Monday, March 8, 2010

தெய்வக்குற்றம்

இடம் :- பெங்களூர்
நேரம் :- நள்ளிரவு 2 மணி.
கிழமை :- வெள்ளி

எங்கோ "கியாங் கியாங் " என்று அலறிய ஒரு குழந்தையின் குரல் என்னை அதிர்ச்சியோடு எழுப்பியது. எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க , ஒரே கும் இருட்டு. அக்குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க சிறிது தூக்க கலக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வர , அக்குரல் ஒரு பூனையுடையது என்பதை எனது மூளை உரைக்க அமைதியாக மீண்டும் படுத்துக்கொண்டேன்.அருகில் இருந்த கைபேசியில் நேரத்தை நோக்க அது தனது விரலை "இரண்டு" என்று காட்டியது. எதிரே இருந்த ஜன்னலின் சிறு துவாரத்தின் வழியாக தெரு விளக்கின் கூரிய ஒளி என் கண்ணைத் தாக்கியது. அவ்வொளி என் மனதிற்குள் ஊடுருவி என் எண்ணங்களை நாகர்கோவிலில் ஒரு தெரு விளக்கின் கீழே கொண்டு சென்றது. தெரு விளக்கும் , அவ்வெளிச்சமும் எனது வாழ்வில் சில மறக்கமுடியாத மற்றும் மறக்கநினைகின்ற தருணங்களில் ஆதாரமாய் விளங்குகின்றது. அன்றொரு இரவிலும் வாழ்வின் ஒரு மறக்க நினைக்கின்ற சம்பவம் நிகழ்ந்தது
இரவு மணி 11 . நானும், நண்பன் ரங்குவும் அவனது வீட்டின் எதிரே இருக்கும் தெருவிளக்கின் அடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம் . 10 ம் வகுப்பு தமிழ் தேர்வுக்குத் ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தோம். தீடீரென்று ரங்கு "கலகல" வென சிரித்தான். நானோ அரைத் தூக்கத்தில் சுவரில் முட்டி முட்டி படித்துக்கொண்டிருந்தேன். அவனது சிரிப்பு என்னை உலுக்க அவனிடம் "லேய் ! என்னடே சிரிக்க?" என்றேன். "அது ஒண்ணுமில்ல இங்க புக்ல ஒண்ணு போட்ருக்கு" என்றான். "சிரிகிறதுக்கு தக்கன என்னடே இருக்கு" என்றேன். "அம்பேத்கர் சின்ன வயசுல தெரு விளக்குக்கு கீழ இருந்துதான் படிச்சாராம்." என்று சொல்லு மீண்டும் சிரித்தான். இதுல சிரிகிறதுக்கு ஒண்ணும் இல்லையே? " என்றேன். "அவரு தெருவிளக்கில இருந்து படிச்சாருன்கிற விஷயத்தையே நாம தெருவிளக்குக்கு கீழே இருந்து தான் படிச்சுகிட்டு இருக்கோம்" என்று கூற எனக்கும் பலமாக சிரிப்பு வந்தது. " அப்போ ! நம்மளும் ஒரு நாள் அம்பேத்கர் மாதிரி பெரிய ஆளா வருவோம்கிற " என்றேன். சிறிது உரையாடலுக்குப்பின் மீண்டும் படிக்கத் தொடங்கினோம். நான் எனது அரைத்தூக்கத்தோடு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு ரங்கு சொன்ன கூற்று மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. "நாமளும் தெருவிளக்குல படிக்கிறோம் ! அம்பேத்கரும் தெருவிளக்குல படிச்சார்!" என்னை ஒரு எண்ணம் உந்தித் தள்ளி உலுக்கியது. "வருடங்கள் மட்டுமே முன்னேறி இருக்கின்றன ! மக்களின் வாழ்க்கைத் தரம் தேங்கி பின்தங்கி இருக்கிறது இன்றும் !". எவ்வளவு பெரிய கருத்தினை விளையாட்டாக சொல்லிவிட்டான் ரங்கு" என்று எண்ணிக் கொண்டிருக்கையில் எனது அரைத்தூக்கம் ஆவியாய் பறந்தது. வினாடி முள் வேகமாக ஓடியது. வீட்டின் முதல் மாடியில் இருந்து ஒரு keyboard கதறும் ஒலி ஒலித்தது. தெருவே அமைதியாக இருந்ததால் keyboard இன் ஒவ்வொரு ஒலியும் துல்லியமாய்க் கேட்டது. உடனே ரங்கு " லேய் ! மதியக்கா ! அவங்க கச்சேரியை ஆரம்பிச்சிடாங்க இனி தமிழ் படிப்பு தடம்புரளப் போகுது" என்றான். நான் எழுந்து மாடி ஜன்னலைநோக்கி "மதியக்கா ! கொஞ்சம் அடக்கி வாசிங்க ! நாங்க இங்க படிக்கிறோம்ல" என்று கூவினேன். அக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து " அதிகம் கதைக்காம படிங்க ! இன்னும் கொஞ்ச நேரத்துல நிறுத்திடுவன்" என்றார். "நாங்க கதைக்கிறது இருக்கட்டும் உங்க கானத்த பாத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு கழுதை வந்து கனைக்கப் போகுது " என்று கூற மேலிருந்து keyboard ஒலி மட்டுமே பதிலாய் ஒலித்தது.
"மதியழகி!" ரங்குவின் வீட்டின் அருகே இருக்கும் வீட்டின் மேல் மாடியில் சமீபத்தில் குடி புகுந்திருக்கும் ஒரு இலங்கைத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதைவிட அக்காவின் தமிழ் மிகவும் இனிமை . அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அவரிடம் சென்று அடிக்கடி தமிழில் பேசுவதுண்டு. சிறு குழந்தைகளுக்கு tuition சொல்லிக் கொடுப்பதை வேலையாய் கொண்டவர். இரவு நேரங்களில் keyboard மூலம் பலபேருக்கு இன்ப சித்திரவதைக் கொடுப்பவர்,குறிப்பாக எனக்கும் ரங்குவுக்கும். அவரை கிண்டலாக "புலியக்கா" என்று அழைப்பதுண்டு. அவரிடம் நான் அடிக்கடி கேட்கும் கேள்வி "அக்கா ! நீங்க இலங்கை ஆர்மி சப்போர்ட்டா ? இல்ல LTTE சப்போர்ட்டா ?" என்பது தான். அக்கேள்விக்கு அவர் ஒருமுறைகூட பதில் கூறியதில்லை. சிரித்தவாறே சென்று விடுவார் . அன்றும் அக்கேள்வியை வினவும் சூழ்நிலை வந்தது. பொதுவாக விளையாட்டு வினையாகும் என்பது கூற்று. ஆனால் எனது ஒரு கேள்விக்கணை ஒருவரின் வாழ்வில் விளையாடப்போகிறது என்பதை நான் சற்றும் அறிந்திருக்கவில்லை.
மதியக்கா keyboard வாசித்து முடித்துவிட்டு கீழிறங்கி எங்களை நோக்கி வந்தார். "என்ன ! ரெண்டு பசங்களும் அம்பேத்கர் ஆம்லேட் ன்னு கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் " என்றார். " என்னக்கா தூங்கலையா ! மணி 12 " என்றேன். " எனக்கு உறக்கம் வரேல்ல ! நாளைக்கு காலைல tuition இல்ல ! அதனால நல்லா கிடந்து உறங்கலாம். " என்றார். நான் மீண்டும் எனது கிண்டலை ஆரம்பிக்க "அக்கா ! நீங்கள் எப்போ தான் இப்படி torture பண்றத நிறுத்தப்போறீங்க" என்று கேட்டேன். அவர் " வாயை மூடிட்டு படி " என்று செய்கை செய்தார். அவ்வுரையாடல் தொடர்ந்து கொண்டேயிருக்க , எங்கள் தெருவின் ஆஸ்தான இராப்பிச்சைக்காரர் "கஞ்சி" என்பவர் எதிர்வீட்டின் திண்ணையில் அமர்ந்துகொண்டார். அவருக்கு "கஞ்சி" என்று பெயர் வர காரணம் இரண்டு. ஒன்று அவருக்கு பிடித்த உணவு "கஞ்சி" வேறு எதைக்கொடுத்தாலும் வாங்கமாட்டார். இரண்டு "கஞ்சி போட்ட காட்டன் சட்டை போல விறைப்பாக நடப்பார். அன்றைய வருமானத்தை வரவு கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்.
"அப்புறம் எப்படிடா பரீட்சைக்கு ஆயத்தமாகுறீங்க ? எவ்வளவு எதிர்பார்க்கலாம் " என்றார் மதியக்கா. " வர்றது தான் வரும்கா" என்றேன். "அக்கா ! நீங்க இலங்கை ஆர்மி சப்போர்ட்டா ? இல்ல LTTE சப்போர்ட்டா ?" என்று கேட்க "டேய் ! உனக்கு என்னடா வேணும் " என்று சிறிது கோபமாக கேட்க ,"இல்லக்கா ! அடிக்கடி அங்க பாம் வெடிக்கும்னு நியூஸ்ல பாத்திருக்கேன். அப்போ ஸ்கூல் அடிக்கடி லீவ் வரும்ல " என்று விளையாடக் கேட்க ," டேய் ! அங்க பலபேர் உயிர் போகுது உனக்கு லீவ் பெருசா தெரியுதா !" என்று கோபப்பட்டார். " சரி ! இப்ப ரோடுல ஒரு ஆம்புலன்ஸ் அலாரம் அடிச்சிகிட்டே வேகமா போகுது ! நீ அத பார்த்த என்ன நினைப்பாய்" என்று கேட்டார். நான் ரங்குவைப் பார்த்து சிறிது குழப்பத்துடன் " கொஞ்சம் பதட்டமா இருக்கும்கா " என்று கூறும் போதே எனது மனக்கண்ணில் அக்காட்சி படர உண்மையில் பதறினேன். " எங்க ஊர்ல எப்பவுமே அப்படிதான் பல ஆம்புலன்ஸ் போய்கிட்டே இருக்கும்" என்று கூறினார். அவர் சொல்ல முயலும் விஷயத்தின் வீரியத்தை உணர்ந்தேன். " இப்ப இந்த தெருவுல இராணுவவண்டியும், பீரங்கியும் போய்கிட்டே இருந்தா நீ என்ன பண்ணுவே ?" என்று தனது இரண்டாம் கேள்வியை மிக வலிமையாய் கேட்டார். "ரொம்ப பயமாயிருக்கும் ! நான் வீட்டவிட்டு வெளியவே வரமாட்டேன்" என்றேன். "இந்த நிலைமை தான் எங்க ஊர்ல எப்பவுமே" என்று கூற அவர் காதுகள் சிவந்து , கண்களில் நீர் ஊறுவதைக் காணமுடித்தது. மேலும் தான் படித்து கொண்டிருந்த பள்ளியில் ஒருமுறை வெடிகுண்டு வீசப்பட்டதை நினைவுகூர்ந்தார். "நான் புலியும் இல்ல இராணுவவும் இல்ல சாதாரண தமிழ் மக்கள் அவளோ தான். அங்க எம்மிட மக்கள் ரொம்ப கஷ்டபடுறார்கள் " என்று கூறி முடிக்கும் தருவாயில் அவரது விரல்கள் நடுங்குவதை கண்டேன். கண்கள் பன்மடங்கு விரிந்தன. பற்களை பலமாக கடித்துக்கொண்டார். கைகளும்,கால்களும் கடுமையாக இழுக்க ஆரம்பித்தது. "காக்கா வலிப்பு (பெயர் காரணம்?) " அவரைக் கடுமையாக ஆட்கொண்டது.
"அக்கா! என்ன ஆச்சு " என்று பதற்றத்துடன் அக்காவின் அருகில் நானும் ரங்குவும் செய்வதறியாது துடிக்கும் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தோம். இதனை நிதானமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கஞ்சி " தம்பி! அந்த இரும்பு பாக்ஸ் எடுத்து கைல குடு " என்றார். நாங்கள் அருகில் இருந்த geometry பாக்ஸ் எடுத்து அவரின் கைகளில் திணித்தோம். மாடியிலிருந்து மதியக்காவின் அம்மா கீழே கேட்ட சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தார். "எந்த தெய்வகுத்தமோ ? என்ற பிள்ளை இப்படி கஷ்டபடுதே என்று அலறிக் கொண்டே மதியக்காவின் அருகில் அமர்ந்து அவருடைய கடிக்கும் பற்களின் நடுவில் விரல்களை திணித்தார். இவ்வாறு செய்ததால் அவருடைய பற்களால் ஏற்படவிருந்த வாய்க்காயம் தடுக்கப்பட்டது.. மெதுவாக அக்காவின் வலிப்பு நிற்க ஆரம்பித்தது. அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. நிதானத்திற்கு வந்து மெதுவாக எழுந்து வீட்டிற்கு சென்றார். நானும்,ரங்குவும் அதிர்ச்சியில் உறைந்தோம். "என்னல ! இப்படி ஆயுடுச்சி " என்றேன். ரங்கு ஒன்றும் சொல்லாமல் அமைதிகாத்தான்.
மறுநாள் மதியக்காவுடன் பேசியபோதுதான் விஷயம் தெரிந்தது. எப்போதெல்லாம் அவருடைய ஊர்பற்றிய பேச்சி வரம்புமீறி போகிறதோ , அப்போதெல்லாம் அவருக்கு இவ்வாறு ஏற்படுமாம். அதனால்தான் பெரும்பாலும் அப்பேச்சினை தவிர்க்கமுயல்வார் என்பதும் தெரியவந்தது. தற்போது செய்திகளில் வரும் இலங்கைத் தமிழர்கள் குறித்த செய்திகளைக் காணும்போது அவர்களின் நிஜநிலையை அறியமுடிகிறது . மதியக்கா கேட்ட அந்த இரண்டு கேள்வியின் ஆழம் இன்று விளங்குகிறது. தற்போது மதியக்கா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாய் வேலைபார்த்துவருகிறார் மேலும் தெய்வம் செய்த குற்றத்திற்காக இன்றும் முதிர்கன்னியாய் வாழ்கிறார் மதியக்கா.
தலையணை அருகே இருந்த கைபேசி அதிர "மணி காலை 8 :30 !". இரவு அந்த நினைவுகளுக்குப்பின் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். எழுந்து பார்க்கையில் எனது கண்களில் வழிந்தோடிய கண்ணீரின் தடம் தெரிந்தது. அதன் உண்மையான அர்த்தம் புரிந்தவனாய், வேறேதும் செய்ய இயலாதவனாய் , அமைதியாய் அலுவலகத்திற்கு ஆயத்தமானேன் .

பி.கு : "கால் கை வலிப்பு " என்பது மருவி கருகி "காக்கா வலிப்பு" என்று ஆகிவிட்டது Download As PDF