை காரணத்தால் தனக்கு கீழே மூன்று பேரை வைத்து வேலை வாங்குவது மட்டுமே இப்போதைய வேலை. அவர்களுள் கோமதிக்கு சாமி மீது கொஞ்சம் கரிசனம் அதிகம். பொதுவாக கோமதி சொந்தங்களை அருகில் அண்ட விடுவதில்லை சாமியை தவிர்த்து.
ஊரில் லாரி ஒட்டிக்கொண்டிருந்தவனின் குணம் பார்த்து தன்னிடம் வேலைக்கு வைத்துக்கொண்டார். வேலைக்கு சேர்த்தவுடன் கோமதி கிழவி சில அறிவுரைகள் வழங்குவதுண்டு. அப்பகுதியில் வட்டித்தொழில் செய்பவர்களில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பவர் கோமதி . அதன் காரணமாய் அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் பெருவாரியான மக்கள் கோமதியிடமே காசு பெறுவர். சிலர் காசு கொடுக்காமல் கம்பி நீட்டுவதுண்டு. உயிரை விட்டாலொழிய அவரிடமிருந்து தப்ப இயலாது. அதையே தன் கீழுள்ள வேலையாட்களுக்கும் வேதமாய் ஒதியிருந்தார்.
" கருணை எள்ளளவும் கூடாது ! காசை திரும்பப்பெற வசைகளை பாரபட்சமில்லாமல் பயமில்லாமல் பயன்படுத்து" என்பது கோமதி வாக்கு.
சாமிக்கு இக்கூற்றுகளில் உடன்பாடில்லை. வாட்டசாட்டமாய் உடலை வளர்த்துக் கொண்டார். அரும்பு மீசை பக்கடா மீசையானது. வாய் மொழியிலின்றி உடல் மொழியின் மூலம் பயத்தை உண்டாக்க இந்த மாற்று ஏற்பாடு.
சனிக்கிழமை காலை 11.15 மணி சமீபம். சாமி வழக்கம் போல் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கையில் பையுடன் வசூலுக்குக் கிளம்பினார். தெருவில் அவரது மகன் சுதாகர் நண்பர்களுடன் பம்பரத்தை சுழல விட்டுக்கொண்டிருந்தான். தந்தையை கண்டான். சனிக்கிழமை நினைவு மூளையை உரச "எப்பா ! வரும்போது பரோட்டா, கோழி என்னா ? என்று கூவினான். சாமி சிரித்தவாறே அவனைநோக்கி கையசைத்து சென்றார். பேருந்து ஏறி இன்றைய வசூல் இடமான "வல்லகுமாரன்விளை" நோக்கி கிளம்பினார்.
மதிய நேரம் பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டை நோக்கிக் திரும்பிக்கொண்டிருந்தான் ராஜா. கையிலே தட்டு , தட்டிலே சத்துணவுக் (?) கஞ்சி வீட்டை நோக்கிப் பொடிப்பயணம். கசங்கிய வெள்ளை சட்டை (பெயரளவில் மட்டுமே ) காக்கி டவுசர் அதன் பின்னால் இரண்டு துளைகள்.
அதன் வழியே காற்றோட்டம் கொஞ்சம் அதிகம் தான்.
தோளில் பையுடன் மெதுவாய் நத்தைபோல் நகர்ந்துகொண்டிருந்தான். கஞ்சியோ கடல் அலைபோல் ஆடி ஆடி அடங்கிக்கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஒரு மிட்டாயை பார்த்தான். அது ஏதோ ஒரு குழந்தையின் வாய் தவறிய பச்சை நிறமிட்டாய். அதைக் கண்டதும் சிறிதும் சிந்திக்காமல் ரோட்டோரம் கஞ்சி தட்டினை வைத்துவிட்டு மிட்டாயினை கையிலெடுத்தான். அதில் சுற்றிலும் ஒட்டியிருந்த மண்ணை துடைத்துக்கொண்டு சட்டைப் பையில் பதுக்கிகொண்டான். மீண்டும் பயணத்தை தொடர்ந்தான்.
வீட்டினில் அவனது தாய் வாயிலில் பதட்டத்துடன் ராஜாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். சாமி இன்று வட்டிப்பணம் வாங்க வருவார், அதற்குள் வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது மட்டுமே ராஜாவின் தாயின் இன்றைய குறிக்கோள். ராஜாவின் தாய்க்கு கூலித் தொழில் . தந்தைக்கு குடியே தொழில். எப்போது வீட்டிற்கு வருவார் என்பதை அவர்கூட அறிவாரா என்பது ஐயமே !. வட்டிக்குப் பணம் வாங்கி குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவர் தாய்தான். பணம் கொடுத்தவரின் வாய் வசைகளை பலவாறாய் கேட்டு புளித்து போய்விட்டது. மரத்துப் போன மனதின் மீது அமிலம் ஊற்றினால் என்ன ? அமிர்தம் ஊற்றினால் என்ன ?
வசைகளை வெற்று தூசியென உதிர்த்துவிட்டு வாழ்க்கையை தொடரப் பழகிக்கொண்டவர் (வேறு வழியும் இல்லை ) . என்றாலும் பலநேரம் அந்த தருணத்தை விட்டு முடிந்தமட்டும் தப்பிக்கொள்வார்.

வீட்டை அடைந்தான் ராஜா. "சீக்கிரம் வர சொன்னேம்லா ?" என்றார் தாய். ராஜா எதிர்வினை ஏதும் செய்யாமல் கஞ்சி தட்டினை தாயிடம் ஒப்படைத்துவிட்டு மிட்டாயிருந்த பையினைப் பற்றிக்கொண்டு குடிசையின் அருகே நின்ற நாய்குட்டியுடன் விளையாடத் தொடங்கினான் . பாதிக் கஞ்சியினை வேறு ஒரு தட்டினில் ஊற்றிவிட்டு , மீதி கஞ்சியில் தண்ணீரை ஊற்றி , சிறிது உப்பினைக் கலந்து வேகமாய் குடித்தார் தாய். அருகில் இருந்த வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே கஞ்சியினை குடித்து பசியினை ஆற்றிக்கொண்டார். தட்டினை கழுவி கவுற்றிவிட்டு , "ராஜா ! அம்மா வேலைக்கு போறே ! தம்பிய பாத்துக்கோ ? சாய்திரமா வந்துருவே . தம்பி அழுத பிஸ்கட் குடு. கொஞ்சம் கஞ்சி இருக்கு ! குடிச்சிரு !" என்று கூவிக் கொண்டே கூட்டை விட்டு பறந்தது தாய்ப்பறவை. பையில் இருந்த மிட்டாயினை எடுத்து சுவைக்கத் தொடங்கினான் ராஜா.
அரைமணிநேரம் கழித்து , சாமி ராஜாவின் வீட்டின் முன் வந்தார். "என்னடே ! ஸ்கூலுக்கு போயிட்டு வந்தியா? உள்ளபோய் உங்கம்மாகிட்ட பைசாவையும் , சிட்டையையும் எடுத்திட்டு வர சொல்லு " என்றார் சாமி.
" மாமா ! அம்மா வேலைக்கு போயிருக்கு மாமா !" என்றான் ராஜா. " உங்கமைக்கு சீல ! ஒழுங்கபோய் வரசொல்லு பொய் சொல்லாதடே !" என்று மிரட்டும் தோரணையில் கூற , " உண்மையில அம்மா வேலைக்கு தான் போயிருக்கு. சாயங்காலம் தான் வரும் !" என்றான் பாவமாய். சாமி கோபம்கொண்டவராய் "சாயங்காலம் வருவே . உங்கம்மாகிட்ட சொல்லு !" என்று கோபத்துடன் கிளம்பினார்.
மாலைப் பொழுது. சுதாகர் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். மனதில் மகிழ்ச்சி கொஞ்சம் தூக்கல். தந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். சுதாகர் ஒரு "தொட்டா சிணுங்கி " அவனது நண்பர்கள் அவனை அடிக்கடி அழவைத்து வேடிக்கைப் பார்ப்பதுண்டு. அதுபோன்ற ஒரு திட்டம் அன்றும் தயாரானது.
" என்னடே ! சனிக்கிழமை ஆனா ஜாலியா உனக்கு ?" என்று தூண்டிலைப் போட்டன் ஒருவன். " ஆமா ! எங்கப்பா ஜோலிக்கு போயிட்டு வரும்போது பரோட்டா, கோழி வாங்கிட்டு வருவால்லா " என்னும் போது அவன் முகத்தில் ஒரு பரவசம்.
" ஜோலியா? உங்கப்பா என்ன ஜோலிடே பாக்கு ?" என்று ஊசியை சிறிது ஆழமாய் இறக்கினான். "வசூல் ஜோலி " என்றான் சுதாகர் அப்பாவியாய். " என்னடே சொல்லுக ? கார் ஓட்டுகது ஜோலி ! முடி வெட்டுகது ஜோலி, கட வச்சிருகிறது ஜோலி ! வசூல் ஜோலி யாடே ? " என்று கேட்டவாறே பலமாய் சிரித்தான். அவன் சிரிப்பு அருகில் இருந்தவர்களை பற்றிக்கொண்டு பலமாய் எரிய தொடங்கியது. ஒன்றும் புரியாதவனாய் அவ்விடத்தை விட்டு வீடு நோக்கிச் சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டான் தந்தையிடம் இக்கேள்வியை கேட்டே தீரவேண்டும் என்ற முடிவுடன்.

சாமி வீடு திரும்பும் முன் மீண்டும் வட்டியை கேட்க சென்றார். " என்னடே ! உங்கம்மா எங்கடே ?" என்று கேட்க , " இன்னும் வரல மாமா !" என்றான் ராஜா. சிறிது நேரம் காத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அருகிலிருந்த கல்லில் அமர்ந்து கொண்டார் சாமி.
நாய்க்குட்டி அவரது அருகில் சென்று அவரது கையிலிருந்த பரோட்டா, கோழியினை முகர்ந்து பார்த்தவாறு, அவரையும் பார்த்துக்கொண்டிருந்தது. பொரித்த கோழியின் மணம் ராஜாவின் மூக்கை துளைக்க "மாமா ! பொரிச்ச கோழியா ?" என்று புன்சிரிப்புடன் சாமியிடம் கேட்டான். பொறுமையிழந்த சாமி " ஆமா டே ! உங்கம்மா வந்தா சொல்லு அடுத்த வாரம் பைசா கண்டிப்பா தரணுமானு என்னா ? " என்று கூறி நடந்தார். ராஜாவின் ஐம்புலன்களிலும் பொரித்த கோழியின் மணம். தொண்டை எச்சிலை தானாகவே விழுங்கிக்கொண்டது.
சாமி வீட்டை அடைந்தார். திண்ணையில் கோபத்துடன் அமர்ந்திருந்தான். சுதாகரின் காதில் அவனது நண்பர்களின் சிரிப்பொலி மீண்டும் மீண்டும் ஒலித்தவாறே இருந்தது. மறு திண்ணையில் தாய், தந்தை, தங்கை ஆகியோர் அனைவரும் நிலவொளியில் அமர்ந்து உண்ணத் தொடங்கினர். " சுதாகரு ! சாப்பிட வரலையா ? சீக்கிரம் வந்து சாப்ட்ரு ! இல்ல தங்கச்சி அவளவையும் சாப்டுருவா பாத்துக்கோ !" என்றார் சாமி.
மனமுழுக்க நண்பர்கள் கேட்ட கேள்வியே ஒலித்துக்கொண்டிருந்தது சுதாகருக்கு. தந்தையின் குரலை சட்டை செய்யாமல் நிலவினைப் பார்த்துக்கொண்டிருந்தான். பொரித்த கோழியின் வாசனை மெல்ல அவனது நாசியினை துளைக்க , வயிற்றின் அமிலமும் அதற்கு உதவ , வயிற்றுப் பசியினை விட வைராக்கியம் பெரிதா என்ன? தந்தையிடம் கேட்க எண்ணிய கேள்வியை தனக்குள்ளே விழுங்கிவிட்டு உணவு உண்ண தந்தையின் அருகில் அமர்ந்தான்.

ராஜாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. தண்ணீரில் பிஸ்கட் இரண்டினை கரைத்து தம்பிக்கு கொடுத்து விட்டு , தாய் அடுக்களையில் வைத்திருந்த மீதி கஞ்சியினை தண்ணீர் ஊற்றி , வாசலில் அமர்ந்து நிலவினை பார்த்துக்கொண்டே சுவைத்தான் மனமுழுக்க பொரித்த கோழியினை நினைத்துகொண்டே.
இரு சிறுவர்களின் எண்ணகளுக்கும், ஏக்கங்களுக்கும் சாட்சியாய் இருக்கிறான் இரவுச்சூரியன். அவன் கண்டுகொண்டிருப்பதை அச்சிறுவர்கள் அறிவார்களா என்ன ? என்றாலும் அவன் அவர்களை கண்சிமிட்டாமல் கண்டுகொண்டிருக்கிறான் வெண்சிரிப்போடு.
நண்பா ஒரு சிறப்பான குறும்படம் பார்த்த உணர்வை அளித்தது இச்சிறுகதை .. சிறுகதை என்று சொல்லலாமா? ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றிய நுண்விவரணைகள் நீ மனதுள் உணர்ந்த காட்சிப் படிமத்தை சிறப்பாக வார்த்தைப் படுத்தின.. கதை கூறும் முறையில் ஒரு உத்தி படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுவது என்று குருநாதர் ஜெ அடிக்கடி கூறுவார். அதன் பாதிப்பு தெரிகிறது ... இவ்வுலகில் நல்லதும் கேட்டதும் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடந்துகொண்டேதான் இருக்கும் .. வழக்கமான கதைகளில் ஒரு நன்முடிவை எதிர்பார்ப்போம் .. இதில் ஒருவேளை சாமி பரிதாபப்பட்டு ராஜா விடம் கோழிக்கறியைக் கொடுத்திருந்தாலோ அல்லது சுதாகர் வயதுக்குமீறிய தர்க்க நியாயங்களுடன் தந்தையின் தொழில் பற்றி அவரிடம் வாதிட்டிருந்தாலோ தொலைக்காட்சியில் வரும் செயற்கையான நாடகங்கள் போல இருந்திருக்கும் .. அவ்வாறு இல்லாமல் நிதர்சனமாக நடப்பதையே பதிவுசெய்திருப்பது மிகச் சிறப்பு .. வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
ராஜேஷ் குமார்
ஒரு தருணத்தில் நானும் ராஜாவுக்கு அந்த பொறித்த கோழி கிட்டும் என்று எண்ணி நிதர்சனத்தை மறந்துட்டேன் ...
ReplyDeleteகத நடை மிகச்சிறப்பு , வார்த்தைகள் வடிவு பெற்றுள்ளது ..
Superb lines " ஒரு படி . வலக்கால் பல தசைகளின் உதவி பெற்று , முயன்று இடக்காலை மேலே ஏற்றுகிறது. பயணம் சிறிது தான் . பாதையும் தெளிவுதான் . இடக்காலுக்கு வேறு எந்த எதிர்பார்ப்பு இருக்கமுடியும் வலக்கால் தன்னை மேலே ஏற்றும் என்ற எண்ணத்தைத் தவிர ".
ReplyDeleteஒரு படி . வலக்கால் பல தசைகளின் உதவி பெற்று , முயன்று இடக்காலை மேலே ஏற்றுகிறது. பயணம் சிறிது தான் . பாதையும் தெளிவுதான் . இடக்காலுக்கு வேறு எந்த எதிர்பார்ப்பு இருக்கமுடியும் வலக்கால் தன்னை மேலே ஏற்றும் என்ற எண்ணத்தைத் தவிர.
ReplyDelete--- Great Lines
மிகச்சிறந்த துவக்கம்......
ReplyDeleteசொற்களின் நடை மிக அருமை அன்பரே !!
வாழ்த்துக்கள் !!
நல்ல எழுத்து நடை..
ReplyDeleteநல்ல துவக்கம்..
// இரு சிறுவர்களின் எண்ணகளுக்கும், ஏக்கங்களுக்கும் சாட்சியாய் இருக்கிறான் இரவுச்சூரியன். அவன் கண்டுகொண்டிருப்பதை அச்சிறுவர்கள் அறிவார்களா என்ன ? என்றாலும் அவன் அவர்களை கண்சிமிட்டாமல் கண்டுகொண்டிருக்கிறான் வெண்சிரிப்போடு.//
வாழ்த்துக்கள் தோழர்.