Monday, November 22, 2010

நரைக்கா நட்பு!!

"பயணிகளின் பணிவான கவனத்திற்கு" என்று ஒலிப்பெருக்கி அலறிக்கொண்டிருக்க, சின்னஞ்சிறு முத்துதூரலை தூவி தன் வருகையை பதிவு செய்தது தென்மேற்குப் பருவக்காற்று. புகைவண்டியின் வருகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் பயணிகள், உணவு பதார்த்தங்களை அவசரமாய் விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரிகள் என்று அச்சூழல் சற்று பரபரப்பாய் இருந்தாலும் அவையாவும் செல்லையாவை சிறிதும் சலனமடையச் செய்யவில்லை. அங்கிருந்த ஒருசுவற்றின் அருகே அவரது உடல் அமைதியாய் அமர்ந்திருந்தாலும் மனமனைத்தும் குழப்பம்,பதற்றம். கண்களில் நீர் பெருகத் தயாரானது. அக்கண்ணீருக்கு கைகளால் அணைபோட்டு அதன் சுவடுகளை அழித்துக்கொண்டிருந்தார். சுற்றும், முற்றும் தூய்மையான குளிர்க்காற்று சுகமளித்தாலும், செல்லையாவுக்கு அது ஒரு மெல்லிய நடுக்கத்தையே ஏற்படுத்தியது. அவரது உள்ளங்கையில் இன்னும் வியர்வையின் பிசுபிசுப்பு. அருகில் அவருக்குத் துணையாக ஒரு நன்றியுள்ள ஜீவன். செல்லையாவுக்கு ஆறுதல் சொல்ல புலனில்லாமல் மனதிற்குள் தனது தாய்மொழியில் புலம்பிகொண்டிருந்தது. தூய்மையான தூறல் அடை மழையானது. மழைக்கு ஓர் தனிச்சிறப்புண்டு. நாம் ஆனந்த மனநிலையில் அதனை அணுகினால் பேரானந்தத்தை அளிக்கும். மனக்குழப்பத்தோடு சென்றால் அது துன்பக்கடலில் திளைக்கச்செய்யும். செல்லையாவுக்கு அன்று மழையின் இரண்டாம் பண்பு பரிசாக அளிக்கப்பட்டது.
அருகில் நின்று கொண்டிருந்த நாய் திடீரென்று இடப்பக்கம் நோக்கி ஓடியது. அது ஓடிய திசையில் செல்லையா நோக்க தூரத்தில் ராமசாமி கையில் குடையுடன் நடந்துவந்து கொண்டிருப்பது கண்ணீர் திவளைகளின் வழியாக பிரிந்து தெரிந்தது. கண்களின் நீரினை வலக்கை தனது ரேகை பள்ளங்களில் புதைத்தார் செல்லையா. "என்னடா ! இன்னைக்கு ரெண்டு பெரும் சீக்கிரமே வந்துடீங்க போல ?" என்று நாயிடம் பேசிக்கொண்டே வந்தார் ராமசாமி. அது தனது வாலினை ஆட்டிக்கொண்டே அவரது காலடியினைப் பின்பற்றி வந்துகொண்டிருந்தது . "செல்லையா! இந்த மழைக்கு நீ இன்னைக்கு வாக்கிங் வரமாட்டேனு நெனச்சேன் , ஒரு முக்கியமான விஷயம்னு வரசொன்னே! என்ன சமாசாரம் ?" என்றார் ராமசாமி. செல்லையா பதிலேதும் கூறாமல் தொண்டை வரைக்கும் வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். " செல்லையா ! என்ன ரொம்ப பதட்டமா இருக்கிறே? எதாச்சும் உடம்பு சரியில்லையா ? கையெல்லாம் வேற நடுங்குது ! என்னபா ஆச்சி ?" என்று மீண்டும் வினவினார் ராமசாமி. மெதுவாய் தலையை உயர்த்தி செல்லையா ராமசாமியை நோக்கினார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை என்பதை அவருடைய சிவந்த கண்களும், அதன் கீழிருந்த கருவளையங்களும் சொல்லாமல் சொல்லின. ராமசாமி செல்லையாவின் வார்த்தைகளை வரவேற்கத் தயாரானார். செல்லையா வார்த்தை ஒவ்வொன்றாய் உதிர்த்தார்.
"ராமசாமி ! வாழ்க்கையில ஒரு பயலையும் நம்பி வாழகூடாதுயா ! மனுசங்கமேல இருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையும் போயிருச்சி !" என்று கதறினார்.

" என்ன ஆயுடுச்சியா இப்போ ! அழாம சொல்லு. வியாக்கியானத்த விட்டுட்டு விஷயத்த சொல்லு" என்றார் ராமசாமி.

"நெத்தி ராவுல என் பையன் எங்கிட்ட தனியா பேசணும்னு சொல்லிக் கூப்பிட்டான் ராமசாமி" "ஹ்ம்ம் ! அப்புறம் " என்றார் ராமசாமி.

"அவனும் அவன் பொண்டாட்டியும் பிள்ளைங்க படிப்பு விஷயமா மெட்ராஸ்ல போய் இருக்கப்போறான்கலாம்" என்று நிறுத்தினார்.

" செல்லையா ! அதுக்கு என்னப்பா தனியா இருக்கக் கவலைப்படுறயா? நான் கடந்த மூணுவருசமா தனியாதான் இருக்கிறேன்.அதெல்லாம் பழகிடும். என் பையன் ஆறுமாசத்துக்கு ஒரு தடவ வந்து பார்த்துட்டு போவான். அதெல்லாம் அப்படிதான்யா அவனுக்கும் ஆயிரம் சோலி இருக்குமா இல்லையா ?" என்று சொல்லிக்கொண்டே தனது பைக்குள் இருந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசினார். அது ஒரே வாயில் இரண்டையும் உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் ராமசாமியின் கையையும் கண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு ஆரம்பித்தார் செல்லையா.

"தனியா இருக்கிறது எனக்கொண்ணும் புதுசில்ல ராமசாமி. உண்மைய சொல்லப்போனா என் பொண்டாட்டி செத்துப் போய் கடந்த 15 வருஷமா நான் தனியா வாழறதா நெனச்சிக்கிட்டு இருக்கிறேன்.அவ போனதுக்கு அப்புறம் என் புள்ள ஒருத்தனுக்ககாதான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். அதுக்காக அவன்கிட்ட நான் காசு,பணம் எதிர்ப்பார்க்கல, கொறைஞ்சபட்ச நன்றி எதிர்ப்பாகுறது தப்பாயா?"என்று குமுறினார்.

"பொறுமை செல்லையா! பிரச்சனைய முழுசா சொல்லு !" என்றார் ராமசாமி.

"பயபுள்ள ! என்ன போய் முதியோர் இல்லத்தில தங்கச் சொல்றான்யா " என்று கதறி ராமசாமியின் கைகளைப் இறுகபபற்றினார். அப்பற்றுதலில் செல்லையாவின் தனிமை உணர்வும், பாதுகாப்பற்ற நிலையும் ராமசாமி உணர்ந்தார். செல்லையாவை முழுமையாகப் பேசவிட்டு குறுக்கிடாமல் அமைதி காத்தார் ராமசாமி.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு " இது வெகுநாளா அவனும், அவன் பொண்டாட்டியும் போட்ட திட்டம் போல இருக்கு ராமு ! திடுதிப்புனு அந்த முதியோர் இல்லத்து பாரம் எல்லா நிரப்பிகிட்டு எங்கிட்டவந்து கையெழுத்து போடுங்கிறான்யா! தகப்பன்கிற ஈவு, இரக்கம்கூட இல்லாத அவனும் ஒரு மனுசப்பயலா ?" என்றார் சோகம் கலந்த கோபத்துடன்.

ராமசாமிக்கு அதிர்ச்சி கலந்த வருத்தம். ஆறுதலின் மூலம் செல்லையாவை அமைத்திப்படுத்த முயன்றார் ராமசாமி. "செல்லையா ! உன் பையன் இப்படி பண்ணுவான்னு நெனைகல. நான் வேணும்னா அவன்கிட்ட பேசி பார்க்கட்டுமா ? என்று கேட்க , "வேண்டாம் செல்லையா ! அவன் பாரம் நிரப்பிகிட்டு வந்து கையெழுத்து கேக்கும்போதே தெரியலையா அவன் சேதி சொல்லவந்து இருக்கிறானே தவிர அனுமதி கேக்கவரல! அவன் சொன்னத கேட்ட எனக்கு மூளை ஒரு நிமிஷம் வேல செய்யாம போச்சி ! அவன்கிட்ட அந்த நேரத்துல அவன்கிட்ட பதில்சொல்லனுமா இல்ல கேள்வி கேக்கனுமாகிற அடிப்படை கூட என் மூளையில இருந்து அழிஞ்சிபோச்சி. அவன் எக்கேடு கேட்டு போனாலும் பரவாயில்ல ஆனா என் பேரப்பிள்ளை அவன பார்க்கமுடியாம போயிரும் ராமு" என்று பாசக்கண்ணீரைக் கொட்டினார்.

"பொறு செல்லையா ! ஆத்திரத்துல வார்த்தைய அலையா கொட்டாதே ! என்ன செய்யலாம்னு யோசிப்போம் " என்றார் ராமசாமி.

"இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணும் இல்ல ராமு ! நான் முடிவு பண்ணிட்டேன் " என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே செல்லையாவின் கைபேசி அழைத்தது.அதில் அவரின் மகனின் பெயர். " ஆங்! சொல்லுப்பா!" என்றார் செல்லையா பவ்யமாக. "ஆமாப்பா இங்கதான் ரயில்வே கிட்ட இருக்கிறேன் இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவேன். வந்து கையெழுத்து போடுறேன்" என்று குரல் நடுங்க சொல்லி பேச்சு வார்த்தையை முடித்தார்.

"வயிறையும், உயிரையும் வளர்க்க நாம நம்மளயே இழந்து இந்த தள்ளாத வயசுல அடுத்தவன் கைய நம்பி இருக்கிறதால தான் இந்த பிரச்னை, கேவலம் எல்லாம். நீ கொடுத்துவச்சவன் ராமு. உன் புள்ள உன்ன நல்ல பாத்துக்கிறான். ஆனா கொஞ்சம் கவனமா இரு. எனக்கு நேரமாச்சி! உன்ன அடுத்தது எப்ப பாக்கப்போறனு தெரியாது. அந்த இல்லம் கொஞ்சம் தூரமா இருக்கும்னு சொன்னான். நான் செல்போனும் கொண்டு போகப் போறதில்ல. முடிஞ்சா வாரத்துக்கு ஒரு லெட்டர் போடு. நீ எழுதலைனாலும் நான் எழுதுவேன். எனக்கு வேற வேலை ஒண்ணும் பெருசா அங்க இருக்காது" என்று சிறிது அமைதிகாத்தார் துக்கத்துடன்.

அமைதி ! ஆழ்ந்த அமைதி ! சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நீர்நிலையில் ஒரு சிறு கல்வீசினால் சிறிது அதிர்வடைந்து , அக்கலினை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் அதே அமைதியுடன் பயணத்தைத் தொடரும் நீரினைப் போன்று பொறுமை நிலையினை அடைந்தார் செல்லையா. "ராமசாமி ! நான் கிளம்புறேன் இந்த நாயை எனக்காகவும் சேர்த்து பார்த்துக்கோ ! நான் போறேன் " என்று வாக்கியத்தை முடித்தும் முடிக்காமலும் தனது ஊன்றுகோலினை எடுத்துக்கொண்டு மெதுவாய் நடந்தார். ராமசாமி ஒன்றும் செய்ய இயலாதவராய் வாயடைத்து செல்லையாவை பார்த்துக்கொண்டிருந்தார். செல்லையாவின் உடலின் தளர்ச்சி நடையிலும் , மனதின் தளர்ச்சி நடையின் வேகத்திலும் தெளிவாய் தெரிந்தது. இருவருக்கும் நடுவில் அந்த நாயும் தூரலில் நனைத்தவாறே செல்லையாவுக்கு விடைகொடுத்தது.

இளமையில் வறுமை , தனிமை இரண்டும் கொடுமையிலும் கொடுமை. ஆனால் முதுமையில் அவை ஒருவரை நடைபிணமாய் உலவ வைக்கும் ஒரு சித்ரவதை. பிறவியிலே பார்வையற்றவனை விட இடையில் பார்வை இழந்தவன் பெரிதும் பாதிக்கபடுவதைபோல முதியவர்களின் தனிமை பலகாலம், பலவாறாய் பேசித் திரிந்தவனை ஊமையாய் வாழ வற்புறுத்தும் அடக்குமுறை.



மாதங்கள் கடந்தன. இருவரும் தங்களது தனிமைச் சிக்கலுக்கு கடிதங்கள் மூலம் கொஞ்ச கொஞ்சமாய் சிக்கெடுத்துக் கொண்டிருந்தனர் . ஆனால் கடந்த மூன்று வாரங்களாய் செல்லையா அனுப்பிய கடிதங்களுக்கு ராமசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. மூன்று வாரங்களில் ஐந்துமுறை தொலைப்பேசியில் அழைத்தும் பார்த்தார். யாரும் எடுக்கவில்லை. " என்ன ஆயிற்று ராமுவுக்கு ?" என்று மீண்டும் மீண்டும் தன்னுள் புலம்பிக்கொண்டிருந்தார். அவருடைய அன்றாட வேலைகள் பெரிதும் தடைபட்டன. பொதுவாக ராமசாமியிடமிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் கடிதம் வருவது வழக்கம். அடுத்த புதன்கிழமைக்காக ஆவலோடு காத்திருந்தார். ஆனால் இவ்வாரம் செவ்வாய்கிழமை அன்றே தபால்க்காரரின் ஸ்கூட்டர் ஒலி. அறையில் இருந்து ஒரு வித பதட்டத்துடன் ஓடோடி வந்தார் அவரால் முடிந்த வேகத்தில். கடிதத்தை கண்டார் பரவசத்தோடு. பிரித்துப்படிக்க தொடங்கினார்.
"அன்புள்ள செல்லையாவுக்கு,
"என்னப்பா ! நல்ல இருக்கியா ! மன்னிச்சுக்கோ கொஞ்ச அவசர வேலையா மகனை பாக்க பெங்களூர் போயிருந்தேன். அதனால உனக்கு லெட்டர் போட முடியல. அப்புறம் எப்படி இருக்கிற ? மூட்டு வலி எப்படி இருக்குது ? அங்க சாப்பாடு சவுரியம்ல எப்படி ? வேலையெல்லாம் சுலபம் தானே ? அப்பப்போ வெளியிலே சுற்ற விடுவாங்களா ? என்னடா இவன் இல்லத்தைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேக்குறன்னு யோசிகிறையா ? விஷயம் இருக்கு . இன்னும் இரண்டு வாரத்துல நானும் அங்க நிரந்தரமா வந்துடுறேன் செல்லையா. கோபப்படாதே ! இது நல்ல யோசிச்சி எடுத்த முடிவு தான். என் பையனுக்கு இதுல விருப்பம் இல்ல. அப்புறம் நான் பெங்களூர்கு போய் விஷயத்தை சொன்னதும் அவன் புரிஞ்சிகிட்டான். இது நான் எனக்காக எடுத்துகிட்ட முடிவு . இப்போதெல்லாம் தனியா இருக்க முடியறது இல்ல :-). என் பையன் கூட உன்னையும் என் வீட்டிலயே வச்சிக்க வேண்டியது தானேன்னு கேட்டான் . ஆனா உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும். அதனால அதையும் சொன்னேன். இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு செல்லையா. இனி மேல் நாம ரெண்டு பெரும் தனிமரம் இல்ல. அப்புறம் வரும் போது நம்ம "நாயையும்" கூட்டிட்டு வரலாம்னு ஒரு நெனப்பு .என்ன சொல்றே ? மற்றபடி இப்போதைக்கு தயாராகுறதுக்கு உண்டான வேலையில இருக்கிறேன். இன்னும் 12 நாட்களில் உன்னை சந்திக்கிறேன்.
இப்படிக்கு ,
ராமு.
என்று முடித்திருந்தார். கடிதத்தின் கடைசி வரியினை வாசித்து முடிக்கும் போது செல்லையாவின் கண்களில் ஆனந்தமும்,வருத்தமும் கலந்த இரண்டு நீர் துளிகள் காகிதத்தில் வீழ்ந்து கரைந்து படர்ந்தது. பரவசத்துடன் வானம் நோக்கி அண்ணார்ந்து பார்த்தார் எங்கோ தூரத்தில் ஒரு ரயில் நிலையத்தில் இரு முதியவர்கள் அமர்ந்துகொண்டு மெல்லிய தூரல்களின் நடுவே தண்ணீர் அருந்திகொண்டிருக்க அருகே ஒரு நாய் பொறுமையை ஒரு பிஸ்கட்டினை சுவைத்துவிட்டு இருப்பது செல்லையாவின் கண்நீர்த்திவளைகளில் புகுந்து மனக்கண்களில் தெரிந்தது. Download As PDF